Site icon Vivasayam | விவசாயம்

மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலும் அதன் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளும்

முன்னுரை:

மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் படைப்புழு (ஸ்பொடாப்டிரா புருஜிபெர்டா) அமெரிக்கக் கண்டத்தின் வெப்ப மற்றும் மிதவெப்ப பகுதிகளை தாயகமாக கொண்டது. இவ்வகை படைப்புழுக்கள் 80 க்கும் மேற்ப்பட்ட பயிர்களைத்தாக்கி அழிப்பது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக புல் வகைப் பயிர்களான மக்காச்சோளம், நெல், கோதுமை, சோளம் மற்றும் கரும்பு பயிர்களை பெருமளவில் தாக்கக் கூடியது. இந்தியாவில் மக்காச்சோளப் படைப்புழுவின் தாக்குதல்   முதன்முதலாக கர்நாடக மாநிலத்தில் சிவமோகா மாவட்டத்தில் 2018 ஆண்டு மே மாதத்தில் கண்டறியப்பட்டது. பின்னர் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஒரிசா, பீகார், குஜராத் சட்டிஸ்கர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இதன் தாக்குதல் காணப்பட்டது. படைப்புழுக்களின் முதிர்ந்த அந்துப்பூச்சிகள் அதிக தூரம் பறக்க கூடியது, ஒரே இரவில் 100 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகத்திற்கேற்ப பறந்து உணவுப்பயிர்களை தேடி அழிக்கக்கூடியது. படைப்புழுக்களின் தாய் அந்துப் பூச்சியானது 200-800 முட்டை வரை இட கூடியது. முட்டையிலிருந்து வெளிவரும் புழுப் பருவமானது 1422 நாள் வாழ்நாள் கொண்டது, இதில் ஆறு புழு வளர்ச்சி பருவம் அடங்கும். படைப்புழுவானது ஒரு வருடத்திற்கு 6-12 தலைமுறைகளாகப் பெருகும் திறன் கொண்ட இந்தப் பூச்சிகள். மக்காச்சோளத்தில் மிகுந்த பொருளாதார சேதத்தை ஏற்படுத்தக்கூடியது.

தாக்குதல் அறிகுறிகள்:

முதல் மற்றும் இரண்டாம் நிலைப் புழுக்கள் மக்காச்சோள இலைகளின் அடிப்பாகத்தை சுரண்டி உண்கின்றது. அதன் நீள் வடிவ தாக்குதலின் அறிகுறி இலைகளில் காணப்படும். மூன்றாம் மற்றும் மற்ற நிலைப் புழுக்கள் அதிக அளவில் இலைகளின் மேற்பாகத்தைக் கடித்து உண்பதால் நீளமான துளைகள் காணப்படுகிறது. குருத்து பகுதிகளிலும் அதிக சேதத்தை ஏற்ப்படுத்துகிறது. புழுக்களின் எச்சமும் குருத்துப் பகுதிகளில் காணப்படும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த படைப்புழுக்களின் பாதிப்பிலிருந்து மக்காச்சோளப் பயிரை பாதுகாக்க முடியும்.

வயல் சூழல் ஆய்வு

  • மக்காச் சோள வயல் சூழல் ஆய்வை விதை முளைப்புப் பருவத்தில் இருந்தே செயல்படுத்த வேண்டும்.
  • விதை முளைப்பு முதல் பயிர்வளர்ச்சிப் பருவம் வரை (3-4 வாரங்கள்) படைப்புழுவின் தாக்குதல் 5% என்ற சேதார அளவில் இருந்தால் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்க்கொள்வது அவசியம்.
  • படைப்புழுவின் தாக்குதல் நடுநிலை வளர்ச்சிப் பருவதில் (4-6 வாரங்கள்)10 % என்ற பயிர் சேதார நிலை மற்றும் பின் வளர்ச்சிப் பருவதில் (6-8 வாரங்கள்) 20% என்ற பயிர் சேதாரநிலை அளவில் இருந்தால் பயிர் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தல் மிகவும் அவசியம்.

