Vivasayam | விவசாயம்

பருத்தியில் வெர்டிசிலியம் வாடல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

பருத்தி ஒரு பணப் பயிராகும். பருத்தி இழைகள் மட்டுமல்லாமல் அதன் முழுச் செடியும்  பல்வேறு வகையில் பயன்படுத்தப்படுகிறது. பருத்தியில் வெர்டிசிலியம் வாடல் நோய் மிக முக்கியமானது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் அதிகமாகக் காணப்படும் இந்நோய், இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பரவலாகக் காணப்படுகிறது. இந்நோயினால் பருத்தி மகசூல் குறைவதோடு, பருத்தி இழைகளின் தரமும், பலமும் குறைகிறது. தீவிர நிலையில் இந்நோய் 100 சதவீத உற்பத்தியையும் பாதிக்கக்கூடியது. பருத்தியில் வெர்டிசிலியம் வாடல் நோயும் அதன் மேலாண்மை முறைகள் பற்றியும் காண்போம்.

நோய்க்காரணி

            இந்நோய் வெர்டிசிலியம் டாலியே என்ற ஒரு வகைப் பூசணத்தால் ஏற்படுகிறது. இப்பூசணத்தின் இழைகள் நிறமற்றும், குறுக்குச் சுவர்களைக் கொண்டும், திசுவறைகளின் இடையேயும், திசுவறைகளின் ஊடேயும் காணப்படும்.

நோயின் அறிகுறிகள்

இந்நோய் விதைத்த சுமார் 3 மாதங்களுக்குப் பின்னர், பயிர் பூத்துக் காய்ப் பிடிக்கும் பருவத்தில் தான் பெரும்பாலும் தோன்றும். நோயின் முதல் அறிகுறி, இலைகளில் பலவித சுருக்கங்கள் காணப்படுவதோடு, இலைகளின் விளிம்பிலும் குறிப்பாக நரம்புகளின் இடைப்பகுதியிலும் இளம் மஞ்சள் நிறமாக மாறும். நாளடைவில் இப்பகுதிகள் பழுப்பு நிறமாக மாறிக்  கரிந்துவிடும். பின்னர் அந்த இழைகள் முழுவதும் கரிந்து உதிர்ந்துவிடும். நோயின் அறிகுறிகள் முதலில் செடியின் அடிப்பாகத்திலுள்ள இலைகளில் தோன்றி, பின்னர் மேற்ப்பாகத்திலுள்ள இலைகளும் தாக்கப்பட்டு, பெரும்பாலான இழைகள் உதிர்ந்து விடும். தாக்கப்பட்டச்  செடியின் நுனிப்பாகத்தில் மாத்திரம் சில, சிறுத்துப்போன, வெளிறிய இலைகள் காணப்படும். தாக்கப்பட்டச் செடிகளிலுள்ளப் பூக்களும், பிஞ்சுக்காய்களும் உதிர்ந்துவிடும். ஆனால் நோய்த் தாக்கியச் செடிகள் முழுவதும் கரிந்து, மடிந்து விடுவதில்லை.

நோயுற்றச்  செடியின், தண்டின் மேல்பட்டையை உரித்துப்பார்த்தால் இளம் சிவப்பு அல்லது பழுப்பு நிறக்கோடுகள் அல்லது கீற்றுக்கள், வேர், தண்டு, இலைக்காம்பு ஆகிய பாகங்களில், விட்டுவிட்டுத் தென்படும். தண்டுப்பாகத்தை நீளவாக்கில் பிளந்துப்  பார்த்தால், சாற்றுக்குழாய்த் தொகுதியிலும், இவ்வாறான இளம் சிவப்பு அல்லது பழுப்பு நிறக் கீற்றுக்கள் தொடர்ச்சியாகவோ அல்லது விட்டுவிட்டோ, தண்டுப் பாகத்திலும், வேர்ப்பாகத்திலும் தென்படும்.

நோய்ப் பரவும் விதமும் பரவுவதற்கு ஏற்ற காலநிலைகளும்

இந்நோயானது பெரும்பாலும், நீண்ட காலம் முளைப்புத்திறன் மாறாமல் நிலத்தில் கிடக்கும் நுண்ணிய இழை முடிச்சுக்கள் மூலமாகப் பரவக்கூடியது. விதைகளின் மேலுள்ள பஞ்சின் மேல் ஒட்டிக்கொண்டிருக்கும் இழை முடிச்சுக்கள் மூலமாகவும் நோய் பரவக்கூடியது. வயலில் தாக்கப்பட்டச் செடியின் வேர்கள், நோய்த்  தாக்காத அடுத்துள்ளச் செடிகளின் வேர்களுடன் தொடர்பு கொள்ளும்போதும், நோய் பரவக்கூடும்.

இந்நோய் தக்காளி, கத்தரி, புகையிலை, சூரியகாந்தி, உருளைக்கிழங்கு, மிளகாய் போன்ற பல்வேறுப் பயிர்களையும் தாக்கக்கூடியது. நவம்பர் – டிசம்பர் மாதங்களில், வெளிப்புற வெப்பநிலை 15 – 200 செ.கி. இருக்கும்போது, நோயின் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். தழைச்சத்து அதிகமாக இடும்போது நோயின் தீவிரம் அதிகமாகக் கூடும்.

நோய்க்கட்டுப்பாடு

உழவியல் முறைகள்  :

  • நோய்த் தாக்காத வயல்களிலிருந்து, தரமான விதைகளை, விதைப்பதற்க்குத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அறுவடைக்குப் பின்னர் வயலில் காணப்படும் பாகங்களை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும்.
  • நோய்த் தாக்காத வேறுப் பயிர்களைக்கொண்டு, நீண்டகால பயிர் சுழற்சி செய்ய வேண்டும்.
  • நிலத்துக்குத் தழை உரங்களான, தொழு உரம், கம்போஸ்ட் போன்றவற்றை இடுவதால் நோய்க்காரணியை கட்டுப்படுத்தலாம்.

விதை சிகிச்சை மற்றும் மருந்து சிகிச்சை

(i) ஒரு லிட்டர் தண்ணீருக்கு கார்பன்டாசீம் – 1 கிராம் என்ற விகிதத்தில் கலந்து, நோய்த் தாக்கியச் செடிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ளச் செடிகளின் அடித்தண்டுப்பாகம் மற்றும் வேர்ப்பாகத்தைச் சுற்றியுள்ள மண் நனையுமாறு ஊற்ற வேண்டும்.

(ii) இளம் செடிகளின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க, விதைத்த 2 – 3 மாதத்தில், ஏக்கருக்கு பொட்டாஷ் 7.5 கிலோ மற்றும் யூரியா – 5 கிலோ என்ற விகிதத்தில் 400 லிட்டர் தண்ணீரில் கலந்து, செடிகளின் தழைப்பகுதியின் மேல் காலை வேளையில் தெளிக்க வேண்டும்.

நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட இரகங்கள்

சுஜாதா, சி.பி.எஸ்.156 போன்ற இரகங்களை இந்நோய் அதிகம் தாக்குவதில்லை.

Exit mobile version