அறிமுகம்
கழிவு சிதைப்பான் என்பது உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கரிம வேளாண்மை தேசிய மையத்தால் (National Centre of Organic Farming) தயாரிக்கப்பட்ட ஒரு நுண்ணுயிர் கூட்டமைப்பு ஆகும். இது பலவகை நற்பயனுள்ள நுண்ணுயிரிகளின் கூட்டமைப்பு ஆகும். இதை முதன்முதலாக 2004 ஆம் ஆண்டில் க்ரிஷன் சந்திரா என்ற அறிவியலாளர், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மாட்டின் சாணத்திலிருந்து நுண்ணுயிரிகளைப் பிரித்தெடுத்து உருவாக்கினார். கழிவு சிதைப்பான் ஒரு பாட்டில் (30 கிராம்) ரூ. 20 என்ற அளவில் கரிம வேளாண்மை தேசிய மையம் மற்றும் பிராந்திய கரிம விவசாய மையங்களால் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது; மேலும், அமேசான் (Amazon) செயலி வாயிலாகவும் பெற்றுக்கொள்ளலாம். ஒரு பாட்டில் கழிவு சிதைப்பானுக்கு, 30 நாட்களுக்குள் 10,000 மெட்ரிக் டன்கள் உயிர் கழிவுகளை சிதைக்கும் தன்மை உள்ளது. மேலும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலால் (Indian Council of Agricultural Research) அங்கீகரிக்கப்பட்டதாகும்.
கழிவு சிதைப்பானின் தேவைகள்
வளரும் நாடுகளில், பண்ணைக் கழிவு மேலாண்மை மற்றும் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை மிகவும் சவாலானதாகும். இந்தியாவில் வருடத்திற்கு 500 மில்லியன் டன் பயிர் கழிவுகள் உற்பத்தியாகின்றன. மேலும், 2015 ஆம் ஆண்டின்படி, இந்தியா சுமார் 62 மில்லியன் டன் நகராட்சி திடக்கழிவுகளை உருவாக்கியது. இதில் தோராயமாக 92 மில்லியன் டன் பயிர் கழிவுகள் ஒவ்வொரு ஆண்டும் எரிக்கப்படுகின்றன. இவ்வாறு எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபாடு, சுகாதாரப் பிரச்சனைகள் மட்டுமல்லாமல் புவி வெப்பமடைவதலையும் அதிகரிக்கிறது. எனவே, இந்த கழிவுகளால் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்க உரமாக்கல் (Composting) முறை பயனுள்ள நிலையான தொழில்நுட்பங்களில் ஒன்றாகும். இக்கழிவுகள், கழிவு சிதைப்பான் மூலம் மரபு உரமாக்குதல் (Conventional Composting) முறையைவிட விரைவாக உரமாக மாற்றப்படுகிறது.
இந்தக்கழிவு சிதைப்பானை 1000 லிட்டர்/ஏக்கர் பயன்படுத்துவதன் மூலம் 21 நாட்களுக்குள் அனைத்து மண் வகைகளின் (அமில மற்றும் காரத்தன்மை) உயிரியல் மற்றும் இயற்பியல் பண்புகள் மாறும்; வியக்கத்தக்க வகையில், ஆறு மாதங்களுக்குள் 1 ஏக்கர் மண்ணில் 4 லட்சம் வரை மண்புழு உற்பத்தியாகவும் உதவுகிறது. மேலும், அனைத்து வகையான விவசாய மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு ஒரு உயிரியல்பு வாய்ந்த சொட்டு நீர்ப்பாசனம் (Drip irrigation), உயிர் உரங்கள் (Biofertilizer), உயிரியல் கட்டுப்பாட்டு முகவர்கள் (Biocontrol agents), உயிரியல் பூச்சிக்கொல்லி (Biopesticide), விதை நேர்த்தி (Seed treatment), மண்வள புத்துயிர் (Soil Health Retriever), தெளித்தல் (Foliar spray) போன்ற பல்வேறு வழிகளில் இதைப் பயன்படுத்தலாம்.
கழிவு சிதைப்பான் – பெருமளவில் பெருக்கும் நெறிமுறை
கழிவு சிதைப்பான், விவசாயிகளுக்கு நடைமுறையில் பொருந்தக்கூடிய ஒரு எளிய நுட்பத்தால் பெருமளவில் பெருக்கலாம். இந்த நெறிமுறை 2015 ல் க்ரிஷன் சந்திரா மூலம் தரப்படுத்தப்பட்டது.