உழவியல் முறைகள்

  • கோடை உழவு: நிலத்தை நன்கு ஆழ உழுதல் அவசியம். இதன் மூலம் மண்ணுக்கு அடியில் (2-3 செ.மீ ஆழம்) உள்ள மக்காச்சோள படைப்புழுக்களின் கூட்டுப்புழுக்கள் மண்ணின் மேற்ப்பரப்பில் தென்படுவதால், பறவை போன்ற இறை உண்ணிகளுக்கு உணவாகி அழிக்கப்படுகின்றன.
  • உழவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் மக்காச்சோளத்தை விதைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், படைப்புழுக்களின் தீவிர பரவலையும், இனப்பெருக்கத்தையும் கட்டுப்படுத்தலாம்.
  • மக்காச்சோள வயலில் ஊடுபயிராக அந்தந்த பகுதிக்கு ஏற்ற பயிறுவகைப் பயிர்களை துவரை, உளுந்து, பாசிப்பயிறு போன்றவற்றில் எதாவது ஒரு பயிரை விதைக்க வேண்டும்.
  • மக்காச் சோளப்பயிரின் ஆரம்பத்தில் (3௦ நாட்கள் வரை) ஏக்கருக்கு 1௦ என்ற எண்ணிக்கையில் பறவை தாங்கி குச்சிகள், அதாவது T வடிவக் குச்சிகளை வயலில் வைக்க வேண்டும்.
  • வயலைச் சுற்றிலும் பொறிப்பயிர்கள், உதாரணமாக நேப்பியர் புல் நடவு செய்தால் முதலில் மக்காச் சோள படைப்புழுவானது பொறிப்பயிரை தாக்கும்.

கைவினை முறைகள்

  • மக்காச் சோள படைப்புழுவின் முட்டை குவியல் மற்றும் முதல், இரண்டாம் நிலை இளம்புழுக்களை கையால் சேகரித்து நசுக்குதல் அல்லது மண்ணெண்ணெயில் இட்டு அழிக்கலாம்.
  • தாக்குதல் அறிகுறி உள்ள மக்காச் சோளப் பயிரின் நுனிக்குருத்தில் காய்ந்த வயல் மண்ணைப் போடுவதில் மூலம் படைப்புழுக்களை அழிக்கலாம்.
  • ஏக்கருக்கு 15 என்ற எண்ணிக்கையில் இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்து வயலில் உள்ள படைப்புழுக்களின் அனைத்து ஆண் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

உயிரியல் முறைகள்

1.விதை நேர்த்தி

  • பியூவெரியா பாசியானா10 கிராம்/ கிலோ விதை என்ற அளவில் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யலாம்.
  1. இயற்கை எதிரிகளை பாதுகாத்தல்
  • வயலில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையைப் பெருக்க ஊடுபயிராக பயறு வகைப் பயிர்கள் பயிரிட வேண்டும்.
  1. முட்டை ஒட்டுண்ணி விடுதல்
  • இனக் கவர்ச்சிப் பொறியில் 3 பூச்சி என்ற அளவில் விழும்போது டிரைக்கோகிரம்மா பிரிடியோசம் அல்லது டெலினாம்ஸ் ரிமஸ் என்ற நன்மை செய்யும் குழவிகளை ஏக்கருக்கு 50,000 என்ற எண்ணிக்கையில் ஒரு வார இடைவெளியில் வயலில் விட வேண்டும்.
  1. உயிரியல் பூச்சிக்கொல்லி தெளித்தல்
  • மெட்டாரைசியம் அனிசோபிலே என்ற உயிரியல் பூஞ்சாணக்கொல்லியை மக்காச்சோளம் விதைத்து 15-25ஆம் நாட்களில் லிட்டருக்கு 5 கிராம் என்ற அளவில் 10  நாட்கள் இடைவெயளியில் நுனிக்குருத்தில் நனையும்படி கைத்தெளிப்பான் மூலம் தெளித்து படைப்புழுக்களைக்  கட்டுப்படுத்தலாம்.
  • இதே போன்று உயிரியல் பாக்ட்டீரிய பூச்சிக்கொல்லி பேசில்லஸ் துருஞ்சியென்சிஸ் குருஸ்டகி லிட்டருக்கு 2 கிராம் அல்லது ஏக்கருக்கு 4௦௦ கிராம் என்ற அளவில் தெளிப்பதன் மூலம் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

