கடந்த சில ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தில் விவசாயிகளிடம் இயற்கை விவசாயம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இத்தகைய நடைமுறைச்சூழலில் குஜராத் மாநில அரசு இயற்கை வேளாண் பணிகளை தொடரவும் பாரம்பரிய நாட்டு மாடுகளை வளர்க்க அதிகளவு நிதி உதவிகளை வழங்கி ஊக்கம் அளித்து வருகிறது. இப்புதிய திட்டத்தின் கீழ் குஜராத் மாநில விவசாயிகளுக்கு நாட்டு மாடுகளை வளர்க்க மாதந்தோறும் ஒரு மாட்டிற்கு ரூ.900 விகிதம் வழங்கப்படுகிறது. இவ்வாறு வளர்க்கப்படும் நாட்டு மாடுகளிடம் கிடைக்கும் இயற்கை சாணம், கோமியம் போன்றவை இயற்கை வேளாண் சாகுபடி பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு வருடத்திற்கு நாட்டு மாடுகளை வளர்க்க பதிவு செய்த விவசாயிகளுக்கு ரூ.10,800 வரை ஒரு மாட்டிற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. குஜராத் மாநில விவசாயிகள் தங்களின் மாடு வளர்ப்பு விபரங்களை மாநில அரசின் இணையதளமான ikhedut portal க்குச் சென்று தங்களின் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்த விவசாயிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2,700 விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக பணம் அனுப்பப்படும். இத்திட்டம் தற்போது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு செய்யும் பாரத பிரதமரின் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப் படுகிறது. இவ்வாறு மாநில அரசு வழங்கியுள்ள நிதி உதவி காரணமாக குஜராத் மாநிலத்தில் 5500 முதல் 5700 விவசாயிகள் வரை இயற்கை வேளாண் பணிகளை மேற்கொள்ளவும், நமது பாரம்பரிய நாட்டு மாடுகள் பாதுகாக்கப்பட மற்றும் பெருக பெரிதும் உதவுகிறது.
தற்போது சுமார் 50 கோடிகள் வரை நிதி ஒதுக்கி செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற அவர்கள் முறையே நியமனம் செய்யப்பட்ட பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற வேண்டியது அவசியம். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 50,000 விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு கால்நடைகள் கொண்டு இயற்கை சாகுபடி செய்யும் முறை
தற்போது நாட்டு மாடுகளை கொண்டு பெறப்படும் இயற்கையிலான கழிவுகளைக் கொண்டு உரங்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த இயற்கை உர தயாரிப்பு முறையில் 10 கிலோ பசும் சாணம், அதற்கு சமமான அளவில் மாட்டின் கோமியம் மற்றும் 200 லிட்டர் தண்ணீர் மற்றும் வெல்லம், பயிர் பொடி (Pulses powder) போன்றவை முறையே கலக்கப்பட்டு 3 முதல் 4 நாட்களுக்குத் தனியாக வைக்கப்படுகிறது. இதனைக் கொண்டு சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் போது மண்ணில் நுண்ணுயிர்கள் எண்ணிக்கையும் மற்றும் மண்ணின் வளமும் பெருகுகிறது. இதனைக் கொண்டு விவசாயிகளில் மிகவும் குறைந்த செலவில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்ய முடிகிறது. இதனால் குறைந்த செலவில் வேளாண் உற்பத்தி பணிகளை மேற்கொள்வதுடன், அதிகளவு லாபமும் பெற முடிகிறது. இவ்வாறு குஜராத் மாநில அரசின் நாட்டு மாடு வளர்ப்பு ஊக்க முயற்சி இயற்கை சாகுபடி பணிகளை மேற்கொள்ள துணை புரிகிறது. குஜராத் மாநிலத்தில் இயற்கை முறை விவசாயம் பெருகவும் வழிவகை செய்கிறது. இதுபோன்ற திட்டத்தினை தமிழக அரசும் செயல்படுத்தினால் நம்முடைய மாநிலத்தில் உள்ள கால்நடை இனங்களும் பாதுகாக்கப்படும். விவசாயமும் செழிக்கும்…
கட்டுரையாளர்:
முனைவர் தி. ராஜ் பிரவின், இணைப் பேராசிரியர், வேளாண் விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: trajpravin@gmail.com