Skip to content

தேனீ வளர்ப்பு (பகுதி – 1)

தேனீக்களின் கண்கவர் உலகம்

அறிமுகம்

தேனீக்களை வளர்க்கும் முறை ஆங்கிலத்தில் ஏபிகல்சர் (Apiculture) என்று அழைக்கப்படுகிறது. தேனீக்களின் உலகமானது மிகவும் விந்தையானாது.  இதனை பற்றி உணர்ந்த நம் முன்னோர்கள் மிக நீண்ட காலமாக பழமையான முறையினால் தேனீக்களை வளர்த்து வருகின்றனர். மேலும் அறிவியல் ரீதியற்ற (அ) விஞ்ஞானமற்ற முறையில் தேனீ வளர்ப்பு நாட்டின் சில பழங்குடி பகுதிகளில் இன்னும் நடைமுறையில் உள்ளது. ஆனால் இப்போது பொதுவாக அறிவியல் ரீதியில் தேனீ வளர்ப்பு செய்யப்படுகிறது. நகரக்கூடிய தேனீ சட்டகங்களின் அறிமுகம் மற்றும் பிரபலப்படுத்தலுக்குப் பிறகு, இந்தியாவில் தேனீ வளர்ப்பு மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்திய காலநிலைகளுக்கு ஏற்ற மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் பயிர் மற்றும் தேன் மகசூலை அதிகரிக்கலாம்.

தேனீ வளர்ப்பின் வெற்றி என்பது முக்கியமாக தேனீக்களின்  உயிரியல், நோய்கள் மற்றும் அதன் பழக்க வழக்கம் பற்றிய அறிவு மற்றும் அதற்கேற்ற மேலாண்மை நடைமுறைகளைப் பொறுத்தது ஆகும். தேனீக்களின் வளர்ச்சி காலம், வளர்ச்சி உயிரியல், உருவவியல், உடற்கூறியல், உடலியல் மற்றும் உயிர் வேதியியல் மற்றும் இந்தியாவில் தேனீக்களின் பிற பழக்க வழக்கங்கள் பற்றிய அறிவானது சற்று குறைவாக உள்ளது. பொதுவாக தேனீக்களில் 5 இனங்கள் உள்ளன. இதில் இந்திய தேனீ தென் இந்தியாவிலும் இத்தாலிய தேனீ வட இந்தியாவிலும் பிரபலமாகவும் வர்த்தக ரீதியிலும் வளர்க்கப்பட்டு வருகிறது. மேலும் அந்தந்த இனங்களுக்கான உபகரணங்களை வெவ்வேறு நிலப் பரப்புகளுக்கு மற்றும் கால சூழலுக்கு ஏற்றவாறு தரப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது ஆகும். தேனீ வளர்ப்புத் தொழிலாளர்களின் கவனத்தை ஈர்க்க இது ஒரு முக்கியமான துறையாக அமைய வேண்டும்.

இந்தியாவில் தேனீக்களுக்கு வரும் நோய்கள் மற்றும் அதன் எதிரிகளினால் ஏற்படும் பிரச்சினைகள் மற்ற நாடுகளிலிருந்து வேறுபட்டவை. தேனீக்களின் தயாரிப்புகள் உணவு, மருந்து மற்றும் ஒப்பனைத் தொழில் துறைகளில் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், இந்திய தேன் மற்றும் தேனீ மெழுகு குறித்த சில ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் தேனீ விஷம், அரச கூழ் (ராயல் ஜெல்லி), மகரந்தம் மற்றும் புரோபோலிஸ் (மர மொட்டுகளிலிருந்து தேனீக்களால் சேகரிக்கப்பட்ட ஒரு சிவப்பு அல்லது பழுப்பு பிசின் போன்ற பொருள், அவை பிளவுகளை நிரப்பவும், தேன்கூடுகளை சரிசெய்யவும் பயன்படுத்தப்படுகின்றன) ஆகியவை குறித்த ஆராய்ச்சிகள் இன்னும் மேம்படுத்தப்படவில்லை. எனவே, தேனீ-தயாரிப்பு தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களிலும் முறையான கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

