டிராகன் பழம் நாம் அதிகமாக அறியாத பழ வகைகளில் ஒன்று. இப்போது பரவலாக பழச்சந்தைகளில் கிடைக்கிறது. பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளி பழத்தைப் போலவே காணப்படும் இது, கற்றாழை குடும்பத்தைச் சார்ந்த கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம். இளம் சிவப்பு நிறத்தில் பளிச்சென்று அழகாக இருக்கும். இதன் தாயகம் தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா ஆகும். டிராகன் பழம் தமிழ்நாட்டில் அவ்வளவாக பிரபலம் அடையவில்லை. தமிழகத்தில் தற்போது ஒரு சிலரே இந்த டிராகன் பழம் சாகுபடி ஆரம்பித்துள்ளனர்.
டிராகன் பழத்தில் 3 வகைகள் உள்ளன. அவை
- சிவப்புத் தோலுடன் கூடிய சிவப்பு சதை கொண்ட பழம்.
- சிவப்புத் தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம்.
- மஞ்சள் தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம்.
பொதுவாக இதன் சுவை இனிப்பு, புளிப்பு சுவையில் இருக்கும். சதையில் கருப்புப் புள்ளிகளாக விதைகள் இருக்கும். டிராகன் பழம் தமிழகத்திற்கு மிகவும் புதியதான சாகுபடி பழ வகைகளில் ஒன்று. நம் ஊரில் காணப்படும் கள்ளிச்செடி போன்று இதன் தோற்றம் காணப்படும்.
தேனி மாவட்டம் சீலையம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான திரு சுந்தரராஜன் அவர்கள் இந்த டிராகன் பழம் சாகுபடி செய்துவருகிறார்.
“வங்கியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சொந்த கிராமத்திற்கு வந்து விவசாயம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து அதன் முதற்படியாக முதலில் பேரிச்சை சாகுபடி செய்யத் தொடங்கினேன். ஆனால் சிவப்பு கூன்வண்டு தாக்குதலால் வெற்றிகரமாக பேரிச்சை சாகுபடி செய்ய இயலவில்லை. ஆனால், டிராகன் ஃப்ரூட், நல்ல விளைச்சல், நல்ல லாபம்” என்று பேச ஆரம்பித்தார் சுந்தர்ராஜன்.
கடந்த ஆறு வருடங்களாக ஒரு ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து வருகிறேன். இதற்கான கன்றுகள் குஜராத்திலிருந்து வாங்கினேன். கள்ளிச்செடி போன்று வளரும், கொடியாகப் படரும். அதற்கு ஏற்றாற்போல கல்தூண்கள் அல்லது சிமென்ட் தூண்கள் மற்றும் அதன் உச்சியில் வட்ட வடிவ சிமென்ட் மூடி தேவை. 6×8 அடி இடைவெளியில் கல்தூண்கள் நடவேண்டும். ஒரு கல் தூணைச் சுற்றி நான்கு டிராகன் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். நடவு செய்ததில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அறுவடைக்குத் தயாராகிவிடும். வறட்சியைத் தாங்கி வளரும் குணம் இதற்கு உண்டு. வாரத்திற்கு இரண்டு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது. எங்கள் பகுதியில் பெரும்பாலும் வாழை, தென்னை, வெங்காயம் போன்ற பயிர்கள் தான் அதிகம் கடந்த நான்கு வருடங்களாக வாழைக்கு சரியான விலை இல்லை. விளைவிக்கிற செலவுக்குக் கூட வருமானம் வருவதில்லை இவற்றுடன் ஒப்பிடும்போது டிராகன் ஒரு சிறந்த மாற்றுப்பயிர் என்று கூட சொல்லலாம். ஆரம்பத்தில் மட்டும் செலவு கொஞ்சம் அதிகம் பின்பு செலவுகள் இல்லை . இயற்கை உரங்களான மண்புழு உரம், மக்கிய தொழு உரம், பஞ்சகாவியா பயன்படுத்திதான் சாகுபடி செய்கிறேன். வருடத்திற்கு ஆறு மாதம் பலன் அளிக்கக்கூடியது. இப்போ இந்த கொரோனா காரணமாக பழங்களை விற்பனைக்கு அனுப்ப இயலவில்லை. பூச்சி மற்றும் நோய் தாக்குதல் டிராகனில் சுத்தமாக இருப்பதில்லை. ஒரு தூணுக்கு வருடத்திற்கு சராசரியாக 8 முதல் 10 கிலோ பழங்கள் கிடைக்கும். ஒரு பழம் 200 முதல் 750 கிராம் வரை இருக்கும். ஒவ்வொரு வருடமும் கவாத்து (Pruning) செய்தல் மிகவும் அவசியமானதாகும். அடுத்ததாக அவகோடா சாகுபடி செய்ய ஆர்வமாக உள்ளேன் என்றார்.
மேலும் டிராகன் பற்றிய கூடுதல் சாகுபடி தொழில்நுட்பங்களை தெரிந்துகொள்வதற்கு 9791659077 என்ற தொலைபேசி எண்ணிலும், ssundararaj@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் திரு சுந்தரராஜன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
கட்டுரையாளர்: ப. பிரவீன்குமார், முதுநிலை வேளாண் மாணவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை. மின்னஞ்சல்: pkmagriculture@gmail.com