Vivasayam | விவசாயம்

கரும்பு பயிரைத் தாக்கும் இளங்குருத்துப் புழுவின் மேலாண்மை

கரும்பு, இந்தியாவின் மிக முக்கியமான பண‌ப்பயிராகும். கரும்பில் இளம் பருவத்தில் (3 மாதங்களுக்குள்) தாக்க கூடிய பூச்சிகளில் இளங்குருத்து புழு மிகவும் முக்கியமான பூச்சியாகும். கரும்பில், இளங்குருத்துப் புழுவானது 25 முதல் 30 விழுக்காடு அளவிற்கு சேதம் விளைக்கும்.   

தாக்குதலின் அறிகுறிகள்:

  •         இப்பூச்சியானது 1-3 மாத வயதுடைய இளம் பயிர்களை அதிகமாகத் தாக்கும். நிலமட்டத்திற்கு மேலே இளந்தண்டுகளில் பல சிறு துளைகள் குருத்தில் காணப்படும்.
  •         புழுக்கள் நிலமட்டத்தின் அருகில் உள்ள இளந்தண்டுகளை துளைத்து உள்ளே சென்று திண்பதால் நடுக்குருத்து காய்ந்து அழுகி துர்நாற்றம் வீசும். இதனை இழுத்தால் எளிதில் வந்துவிடும்.

வளர்ச்சி பருவங்கள்:

  •         முட்டை: முட்டைகள் கூட்டமாகக் சோகையின் அடிப்புறத்தில் 3-5 வரிசைகளாக 4-100 காணப்படும். இக்கூட்டங்கள் டைல்ஸ்கள் போன்று ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்திருக்கும். இது 4-6 நாட்களில் பொரித்து புழுக்கள் வெளிவரும்.
  •        இளம்புழு: இது பழுப்பு கலந்த வெண்மை நிறத்தில் 5 ஊதா நிறக் கோடுகளுடன் காணப்படும். தலை அடர் பழுப்பு நிறத்துடனும் 16-30 வாழ்நாள்களை கொண்டது.
  •         கூட்டுப்புழு: கூட்டுக்குள் செல்லும் முன் புழுவானது பயிரின் தண்டில் ஒரு பெரிய துளையிட்டு அதனை பட்டு நுால் கொண்டு மூடிவிடும். பின் நீண்ட கூட்டுக்குள் அடைந்திருக்கும்.
  •       அந்துப்பூச்சி: வெளிர் சாம்பல் பழுப்பு நிற பூச்சியில் கருப்பு நிற புள்ளிகள் முன் இறக்கைகளில் காணப்படும். பின் இறக்கைகள் வெண்ணிறத்தில் இருக்கும்.

பொருளாதார சேத நிலை: 15% வெண்கதிர் அறிகுறிகள்

மேலாண்மை முறைகள்

  • இளக்குருத்துப் புழுவின் எதிர்ப்பு இரகங்கலான, கோ 312, கோ 421, கோ 661, கோ 917 மற்றும் கோ 853 போன்றவகளை பயிரிடலாம்.
  • சாகுபடிப் பருவத்தில், டிசம்பர்–ஜனவரி முன்பட்டத்தில் பயிர் செய்தால் இளக்குருத்துப் புழுவின் தாக்குதலை குறைக்கலாம்.
  • புழு தாக்கப்பட்ட நடுக்குருத்துகளை சேகரித்து அழித்து விடவேண்டும்.
  • நடவு செய்த 3 நாட்கள் கழித்து காய்ந்த சோகையினை 10-15 செ.மீ உயரத்திற்கு பரப்பி நிலமட்ட மூடாக்கு ( Mulching) அமைக்க வேண்டும்.
  • மண்ணின் வெப்பத்தினைக் குறைக்க போதுமான நீர் பாய்ச்சுதல் மற்றும் ஈரப்பதத்தினை அதிகரிப்பது இளங்குருத்துப் புழுப் பெருக்கத்தினை தடுக்க இயலும்.
  • மண் அணைப்பதால் (45வது நாளில்) இளக்குருத்துப் புழுவின் தாக்குதலை குறைக்கலாம்.
  • இன‌க்கவர்ச்சி பொறியை 10 வீதம் ஒரு ஏக்கருக்கு, 45 செ.மீ உயரத்தில் வயலில் பொருத்த வேண்டும்
  • கிரானுலோசிஸ் வைரஸ்களை (GV) நடவு செய்த 35 வது மற்றும் 50 வது நாட்களில் தெளிக்க வேண்டும்.
  • ஒட்டுண்ணியான, ஸ்டர்மியோப்சிஸ் இன்பெரன்ஸ்ன் என்ற கிராவிட் பெண் பூச்சிக‌ளை வயலுனுள் (125 வீதம்/ஏக்கர்) விடலாம்
  • கார்டாப் ஹைட்ரொகுளொரைடு என்ற மருந்தினை (ai: 1 கிலோ / ஹெக்டர்) அடியுரமாக இட வேண்டும்.
  • குலொரன்ட்ரனலிபுரொல் 18. 5 EC என்ற மருந்தினை – 150 மிலி /ஹெக்டர் என்ற அளவில் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

கட்டுரையாள‌ர்கள்:

முனைவர்  செ. சேகர்#, கு. திருவேங்கடம்# மற்றும் சூரியா. ச*

#உதவிப் பேராசிரியர்கள் (பூச்சியியல் துறை), RVS வேளாண்மை கல்லூரி, தஞ்சாவூர்.

மின்னஞ்சல்: sekar92s@gmail.com

*முதுநிலை வேளாண் மாணவர், (பூச்சியியல் துறை), வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம், கிள்ளிகுளம், தூத்துக்குடி.

Exit mobile version