Skip to content

கறவை மாடுகளில் ஏற்படும் பால் காய்ச்சல் நோய் மேலாண்மை

பால் காய்ச்சல் நோயானது விவசாயியின் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடிய நோய்களில் ஒன்றாகும். கறவை மாடுகளின் நலனை காக்கவும் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பை தடுக்கவும் பால் காய்ச்சல் நோயை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும்.

ஏன் பால் காய்ச்சல் நோய் கறவை மாடுகளுக்கு வருகிறது?

கன்று போட்டவுடன் மாடுகளில் இருந்து பெறப்படும் சீம்பாலில் அதிக அளவு கால்சியம் சத்து வெளியேறுகிறது ( ஓரு லிட்டர் சீம்பாலில் – 3 கிராம் கால்சியம் ).

கறவை மாடுகளில் தினமும் கறக்கும் பால் ஒரு லிட்டரில் 0.2 கிராம் கால்சியம் உள்ளது. கறவை மாடுகளுக்கு நாம் கொடுக்கும்  தீவனத்தில் உள்ள கால்சியத்தின் அளவு குறைவாகவும் மேலும் அதன் பாலில் இருந்து வெளியேற்றப்படும் கால்சியத்தின் அளவு அதிகமாகவும்  உள்ளபோது பால் காய்ச்சல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

பால் காய்ச்சல் நோயை தடுப்பதற்கான எளிய வழிமுறைகள்:

  1. கன்று போட்டவுடன் கறவை மாடுகளுக்கு கால்சியம் டானிக் கொடுத்தல்:

அ) பல கால்சியம் டானிக்-கள் மருந்து கடைகளில் ஜெல்  ஆகவோ அல்லது திரவமாகவோ மருந்தகங்களில் கிடைக்கும். அதை இரண்டு முதல் மூன்று முறை மாடுகளுக்குக் கொடுக்கும்போது பால் காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். இது போன்ற மருந்துகளை கொடுக்கும்போது பொறுமையாக புரை ஏறாமல் கொடுக்க வேண்டும்.

ஆ) சுண்ணாம்புக்கல் வேகவைத்து நீர்த்த நீர் தினம் அரை லிட்டர் கறவைப் பசுக்களுக்கு கொடுக்க வேண்டும்.

இ)முருங்கை இலை மற்றும் நாயுறுவி இலை தினமும் 200 கிராம் கொடுக்கலாம். இவை இயற்கை கால்சியம் நிறைந்தவை.

(குறிப்பு – மேற்கண்ட மூன்றில் ஏதாவது ஒன்றை  மட்டும் பின்பற்றவும்)

  1. கறவை மாடுகளில் அமில காரத் தன்மையை சமப்படுத்துதல்:

கறவை மாடுகளில் நாம் கொடுக்கும் தீவனங்களில் உள்ள அமிலம் மற்றும் காரத் தன்மையானது சரிவிகித அளவில் இல்லாதபொழுது பால் காய்ச்சல் நோய், சூழ்விக்கம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனை சரி செய்வதற்கு DCAD என்ற மருந்து கடைகளில் கிடைக்கின்றன. அதை கறவை மாடுகளுக்கு பத்து நாட்களுக்கு கொடுக்கும்போது பால் காய்ச்சல் மற்றும் சூழ்விக்கம்  வருவது சற்று குறையும்.

  1. கடைசி இரண்டு மாத சினை காலங்களில் பால் கறவை வற்றிய மாடுகளில் கால்சியம் குறைவாக கொடுத்தல்:

கறவை மாடுகளில் கடைசி இரண்டு மாத சினைப் பருவத்தில் பால் வற்றிய சினை மாடுகளுக்கு கால்சியம் சத்து குறைவான தீவனங்கள் கொடுக்க வேண்டும். மேலும் இந்த மாதங்களில் அதிக அளவு கால்சியம் உள்ள டானிக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இதனால் பால் காய்ச்சல் வருவது சற்று குறையும்.

  1. சினை மாடுகளுக்கு தீவனம் மற்றும் தாதுஉப்பு கொடுத்தல்:

சினை மாடுகளுக்கு தரமான சரிவிகித தீவனம் மற்றும் தாது உப்பு கொடுக்க வேண்டும். மேலும் சினை காலத்தில் மாடுகள் உடல் எடை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேற்கூறியுள்ள முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் பால் காய்ச்சலினால் ஏற்படும் வருவாய் இழப்பை தவிர்க்கலாம்.

பின்குறிப்பு:  கறவை மாடுகளில் பால் காய்ச்சல் நோய் ஏற்பட்டுவிட்டால் நேரம் தாழ்த்தாமல் உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அழைத்து வைத்தியம் செய்வது நலம்.

கட்டுரையாளர்: மரு.து. தேசிங்குராஜா, கால்நடை உதவி மருத்துவர்,கால்நடை மருந்தகம், ஆறகளூர். தொடர்புக்கு: 9443780530, மின்னஞ்சல்: desinguraja@hotmail.com

Leave a Reply

editor news

editor news