Site icon Vivasayam | விவசாயம்

விழித்தெழுங்கள் உழவர்களே! உருவாக்குவோம் புதிய சந்தை உறவு முறையை…!! (பகுதி – 3)

சுயசார்பு என்றால்?

அண்டும் நிலை என்பதே சுயசார்புக்கு எதிரானது. யார் உதவியும் தேடாமல் தாமாகவே தம் வேலைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் பொறுப்பு என்ற நிலை அபாயகரமானது. இந்த அண்டும் நிலை மெல்ல மெல்ல அடிமை நிலையாகவும் மாறிவிட்டது. கொல்பவனாக அரசாங்கம், கொள்பவர்களாக மக்கள் என்ற புரவலர் – இரவலர் உறவுமுறை வலுத்துவிட்டால் ஓர் அரசாங்கத்தின் நோக்கம் பிச்சைக்காரர்களை உருவாக்குவதுதானே! தற்சார்பு என்ற கொள்கையை வலியுறுத்திய காந்தி மகாத்மாவை இன்று யாரும் நினைப்பதாயில்லை. இன்று உலகமயமாக்கல் என்ற கொள்கையில் உலகத்தில் ஒரே புரவலர் அமெரிக்க ஜனாதிபதிதான். அமெரிக்க ஜனாபதியின் விசுவாசிகளாக இந்திய அமைச்சர்கள் உள்ளனர்.

வளச்சுரண்டல்?

அமெரிக்கா கேட்கிறதே என்று கங்கைமுதல் தாமிரபரணி ஆறுவரை பெப்சி, கொக்கே கோலா நிறுவனங்களுக்கு வழங்கிவிட்டார்கள். பாலைவிட அதிகவிலையில் பாட்டில் நீர் விற்கப்படுகின்றது. சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காகவும், பசுமை வழி சாலைகளுக்காகவும், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பனுக்காகவும் விவசாயம் செய்த நிலங்களையெல்லாம் வளர்ச்சிவாதம், வாய்ப்புகள் என்று காரணம் காட்டி அமெரிக்க மாமனுக்கும், ஜெர்மன் சித்தப்பாவுக்கும், லண்டன் பெரியாப்பாவுக்கும் தாராளமாக வழங்கின்றார்கள். ஒரே உலகம் என்று புதிய உறவுகளின் பாசம் வழிந்தோடுகின்றது. தற்சார்புள்ள இந்திய விவசாயப் பாரம்பரியத்தை இந்தப் புதிய உறவு அழித்துவிடும். அமெரிக்காவிலும் சரி, ஐரோப்பாவிலும் சரி விவசாயம் ஒரு ஹெடெக் தொழிலாகிவிட்டது. உற்பத்திச் செலவில் 50 சதவிகித மானிய உதவி அங்கு நிலவுகின்றது. இந்த மானிய உதவி நிறுத்தப்பட்டால் அந்த நாடுகள் அழிந்துவிடும் அபாயம் உள்ளது.

மனிதக் கற்பனைக்கு அப்பாற்பட்டுள்ள அளவுக்கு பல பில்லியன் கோடி டாலர் விவசாய மானியங்களைக் கொண்டுதான் ஜரோப்பிய அமெரிக்க விவசாயம் செயல்படுகின்றது. உலகிலேயே தற்சார்புள்ள விவசாயம் இந்தியாவில்தான் உண்டு. அரசு உதவியில்லாமல் வேளாண்மை சுதந்திரத்துடன் இயங்கும் சக்தி அன்றும் உண்டு; இன்றும் உண்டு; என்றும் உண்டு. இதை நகரச்சார்புள்ள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் உணர்வதாகத் தெரியவில்லை. இந்தியாவின் இந்தப் பாராம்பரியம் அழிந்துவிட்டால் நாம் உணவிற்க்காக  பிச்சை எடுக்கும் நிலை உருவாவதை யாராலும் தடுக்க இயலாது. அமெரிக்க மாமனும், ஜெர்மன் சித்தப்பாவும், லண்டன் பெரியப்பாவும் ரொட்டி தருவார்கள். அடுத்த தேர்தலில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இலவச/ விலை இல்லா தட்டு தருவார்கள். இறக்குமதி ரொட்டி, இறக்குமதி தண்ணீர், இறக்குமதி வெண்ணெய் எல்லாம் தட்டில் விழும். அரசாங்கம் ஊட்டிவிடும். அப்ப எதுக்கு கவலை!

-தொடரும்….

கட்டுரையாளர்: முனைவர் அக்ரி ச. பாபு, இணைப் பேராசிரியர், உழவியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.

மின்னஞ்சல்: agribabu74@gmail.com அலைபேசி எண் : 9486836801.

Exit mobile version