இரசாயன பூச்சிக்கொல்லி கட்டுப்பாடு

1.விதை நேர்த்தி

  • மக்காசோள விதை நேர்த்திக்கு சரியான தகுந்த இரசாயனக் கொல்லிகளை மத்திய பூச்சிக்கொல்லி வாரியம் மற்றும் பதிவுக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.
  1. முதல் கட்ட நடவடிக்கை
  • 5 % பொருளாதார சேதநிலை மக்காச்சோளப் பயிரில் தென்படும்போது மற்றும் முட்டைக் குவியல்  பொறிக்காமல் இருக்க 5 % வேப்பங் கொட்டை கரைசல் (அல்லது) லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி வீதம் அசாடிராக்டின், 1500 பிபிஎம் பயிரின் நுனிக்குருத்தில் கைத்  தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்
  1. இரண்டாம் கட்ட நடவடிக்கை
  • படைப்புழு தாக்குதல் 10-20% என்ற பொருளாதார சேதநிலை இருப்பின், கீழ்கண்ட இரசாயன பூச்சிக்கொல்லிகளை கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவும்
  • ஸ்பினோசாட் ஒரு லிட்டர் தண்ணீருக்கு3 மில்லி என்ற அளவில் தெளிக்கவும் (அல்லது) தியாமெத்தோக்சம் 12.6% + லேம்டா சைக்லொத்தரின் 9.5% ஆகிய இரண்டு இரசாயன பூச்சிக்கொல்லிகளையும் கலந்து லிட்டர் தண்ணீருக்கு 0.5 மி.லி என்ற அளவில் தெளிக்கவும் (அல்லது) குளோரன்டிரானிலிபுரோல் லிட்டர் தண்ணீருக்கு 0.4 மில்லி என்ற அளவில் தெளிக்கவும்.

4.விஷ உணவு பொறி வைத்தல்

  • மேற்கண்ட முறைகளை தவிர விஷ உணவுப் பொறியும் மக்காச்சோள படைப்புழுவிற்கு மிகுந்த பலனை தரும். இது குறிப்பாக முதிர்ந்த 5 மற்றும் 6 ம் நிலை புழுக்களுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றது.
  • அதன்படி 10 கிலோ அரிசி தவிட்டுடன் 2 கிலோ வெல்லம் சேர்த்து 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் உபயோகித்து நன்கு கலக்க வேண்டும். பின்பு மக்காச்சோளப் பயிரின் குருத்தில் இடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இக்கலவையுடன் தியோடிகார்ப் 100 கிராம் என்ற அளவில் நன்கு கலந்து மக்காச்சோள பயிரின் குருத்தில் இட வேண்டும்.

மேற்க்கூறிய ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு முறைகளை மக்காச்சோளப் பயிரில் விவசாயிகள் முளைப்புப் பருவத்திலிருந்தே பயன்படுத்தினால் படைப்புழுத் தாக்குதலிருந்து மக்காச்சோளப் பயிரைக் காப்பாற்றுவதுடன், மிகுந்த மகசூலையும், லாபத்தையும் ஈட்டலாம்.

மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையம், மக்காச்சோள விவசாயிகளுக்கு முட்டை ஒட்டுண்ணியான டிரைகோகிரமா பிரிட்டியோசம் மற்றும் உயிரியல் பூச்சிக் கொல்லிகளான மெட்டாரைசியம்  அனிசோபிளே  மற்றும் பிவேரியா பேசியானா  போன்றவைகளை இலவசமாக  வழங்கிவருகிறது.

மேலும் மக்காச்சோளப் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு ஆலோசனைகளையும் இலவசமாக  வழங்கிவருகிறது. விவசாயிகள் தங்கள் சந்தேகங்களைக் கேட்டு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

கட்டுரையாளர்கள்: முனைவர். சி. ஞானசம்பந்தன், முனைவர். ம. அய்யம்பெருமாள், ம. அமுதா மற்றும் கோ.காளீஸ்வரன். மத்திய ஒருங்கிணைத்த பயிர் பாதுகாப்பு மையம், மத்திய வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகம், இந்திய அரசு, திருச்சிராப்பள்ளி. தொலைபேசி: 0431-2420190/ 2420970. மின்னஞ்சல்- ipmtn16@nic.in

Exit mobile version