Vivasayam | விவசாயம்

சேறு இல்லாத நெல் நடவு – நெல் சாகுபடியில் ஒரு புதிய முன்னேற்றம்

தமிழ்நாட்டில் நெல் 2.04 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் 9.98 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் நெல் ஒரு முக்கிய உணவுப் பயிராக பயிரிடப்படுகிறது. மேலும் அரிசி தமிழ் நாட்டின் ஒரு பிரதான உணவு. நெல் வளர்ப்பிற்கு மழைபொழிவே  முக்கியமான நீர் ஆதாரமாக விளங்குகிறது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்லும் மழைபொழிவால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தே உள்ளது. மேலும் பயிருக்கு பிந்தைய வறட்சி காரணமாக பயிர் பாதியிலேயே கருகும் சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் பருவ நிலை மாற்றம் காரணமாக குறைந்த அளவு மழை பொழிவு ஏற்படுகிறது. இதனால் நீர் தேவையை குறைத்து பயிர் செய்வது இன்றி அமையாதது ஆகிறது. பொதுவாக நெல்லுக்கு தேவைப்படும் தண்ணீரில் 20 சதவீதம் தண்ணீர் சேறு அடிப்பதற்கு தேவைபடுகிறது. மேலும் சேறு அடிப்பதற்கு குறைந்தபட்சம் 10 நாட்களுக்காவது தண்ணீரை வயலில் தேக்கி வைக்க வேண்டும், இதனால் தண்ணீர் அதிக அளவில் வீணாகிறது. மேலும் இது காலவிரயத்தையும் ஏற்படுத்துகிறது அதுமட்டும் இல்லாமல்  சேறு அடிப்பதால் மண்ணின் அமைப்பு சிதைந்து மண்ணின் சத்துக்கள் வீணாகின்றன.

சேறு இல்லாத நெல் நடவுக்கு நிலத்தை தயார் செய்யும் தொழில்நுட்பங்கள்

முதலில் கிளைபோசேட் களைக்கொல்லியை ஒரு எக்டருக்கு 2 லிட்டர் என்ற அளவில் தெளித்து களைகளை கட்டுப்படுத்த வேண்டும். பிறகு புழுதி உழவு செய்ய வேண்டும் அதில் கொக்கி கலப்பை பயன்படுத்தவேண்டும். அதன் பிறகு லேசர் லெவேலெர் கொண்டு நிலத்தை சமன் செய்ய வேண்டும்.

அதன் பிறகு மண்ணை, நடவுக்கு 24 மணிநேரம் முன்பு ஈரப்படுத்தி நடவு செய்ய வேண்டும். கை நடவு செய்வதற்கு சற்று கடினமாக இருக்கும். இதனால் நெல் நடவு செய்யும் இயந்திரத்தை பயன்படுத்தலாம். இயந்திரத்தின் மூலம் நெல் நடவு செய்யும்போது ஒரு சென்டி மீட்டர் அளவிற்கு தண்ணீர் வயலில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் இது சரியான ஆழத்தில் நெல்லை நடவு செய்வதுடன் பயிர்களுக்கு இடையே சீரான இடைவெளியை ஏற்படுத்துகிறது. இதனால் களை எடுப்பதற்கு இயந்திரங்களை பயன்படுத்துவது எளிதாகிறது. மேலும் இது பயிர்களுக்கு இடையேயான போட்டியைக் குறைத்து சூரிய ஒளியை அதிக அளவில் எடுத்துக்கொள்வதை உறுதிப்படுத்துகிறது.

விதை அளவு

ஒரு ஹெக்ட்டருக்கு

  •         குறுகிய கால ( Short duration) பயிராக இருந்தால் 30 கிலோவும்
  •         நடுத்தர கால (Medium duration) பயிராக இருந்தால் 40 கிலோவும்
  •         அதிக நாள் (Long duration) பயிராக இருந்தால் 60 கிலோவும்
  •         ஒட்டு ரகமாக இருந்தால் 10 கிலோவும் தேவைப்படும்.

விதைக்கும் முன்பு விதை நேர்த்தி செய்தல்

  •         விதைகளை விதைப்பதற்கு முன்பு அதனை ஒரு சாக்கில் போட்டு, ஊறவைத்து அதன் பிறகு ஒரு இருட்டறையில் 24 மணி நேரத்திற்கு முளைக்க வைக்க வேண்டும். அதன் பிறகு அந்த விதைகளை நாற்றங்கால் தயாரிப்புக்கு பயன்படுத்தலாம்.
  •         மேலும் நோய்கள் தாக்காமல் இருக்க சூடோமோனஸ் புளோரசன்ஸ் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் கலந்து அதனை ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து அதன்பிறகு தண்ணீரை வடித்த பின் 24 மணி நேரத்திற்கு இருட்டறையில் வைத்து முளைக்க வைத்த பிறகு விதைகளை நாற்றங்கால் தயாரிப்புக்கு பயன்படுத்தலாம்.

நடவு செய்யும் முறை

  •         இயந்திர நடவு செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு 70 முதல் 80 தட்டு நாற்றங்கால் தேவைப்படுகின்றன. இவை பதினெட்டு நாள் வயதுடைய நாற்றுகளாக இருக்கவேண்டும். இயந்திர நடவின் மூலம் வரிசைக்கு இடையேயான இடைவெளி 30 சென்டி மீட்டராகவும் பயிருக்கு இடையேயான இடைவெளி 15 முதல் 22 சென்டிமீட்டர் ஆகவும் இருக்கும் .

களை மேலாண்மை

  •         பென்சல்புயூரான் மெத்தில் 0.6% + பிரிட்டிலகுலோர் 6% களைக் கொல்லியை ஏக்கருக்கு 4 கிலோ எடுத்துக் கொண்டு அதனை 10 முதல் 15 கிலோ மணல் கலந்து நடவு செய்த 1 முதல் மூன்றாவது நாளுக்குள் வயலில் இடவேண்டும்.

கோனோவீடர் பயன்படுத்துதல்

  •         10 நாள் இடைவெளியில் கோனோ-வீடர் மூலம் நான்கு முறை களையெடுத்தல் வேண்டும். நடவு செய்த 29 நாட்களுக்குப் பிறகு முதல் களையெடுத்தல் அவசியம். கைக்களையெடுப்போடு ஒப்பிடும்போது தாவரங்களுக்கு கூடுதல் வேர்கள் உற்பத்தி செய்ய இது உதவுகிறது.

உர மேலாண்மை

  •         மண் பரிசோதனை முடிவுகள் இருந்தால் அதற்கு ஏற்றவாறு உரமேலாண்மை செய்யலாம். இல்லையெனில் 150:50:50 என்ற விகிதத்தில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்தை உர மேலாண்மையை செய்யலாம்.

அறுவடை

  •         80 சதவிகித நெல்மணிகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும் பொழுது அறுவடை செய்யலாம்.

கட்டுரையாளர்கள்:

செல்வகுமார் ச

முனைவர் பட்டப்படிப்பு மாணவர்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்

மின்னஞ்சல்: selva4647@gmail.com

தொலைபேசி எண்: 7373464740

 

ச வே வர்ஷினி

முனைவர் பட்டப்படிப்பு மாணவர்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்

மின்னஞ்சல்: varshuagri08@gmail.com

தொலைபேசி எண்: 9994481295

 

Exit mobile version