பசுமைப் புரட்சியின் தாக்கத்தை இந்திய வேளாண்மையில் வெளிப்படையாகவே பார்க்க முடிந்தது. அதற்கான ஆதாரங்களாக இருப்பது புள்ளிவிவரங்கள். எனவே சில புள்ளிவிவரத் தரவுகளைப் பார்ப்போம்.
மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலகட்டத்தில் இந்தியாவின் தானிய உற்பத்தி 81 மில்லியன் டன்களாக இருந்தது. அதுவே பசுமைப் புரட்சிக்கு பின்பு தானிய உற்பத்தி அபரிமிதமாக இருந்தது. அதாவது, ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தில் 203 மில்லியன் டன்னும், பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தில் 212 மில்லியன் டன்களாக இருந்தது.
இதில் கோதுமையின் உற்பத்திதான் மிக அதிகம். மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் 11.1 மில்லியன் டன்னாக இருந்த கோதுமை உற்பத்தி, ஒன்பது மற்றும் பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தில் 72 மில்லியன் டன்களாக உயர்ந்தது. அதாவது இந்தியாவின் மொத்த தானிய உற்பத்தியில் கோதுமை 34% வகித்தது. இதே நெல் உற்பத்தியை பார்த்தால் அது மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் 35.1 மில்லியன் டன்னில் இருந்து ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தில் 87.3 மில்லியன் டன்கள் உயர்ந்துள்ளது.
பசுமைப் புரட்சிக்குப் பின் விவசாயிகள் பெரும்பாலும், அதிக உற்பத்தி தரும் விதைகளையே வாங்குகிறார்கள். அதாவது 1967ஆம் ஆண்டு இந்தியாவில் அந்த விதைகள் 1.66 மில்லியன் ஹெக்டெர் நிலத்தில் தான் நடப்பட்டிருந்தது. அதன்பின்னர் அது 78.4 மில்லியன் ஹெக்டர்களாக உயர்ந்தது. பசுமைப் புரட்சி நிலத்தினுள் கொண்டுவந்த மாற்றங்களை விட நிலத்திற்கு வெளியே கொண்டு வந்த மாற்றங்கள் ஏராளம். வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலைகள், இயந்திர உற்பத்தி நிறுவனங்கள், ரசாயன பூச்சிக்கொல்லி மற்றும் உர நிறுவனங்கள் பெருமளவு முளைக்க ஆரம்பித்தது. இதுவே நிறையத் தொழில்வளத்தையும் வேலை வாய்ப்புகளையும் பெருக்கியது.
பசுமைப் புரட்சிக்கு அடிப்படை தேவையாக இருந்தது நீர்பாசனமும் இயந்திரங்களும். இது இரண்டும் மக்களுக்குச் சென்று சேரும் வகையில் அரசு பார்த்துக்கொண்டது. 1951ல் 22.56 மில்லியன் ஹெக்டர்களாக இருந்த நீர்பாசன பகுதிகள், 2000ஆம் ஆண்டு வரையில் 94.7 ஹெக்டர்களாக உயர்த்தப்பட்டன. விவசாயிகள் மழையை மட்டுமே இருக்காமல் நிலத்தடிநீரையும் பயன்படுத்துவதற்கு வகைச் செய்யப்பட்டது. அதே போல, 30,000மாக இருந்த இந்தியாவின் டிராக்டர் எண்ணிக்கை 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்தியாவின் உணவுத் தேவையில் தன்னிறைவு அடைந்ததோடு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு அதிலும் லாபம் கிட்டியது. பொதுவாக எந்த ஒரு வளமாக இருந்தாலும் அதன் விலை அதன் இருப்பையும் தேவையையும் பொருத்தே அமையும். எடுத்துக்காட்டாக, இந்தியாவில் நெல் உற்பத்தி குறைவாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்வோம். அப்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும். அப்படிச் செய்யும் பட்சத்தில், அது வெளிநாட்டிலிருந்து கப்பலில் கொண்டுவரும் செலவில் ஆரம்பித்து உள்நாட்டு வரிகள் வரை அனைத்தும் அதை வாங்கும் வாடிக்கையாளர்களான நம் தலையிலே விழும். வெங்காய விலை உயர்வை நாம் கண்கூடாகப் பார்த்தவர்கள் தான். இதுவே ஒரு அடிப்படை உணவான, அனைத்து மக்களாலும் உண்ணப்படக்கூடிய அரிசி, கோதுமைக்கு இந்த நிலமை வந்தால் என்ன ஆகும்? இதுதான் 1943ஆம் ஆண்டு வங்காள பஞ்சத்தில் நடந்தது.
வங்காள பஞ்சத்தின்போது சுத்தமாக உணவு இல்லாமல் இல்லை. போதுமான அளவிற்கு உணவு இருந்துள்ளது என்பதே உண்மை. ஆனால் அது குறைவாக இருந்த காரணத்தினால் அதன் விலை உயர்ந்து, அடித்தட்டு மக்களால் அதை வாங்க முடியவில்லை. இந்த வகையில் பார்க்கும்போது பசுமைப் புரட்சி சாதித்துவிட்டது என்று சொல்லலாம். அதனால் தான் இன்று அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் நியாய விலைக் கடைகளில் இலவசமாக அரிசி கிடைக்கிறது.
புள்ளிவிவரங்களைப் பார்த்துவிட்டோம். இனி சில மன விவரங்களையும் பார்க்கலாம். ஒரு நெல் ரகத்தின் பெயரை தன் மகனுக்குச் சூட்டிய ஒரு விவசாயின் கதை…
-தொடரும்…
கட்டுரையாளர்: ர.சிவக்குமார், இளமறிவியல் வேளாண்மை இறுதியாண்டு மாணவர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மின்னஞ்சல்: aamorsk3210@gmail.com