தேனீக்களின் முக்கியத்துவம்

தேனீ மற்றும் அதன் உழைப்பிலிருந்து வரும் பொருட்கள் மற்றும் அவற்றின் பயன்கள் பற்றிய விவரங்கள் வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்தே மனிதன் நன்கு அறிந்தவை. இது மனிதனுக்கு நேரடியாக பயனளிக்கும் சில பூச்சிகளில் ஒன்றாகும். தேனீக்களின் விடாமுயற்சி மற்றும் அதன் தியாகத்தை புகழ்ந்துரைக்கும் வகையில் பல நாட்டுப்புறக் கதைகள், மேற்கோள், பாடல்கள் ஆகியவற்றில் காணலாம். பல மத நூல்கள் தேன் மற்றும் தேனீ மெழுகு பற்றி அதிகம் பேசுகின்றன, மேலும் இந்த இரண்டு பொருட்களையும் பண்டிகைகளின் போது நிகழ்த்தப்படும் பல்வேறு சடங்குகளிலும், ஒரு தனிநபரின் வாழ்க்கையில் ஏற்படும் பல சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்துமாறு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு அறிவுறுத்துகிறது.

தேனீ வளர்ப்பில் தேன் மற்றும் தேன் மெழுகிலிருந்து வருமானம் பெறும் தேனீ வளர்ப்பவர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த சமூகமும் பயன் பெறுகிறது. தேனீக்கள் அதன் உணவை அருகில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களிலிருந்து சேகரிப்பதன் மூலம் அப்பயிர்களிடையே மகரந்தச் சேர்க்கை நடைபெற உதவுகின்றன. தேனீக்களின் மூலம் நடைபெறும் அயல் மகரந்தச் சேர்க்கையால் அயல் மகரந்தச் சேர்க்கை பயிர்கள் மட்டுமல்லாமல் பல தன் மகரந்தச் சேர்க்கை பயிர்களின் தரம் மற்றும் விளைச்சல்      20-25 சதவீதம் வரை அதிகரிக்கிறது. தேனீக்களின் பண்பான மலர்களைப் பார்வையிடல், மகரந்தம் மற்றும் அமிழ்தம் சேகரித்தல் போன்றவற்றால் பழங்கள், காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பிற பயிர்களின் விளைச்சல் உயர்கிறது.

தேனீக்கள் பயன்படுத்தப்படாத மலரின் அமிழ்தத்தை தேனாக மாற்றுகின்றன. மேலும் அதன் விளை பொருட்கள் ஒரு மருந்தாக, உயர் கலாச்சார மதிப்பைக் கொண்ட தயாரிப்பாக, விரும்பத்தக்க உணவு மற்றும் வர்த்தக பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

நம் உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் வறுமை, காலநிலை மாற்றம், காடழிப்பு, பல்லுயிர் இழப்பு, நீர் பற்றாக்குறை, வேலையின்மை, மாசு மற்றும் நகர்ப்புற பரவல் ஆகியவை அடங்கும். தேனீ வளர்ப்பால் இவை அனைத்தையும் குணப்படுத்த முடியாது, ஆனால் ஒரு சாத்தியமான மற்றும்  சுற்றுச்சூழலுக்கு  நன்மை பயக்கும் செயல்பாடுகள் மூலம் இப்பிரச்சனைக்கு நம்மால் தீர்வு காண இயலும் மேலும் தேனீ வளர்ப்பு இதனை சுலபமாக்குகிறது.                                                                                                                                                                     ……….. தொடரும்

கட்டுரையாளர்: பா. பத்மபிரியா, முதுநிலை வேளாண் மாணவி, பூச்சியியல் துறை,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். மின்னஞ்சல்: priyabaluagri@gmail.com

Leave a Reply

editor news

editor news