Skip to content

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-5)

வெள்ளம் கரை கடந்தால்!

வெள்ளம் அதில் ஒரு லகரத்தை மாற்றி விட்டால் அது இனிப்பை குறிக்கும். இந்த வெள்ளமோ பலரது வாழ்வின் இனிப்பை எடுத்து இருக்கிறது. உலகில் இயற்கை (சிலநேரம் செயற்கையாகவும்) சீற்றங்களில் அதிக உயிர்களைப் பறித்துக் கொள்வது வெள்ளம் தான். உலகின் 2% தான் அதிகம் பாதிக்கும் பகுதிகள். ஆனால் மனிதன் ஆக்கிரமிப்பில் அதையும் விட்டு வைக்கவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்று அமெரிக்கா ஆண்டுதோறும் குறைந்தது 8 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்காவது வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது. வீடுகளும் உடைமைகளும் அங்கு வெள்ளத்தால் அழிந்தால் மீட்டுருவாக்கம் செய்யும் காப்பீட்டு வசதி கூட உள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு சூறாவளியாலும் இடிமின்னல்களாலும் இறப்பவர்களை விட வெள்ளத்தால் இறப்பவர்கள்தான் அதிகம்.

உலகளவில் வெள்ளத்தால் மரணிப்பவர்களில் அதிகமானோர் வெள்ளம் நேரும் பொழுது ஏதேனும் வாகனத்திற்குள் இருப்பவர்களாகவே இருக்கின்றனர். வேகமாய் வரும் இரண்டடி வெள்ளம் ஒரு மனிதனையே கொண்டு செல்லும். அதுவே ஆறடியில் இருந்தால் ஒரு மகிழுந்தை (காரை) அடித்து செல்லும் வேகமாக வரும். தண்ணீரை விட மிகப்பெரிய ஆபத்து வேறு எதுவும் இல்லை. அதனால்தான் வெள்ளம் வரும்போது அதில்  நடப்பதையும், வாகனங்களை இயக்குவதை தவிர்ப்பதும் மிகவும் நல்லது என்கின்றனர்.

இதற்கு ஒரு பெரும் உதாரணம் நாமேறி வனச்சரகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஓர் யானையை அடித்து சென்றதை நாம் என்றுமே மறக்க மாட்டோம். வெள்ளம் மனிதர்களின் வாழ்க்கை மட்டுமின்றி பல விலங்கினங்களின் வாழ்க்கையையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் பல சுவைமிக்க சம்பவங்களும் உலகில் அரங்கேறி தான் இருக்கின்றன.

மொசாம்பிக்கு நாட்டில் சியாய என்னும் கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில்  ஒரு நாய் அடித்துச் செல்லப்படுகிறது. சில நாட்கள் கழித்து அந்த நாய் ஒரு குட்டி குரங்குடன் ஊருக்குள் வருகிறது. அந்த குரங்கு நாயின் முதுகை இறுக்கிப் பிடித்தபடி அமர்ந்து இருக்கிறது. இந்த வெள்ளத்தில் பக்கத்தில் இருக்கும் காட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட இந்த நாய் அங்கேயே இருக்கும் இந்த குரங்கை தன் முதுகில் ஏற்றி இருக்கிறது. அதுவும் பல வேட்டை நாய்களுக்கு இரையாக  மாற இருந்த குரங்கை இது காட்டில் இருந்து காப்பாற்றி அழைத்து வந்திருக்கிறது, இந்த சம்பவம் நடந்தது 2002இல். ஆனால் அதற்குப் பிறகு தான் வாழும் காலம் வரை எந்த மனிதர்களையும் நம்பாமல் அந்த குரங்கும் நாயும் ஒன்றாகவே சேர்ந்து வாழ்ந்தன என்கின்றனர் கிராம மக்கள். அந்த இணைக்கு அக்கிராம மக்கள் பில்லி (billy) கிகோ (kiko) என்று பெயர் வைத்திருக்கின்றனர்.

தப்பிப் பிழைக்கும் என்பதே டார்வின் விதி. இதற்கு ஒரு உதாரணம் அடுத்துவரும் நிகழ்வுதான் நியூசிலாந்தில் ஒரு கிராமத்தின் சாலையில் ஒருவர் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அங்கிருந்த ஒரு சாக்கடையில் ஒரு தங்க மீனை (GOLD FISH) காண்கிறார்.  பின்புதான் அவருக்கு நினைவுக்கு வந்தது இது நம் நண்பனின் குளத்தில் வளர்ந்த மூன்று மீன்களில் ஒன்று தானே என்று பின்பு அந்த மீனை காப்பாற்றி ஒரு பாலித்தீன் பையில் இட்டு தன் சொந்த ஊருக்கு கொண்டு செல்கிறார். அங்கேயே மற்ற இரண்டு மீன்களையும் தேடி பார்க்கிறார் அவை தென்படவில்லை. ஆனால் தான் உயிர் வாழ வேண்டும் என்ற போராட்டத்தின் அடிப்படையில் பல மைல்கள் தாண்டி அந்த மீன் சாக்கடையில் நீந்தி அங்கு இருக்கும் புழுக்களை உணவாய் உண்டு அந்த சாக்கடையில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இதை தன் நண்பருக்கு ஒரு பரிசாக எடுத்துச் சென்றார் ஆஸ்காம் அதை பார்த்தவுடன் அந்த மீனின் உரிமையாளரான ஸ்ட்ருதஸ் மிகவும் வியந்து மீண்டும் மீனை தன் குளத்தில் வளர்க்க ஆரம்பித்தார்.

உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்ற மீன் பெயரான நீமோ எனும் பெயரை அந்த மீனுக்கு சூட்டினர். இப்படி எண்ணற்ற சுவாரசியத்தை வெள்ளம் நமக்கு தந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படி எண்ணற்ற சுவாரசியத்தை வெள்ளம் மட்டுமல்ல பல இயற்கை சேதங்களும் நமக்கு வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இவற்றுக்கு பின்னால் ஒரு பெரும் சோகமும் போராட்டமும் ஒளிந்து கொண்டே இருப்பதை மறைப்பதற்கு இல்லை.

தொடரும்…

கட்டுரையாளர்: அன்பன் செ. விக்னேஷ், இளநிலை வேளாண்மை பட்டதாரி, குளித்தலை, தொடர்பு எண்: 8344848960, மின்னஞ்சல்: vickysvicky42@gmail.com

Leave a Reply

editor news

editor news