அவரைக்காய் உண்ணச் சுவையாகவும், மிகுந்தச் சத்துள்ளதாகவும் இருக்கிறது. இதில் புரதச் சத்தும், நார்ச்சத்தும் அதிகமாகக் காணப்படுகிறது. இக்கொடியில் வெளிர் நீல நிறம் அல்லது வெண்ணிற பூக்கள் மலரும். அவரையில் பல வகைகள் உண்டு. இச்செடி இந்தியாவில் இருந்தே பிற நாடுகளுக்குப் பரவியதாகக் கருத்தப்படுகிறது. அவரையில் பல வித நோய்கள் தோன்றினாலும் துரு நோயால் 3 – 36 சதம் வரையில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. அவரையை தாக்கும் துரு நோயை பற்றியும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் காண்போம்.
நோய்க்காரணி
இந்நோய் யூரோமைசிஸ் ஃபாசியோலை என்ற ஒரு வகைப் பூஞ்சையால் ஏற்படுகிறது. இந்நோய்க்காரணி, நீண்ட வாழ்க்கைச் சுற்றுள்ள துருப்பூசணம் ஆகும். பூசணத்தின் எல்லாப் பருவங்களும், அவரைச் செடியிலேயே தோன்றும் .
நோயின் அறிகுறிகள்
இந்நோய் பெரும்பாலும் இலைகளை மட்டுமே தாக்கக்கூடியது. சில வேளைகளில் இலைக் காம்புகளையும், தண்டுப்பகுதியையும் தாக்கும். அவரைக் காய்களையும் இந்நோய் தாக்கக்கூடியது. வித்துக்கூடுகள் இலைகளின் இருப்பரப்பிலும் தோன்றும். ஆனால் பெரும்பாலான வித்துக்கூடுகள் இலைகளின் அடிப்பரப்பில் தான் தோன்றும். துரு வித்துக்கூடுகள் முதலில் வெண்மை நிறத்தில் நுண்ணியப் புள்ளிகளாக, இலைப்பரப்பிலிருந்து சற்று மேலெழும்பி, பருக்கள் போல் தென்படும். நாளடைவில் அவை விரிவடைந்து, சுமார் 2 மி.மீ விட்டத்தைக் கொண்டும் சிகப்பு கலந்து பழுப்பு நிறமாகவும் மாறும். யூரிடியல் பருவத்தைத் தொடர்ந்து, அதே யூரிடோ வித்துக்கூடுகளிலிருந்து டீலியோ வித்துக்கள் தோன்றும். ஆகவே வித்துக்கூடுகள் கரும்பழுப்பு அல்லது கருமை நிறத்தில் தென்படும்.
நோய்ப் பரவும் விதமும் பரவுவதற்கு ஏற்ற காலநிலைகளும்
இந்நோய் பெரும்பாலும் காற்றினால் பரவுவுகிறது. வருடம் முழுவதும், ஏதாவது ஒரு வகை அவரைப்பயிர், பயிராகிக் கொண்டேயிருப்பதால், நோய்க்காரணியும் தொடர்ந்து இருந்துக் கொண்டேயிருக்கும். காற்றில் ஈரப்பதம் அதிகமாகக் காணப்படும் போது, நோயின் தீவிரம் அதிகமாகக் காணப்படும். காலநிலை சாதகமாக இருக்கும் போது, நோய்த் தாக்கிய 5 நாட்களிலேயே துரு வித்துக்கூடுகள் தோன்றக்கூடும். பகல் வேளை வெப்பநிலை 340 செ.கி-க்கு அதிகமாக இருக்கும்போது, நோய் தோன்றுவதில்லை. குறைந்த வெப்பநிலை (15 – 240 – செ.கி), அதிக ஈரப்பதம், மேக மூட்டத்துடன் கூடிய, மப்பும், மந்தாரமுமான நிலை, இரவு வேளைகளில் பனி பெய்தல் போன்றவை பூசண வித்துக்கள் முளைக்கவும், நோய் தோற்றுவிக்கவும் ஏற்றவை.
இந்நோய் விதை மூலம் பரவுவதில்லை.
நோய்க்கட்டுப்பாடு
உழவியல் முறைகள் : (i) நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் நோய்த் தாக்கிய இழைகள், பயிர்ப் பாகங்கள் போன்றவற்றை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும். (ii) செடிகளுக்கு இடையே சரியானபடி இடைவெளி விட்டுப் பயிரிட்டு, வயல் வெளிகளில் காணப்படும் களைச் செடிகளை அழித்து, வயலில் ஈரப்பதம் அதிகமாக இல்லாதவாறு பராமரிக்க வேண்டும். (iii) பயிர்ச் சுழற்சி முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
மருந்து சிகிச்சை
ஏக்கருக்கு 10 கிலோ வீதம், கந்தகத் தூளைத் தூவியோ அல்லது நனையும் கந்தகம் – 800 கிராம் அல்லது மான்கோசெப் – 400 கிராம் அல்லது டக்கோனில் – 250 கிராம் வீதம், 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, இலைகளின் இருப்பரப்புகளும், நன்கு நனையுமாறு, நோயின் அறிகுறி தென்பட்டவுடனேயேத் தெளிக்க வேண்டும். தேவைக்கேற்ப 2 – 3 முறைத் தெளிக்க வேண்டும்.
நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட இரகங்கள்
பின்டோ, கிரேட் நார்தெர்ன், ஸ்மால் வைட், ரெட் கிட்னி, ப்ளாக் பீன் போன்ற இரகங்கள் இந்நோய்க்கு ஓரளவு எதிர்ப்புத் திறன் கொண்டவை ஆகும்.
கட்டுரையாளர்: கு.விக்னேஷ், முதுநிலை வேளாண் மாணவர் -தாவர நோயியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் – 608002. தொடர்பு எண்: 8248833079 மின்னஞ்சல் – lakshmikumar5472@gmail.com