Site icon Vivasayam | விவசாயம்

மல்பெரியில் உயிர் உர மேலாண்மை

பட்டு உற்பத்தியில் மல்பெரி இலை முக்கிய பங்கு வகிக்கிறது. மல்பெரி செடிகளை பயிரிட்டு அதன் இலைகளை பட்டுப்புழுக்களுக்கு உணவாக கொடுக்கின்றனர். இந்தியா பட்டு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. பட்டுப்புழுவின் வளர்ச்சி மற்றும்  பட்டுக்கூடு விளைச்சல், மல்பெரி இலைகளின் தரத்தைச் சார்ந்து இருக்கிறது. உயிர் உரங்கள் இடுவதன் மூலம் மல்பெரிக்கு தேவையான தழை, மணி, சாம்பல் போன்ற பேரூட்டச் சத்துக்களும், நுண்ணூட்டச் சத்துக்களும் எளிதாக கிடைக்க செய்வதோடு மட்டுமல்லாமல் தரமான இலை உற்பத்திக்கும் வழிவகை செய்கின்றது. மல்பெரி செடிகளுக்கு பயன்படுத்தப்படும் உயிர் உரங்களைப் பற்றி காண்போம்.

 

அசோஸ்பைரில்லம்:

மல்பெரி செடிகளுக்கு தழைச்சத்தை தரக்கூடிய உயிர் உரமாகும். வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜன் 78% தழைச்சத்தை செடிகள் கிரகித்து கொள்ள பயன்படுகிறது. ஏக்கருக்கு 2 கிலோ அசோஸ்பைரில்லத்தை நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இடவேண்டும். வேதி உரமிட்ட 15 நாட்களுக்கு முன் அல்லது பின்னர் பயன்படுத்த வேண்டும். உயிர் உரத்தை வேதி உரங்களுடன் கலந்து பயன்படுத்தக்கூடாது. தழைச்சத்து உயிர் உரங்கள் ‘சொ அசோ’, ‘அசட்டோபாக்டர்’ போன்ற பெயா்களில் கிடைக்கின்றது.

பாஸ்போபாக்டீரியா:

பேரூட்டச் சத்துக்களுள் தழைச்சத்திற்கு அடுத்தப்படியாக செடிகளுக்கு வளர்ச்சி ஊக்கியாக கருதுவது மணிச்சத்தாகும். செடிகளுக்கு 15-20 சதவீதம் மட்டுமே பாஸ்பேட் சத்துக்கள் கிடைக்கின்றது. பாஸ்போபாக்டீரியா என்னும் உயிர் உரத்தினை பயன்படுத்துவதால் நிலத்தில் இருக்கும் கரையாத மணிச்சத்தை கரைத்து மல்பெரி இலைகளின் வளர்ச்சியையும் மற்றும் பட்டுக்கூடுகளின் தரத்தையும் அதிகரிக்க செய்கிறது. ஏக்கருக்கு 2 கிலோ பாஸ்போபேக்டீரியாவை நன்கு மக்கிய தொழு உரத்துடன் இட வேண்டும். பாஸ்போலைன், செரிபாஸ் போன்ற பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றது.

 

வேம்:

வேம் என்பது பூஞ்சாண வகையை சார்ந்த நுண்ணுயிரியாகும். இதன் விரிவாக்கம் வெசிகுலர் அர்பஸ்குலர் மைக்கோரைசா (Vesicular Arbuscular Mycorrhiza). மணிச்சத்து குறைவாக உள்ள  நிலத்தில் வேம் என்னும் நுண்ணுயிரி வோ்களில் தங்கி, அதன் மூலம் படர்ந்து சென்று மணிச்சத்தை செடிகள் கிரகித்து கொள்ள செய்கிறது. மேலும் பல நுண்ணூட்டச் சத்துக்களையும் மல்பெரி செடிகளுக்குத் தருகின்றது. மல்பெரியின் நாற்று உற்பத்தியின் போது விதைக்குச்சிகளை வேம் பூசணக் கலவையில் நனைத்து நடவு செய்தல்  வேண்டும். இவ்வாறு நடுவதால் வேர்விடும் திறன் அதிகரித்து விரைவில் வளர்ச்சி பெறும். வேம் இடுவதால் மல்பெரியைத் தாக்கும் வேர் அழுகல் நோய், வேர் கிருமிகளின் தாக்குத்தலைக் குறைக்கிறது. எனவே விவசாயிகள் மேற்கூறிய உயிர் உரங்களை இடுவதன் மூலம் குறைந்த செலவில் மல்பெரி செடியை நன்றாக பராமரிக்க முடியும்.

கட்டுரையாளர்: பி.மொ்லின், முதுநிலை வேளாண் மாணவி, வேளாண் நுண்ணுயிரியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: merlinbrittoagri@gmail.com

Exit mobile version