மெக்சிக்கோவில் 1930களில் இருந்தே உணவுத்தட்டுப்பாட்டின் அடையாளங்கள் தெரிய ஆரம்பித்துவிட்டன. மக்கள்தொகையின் தேவைக்குப் பாதி அளவு உணவு மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது. முதலில் மண்ணின் வளம் குறைவாக இருப்பதுதான் காரணம் என்று கருதினார்கள். ஆனால் போகப் போகத்தான் தெரிந்தது காரணம் துருநோய் என்று. இங்கு தான் நார்மன் போர்லாக்கின் கதை ஆரம்பிக்கிறது.
போர்லாக் அமெரிக்காவை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி. இளம் வயதில் நார்வேயில் இருந்து அகதிகளாக வந்த போர்லாக்கின் குடும்பம் அமெரிக்காவில் தஞ்சமடைந்தது. தனது கல்லூரி செலவுகளைச் சரிகட்ட, சிறிது காலம் படிப்பை நிறுத்தி கொஞ்சம் சம்பாதித்து மீண்டும் படிப்பை தொடர்வது இவரின் வாடிக்கையாக இருந்தது. அந்த அளவிற்கு வறுமையில் இருந்தார். ஒருவழியாகத் தாவர நோயியல் மற்றும் மரபியலில் முனைவர் பட்டம் பெற்று கல்லூரி படிப்பை முடித்த போர்லாக், 1942ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் சேர முற்பட்டு முடியாமல் போக, ராணுவத்திற்கு உதவும் விதமாகத் தனது ஆய்வுகூடத்தில் ராணுவத்திற்காக ஆய்வுகள் மேற்கொண்டிருந்தார். அப்போதுதான் அவருக்கு மெக்சிக்கோவில் நிலவும் பிரச்சினையை ஆய்வு செய்யும் குழுவில் இடம் கிடைக்கிறது. முதலில் அவர் அந்த வாய்ப்பை மறுத்தாலும் பின்னர் மெக்சிக்கோ செல்கிறார்.
ஆனால் மெக்சிக்கோவில் அவரது பணி அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. தினமும் பல கிலோமீட்டர்கள் நடந்துச்சென்று துரு பாதித்த கோதுமைச் செடிகளை ஆராய வேண்டும். துருவை தாங்கும் கோதுமை ரகங்களை உருவாக்க ஒவ்வொரு செடியின் மகரந்தங்களையும் நீக்கி சுய மகரந்தசேர்க்கை நடக்காத வண்ணம் தடுத்து புதிய ரகங்களை உருவாக்க வேண்டும். அப்படி போர்லாக் உருவாக்கிய கோதுமை செடிகளின் தண்டு சூரிய ஒளியை எளிதாகப் பெறும் வண்ணம் உயரமாக இருந்தாலும் அது எளிதில் சாய்ந்துவிடக் கூடியதாய் இருந்தது. அதனால் போர்லாக் தான் உருவாக்கிய துருநோய் எதிர்ப்பு ரகங்களைக் குட்டையான ரகங்களுடன் கலப்புச் செய்தார்.
1956ஆம் ஆண்டு மெக்சிக்கோவின் கோதுமை உற்பத்தி இரட்டிப்பானது. 1963ஆம் ஆண்டு அதன் முன் இருந்த உற்பத்தியைவிட ஆறுமடங்கானது மெக்சிக்கோவின் கோதுமை உற்பத்தி. உள்நாட்டு உணவுத் தேவையில் தன்னிறைவு அடைந்ததுடன் வெளிநாட்டிற்கும் கோதுமையை ஏற்றுமதி செய்யும் நாடாக மெக்சிக்கோ மாறியது.
போர்லாக்கின் இந்தச் சாதனைகள் உலகம் முழுவதும் பரவியது. அமெரிக்காவை நம்பி இனி இருக்க முடியாது என்று நினைத்த இந்திய அரசாங்கம் போர்லாக்கின் உதவியை நாடியது. 1963ஆம் ஆண்டு இந்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க போர்லாக் இந்தியா வந்தார். அவர் கொண்டு வந்திருந்த நான்கு ரகங்களின் விதைகளை வட இந்திய பகுதிகளில் நடப்பட்டுச் சோதனைகள் நடந்தது. அதன் வெற்றிகளின் அடிப்படையில் 1966ஆம் ஆண்டு, இந்தியா 18,000 டன் விதை கோதுமையை நடவுக்காக இறக்குமதி செய்தது. முதலில் பஞ்சாப் மற்றும் ஹரியானா பகுதிகளில் உற்பத்தி தொடங்கப்பட்டது. அதன்பின் அமோக விளைச்சல்தான். 1965ஆம் ஆண்டு இந்தியா 12 மில்லியன் டன் கோதுமையை உற்பத்தி செய்தது. உற்பத்தியின் அளவு எந்த அளவிற்கு இருந்தது என்றால் கோதுமையைச் சேமித்து வைக்க இடமில்லாமல் பள்ளி அறைகள் பயன்படுத்தப்பட்டன. இந்தியா தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது.
உணவு மற்றும் வேளாண் கழகம் ஒரு ஆய்வை வெளியிட்டது. அதாவது 1961ஆம் ஆண்டையும் 2001ஆம் ஆண்டையும் ஒப்பிட்டு ஒரு ஆய்வை வெளியிட்டது. அதில், 1961யை ஒப்பிடுகையில் 2001ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள்தொகை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் உணவு உற்பத்தி முன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது. அந்த இக்கட்டான சூழ்நிலையில் சரிந்துக்கொண்டிருந்த இந்தியாவின் உணவு உற்பத்தியை தூக்கி நிறுத்திய போர்லாக் உலகத்தின் பசுமைப் புரட்சி தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
ஆனால் இந்தியாவின் தன்னிறைவுக்குக் காரணம் போர்லாக் மட்டும் காரணம் இல்லை. அதற்குக் காரணம் ஒரு இந்திய வேளாண் விஞ்ஞானி. இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் அவர் ஒரு தமிழர்.
-தொடரும்…
கட்டுரையாளர்: ர.சிவக்குமார், இளமறிவியல் வேளாண்மை இறுதியாண்டு மாணவர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மின்னஞ்சல்: aamorsk3210@gmail.com