- 200 லிட்டர் தண்ணீரைக் கொண்ட ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் 2 கிலோ வெல்லம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர், ஒரு பாட்டில் கழிவு சிதைப்பான் (30 கிராம்) எடுத்து, அதன் அனைத்து உள்ளடக்கங்களையும், வெல்லம் கரைசல் கொண்ட பிளாஸ்டிக் டிரம்மில் ஊற்ற வேண்டும்.
- டிரம்மில் கழிவு சிதைப்பானின் சீரான பரவலுக்காக ஒரு மர குச்சியை வைத்துக் கலக்க வேண்டும்.
- காகிதம் அல்லது அட்டை மூலம் டிரம்மை மூடிவிட வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு முறை அல்லது இரண்டு முறை கலக்கி விடவேண்டும்.
- 5 நாட்களுக்கு பின், டிரம்மில் உள்ள கரைசல் வெண்மையாக மாறும்.
விவசாயிகள், மேலே உருவான கழிவு சிதைப்பான் கரைசலைக்கொண்டு மீண்டும் கரைசல் தயாரிக்கலாம். மேலே செய்த கரைசல் 20 லிட்டருடன், 2 கிலோ வெல்லம் மற்றும் 200 லிட்டர் தண்ணீருடன் ஒரு டிரம்மில் வைத்தால், அடுத்த 7 நாட்களில் கழிவு சிதைப்பான் கரைசல் தயாராகிவிடும்.
விரைவான உரமாக்கலில் கழிவு சிதைப்பானின் பங்கு
கழிவு சிதைப்பான் கரைசலைக் கொண்டு உயிர் கழிவுகளை விரைவாக மக்க வைக்கலாம்.
- விவசாய கழிவுகள், சமையலறை கழிவுகள், மாட்டுச் சாணம் போன்ற 1 டன் உயிர் கழிவுகளை, 18 முதல் 20 செ. மீ. தடிமனான அளவில் தரையில் பரப்பவேண்டும்.
- கழிவு சிதைப்பானின் கரைசலைக் கொண்டு கழிவுகளை நனைக்க வேண்டும்.
- மேலே செய்த 2 செயல்முறையை மீண்டும் பின்பற்ற வேண்டும். 30 முதல் 45 செ. மீ. உயரம் வரை மேலே உள்ள செயல்முறைகளை செய்யலாம்.
- ஒவ்வொரு 7 நாட்களுக்கு ஒரு முறை குவியலை திருப்புதல் மட்டுமின்றி கூடுதலாக கரைசலைச் சேர்க்கவும்.
- உரம் தயாரிக்கும் முழு காலத்திலும் 60% ஈரப்பதத்தை பராமரிக்கவும்; தேவைப்பட்டால் மீண்டும் கரைசலைச் சேர்க்கவும்.
- உரம் 30 முதல் 40 நாட்களுக்குள் பயன்படுத்த தயாராகிவிடும்.
இந்த ஆரோக்கியமான உரமாக்கல் செயல்முறையைக் கொண்டு, உயர் கரிம கார்பன் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களும் கொண்ட உயர் தரமான உரம் பெற முடியும்.
இறுதிச்சுருக்கம்
கழிவு சிதைப்பான், தன்னுடைய பல்வேறு பயன்பாடுகள் காரணமாக கரிம கழிவு மேலாண்மை, பயிர் உற்பத்தி மற்றும் மண் ஆரோக்கியத்தை புத்துயிர் பெற ஒரு மகத்தான திறனைக் கொண்டுள்ளது. இது ஒரு சுற்றுச்சூழலுக்கு உகந்த, செலவு குறைந்த மற்றும் நன்மை பயக்கும் தயாரிப்பாகும். ஆகவே, இது தூய்மை இந்தியா இயக்கத்தின் (Swachh Bharat Mission) ஒரு பெரிய அங்கமாக செயல்பட வாய்ப்புள்ளது.
கட்டுரையாளர்கள்:
- த. கோகுல் கண்ணன், ஆராய்ச்சி மாணவர், சுற்றுச்சூழல் அறிவியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: gokul.t.kannan@gmail.com
- அ. ச. கோவேந்தன், ஆராய்ச்சி மாணவர், சுற்றுச்சூழல் அறிவியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: gveanthan@gmail.com