Skip to content

நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் கட்டுபடுத்தும் முறைகள்

நெல் நமக்கு முக்கியமான உணவுப்பயிர் ஆகும். உலகின் மொத்த நெல் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது 2018- 2019  இல் நெல்சாகுபடி 116.42 மில்லியன் டன்னாக இருந்த நெல் 2019-2020ம் ஆண்டில் 117.47 மில்லியன் டன்னாக உள்ளது. இந்நிலையில் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வழிமுறைகளை கூர்ந்து ஆராயும் போது உற்பத்தியாகும் சமயத்தில் ஏற்படக் கூடிய இழப்பு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. அவை நெல்லைத்தாக்கும் பூச்சிகள், நோய்கள், களைகள், எலிகள் மூலமும் மற்றும் தானிய சேமிப்பில் ஏற்படக்கூடிய இழப்பாகும். இந்த இழப்பினை ஏற்ப்படுத்தக்கூடிய  பல தீமைப்பூச்சிகளில், ஒரு சில முக்கியமான பூச்சிகளை பற்றியும் அவற்றினை கட்டுப்படுத்தும் முறைகளையும் கீழே காண்போம்.

குருத்துப் புழு அல்லது தண்டுத் துளைப்பான்:

நெற்பயிர்களை அதிகமாக தாக்கும் பூச்சிகளில் முக்கியமானது குருத்து பூச்சி அல்லது தண்டுத் துளைப்பான் ஆகும். இதன் தாக்குதல் பயிர்களின் அனைத்து வளர்ச்சி பருவங்களிலும் தண்டுப் பகுதியைத் தாக்கும்.

தாக்குதல் அறிகுறிகள் :

தாக்கப்பட்ட தண்டுகளில் சிறு துவாரம் காணப்படும். தூர்கட்டும் பருவம் வரை தாக்கும் போது குருத்துகள் காய்ந்து இறந்த குருத்துகள் நடுகுருத்துக் காய்தல் அல்லது தண்டு காய்தல் அறிகுறிகள் காணப்படும். பால் பிடிக்கும் பருவத்தில் தாக்கும் போது நெல் மணிகள் பால் பிடிக்காமல் வெண் கதிர்கள் அல்லது சாவிக் கதிர்கள் தோன்றுகின்றன. குருத்தை இழுத்தால் எளிதில் வந்துவிடும். தாக்கப்பட்ட குருத்தை பிளந்து பார்த்தால் நடுவே மஞ்சள் நிற புழுக்களைக் காணலாம் மற்றும் தண்டின் அடிப்பகுதியில் உள்ள துவாரத்தில் புழுக்களின் கழிவுகளைக் காணலாம். வளர்ந்த பயிரில் வெண் கதிர் உருவாகி மணிகள் பால் பிடிக்காது.

கட்டுபடுத்தும் முறைகள் :

  • கோடையில் ஆழ உழவு செய்தல்
  • சரியான இடைவெளியில் நடுதல், ஒரே சமயத்தில் நடவு செய்தல்
  • முட்டைக் குவியல்கள் புழுக்களை கையால் சேகரித்து அழித்தல்
  • விளக்குப் பொறி , இனக்கவர்ச்சி பொறி அமைத்தல்
  • முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் ஒரு ஏக்கருக்கு 2CC  என்ற அளவில் 10–15 நாள்கள் இடைவெளியில் 3–4 முறைகள் தேவைக்கேற்றவாறு பயன்படுத்துதல்
  • 3% வேப்பெண்ணெய் ஏக்கருக்கு 4–6 லி வேப்பெண்ணெயை 200 லி தண்ணிரில் மற்றும் 5% வேப்பங்கொட்டைக் கரைசல் தெளித்தல்.
  • இவற்றின் தாக்குதல் பொருளாதாரச் சேத நிலையைக் கடக்கும் போது பூச்சிக் கொல்லி மருந்துகளான கார்டப் ஹைட்ரோகுளோரைடு 50 SP @ 400 கிராம் (அ) குளோரோன்டிரிபைரோல் 18.5 SP @  60 மிலி (அ) ப்ளுபெண்டமைடு 30 மிலி இவற்றில் எதாவது ஒன்றினை 200 லிட்டர் தண்ணிரில் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிக்கலாம்.

இலை சுருட்டுப் புழு அல்லது இலை மடக்குப் புழு

நெற்பயிரைத் தாக்கக் கூடிய பூச்சிகளில் இதுவும் முக்கியமான பூச்சியாகும். நடவு பயிர் முதல் பூக்கும் பருவம் வரை தாக்கி இலைகள் சுருட்டட்ப்பட்டு அல்லது இலை மடக்கப்பட்டு பாதிப்பை ஏற்ப்படுத்தும்.

தாக்குதல் அறிகுறிகள் :

புழுக்கள் இலையை நீளவாக்கில் அல்லது இரு இலைகளை சுருட்டி அல்லது இலையை மடக்கி உட்புறத்தில் இருந்து கொண்டு பச்சயத்தை சுரண்டும். இதனால் இலைகள் வெள்ளையாகி பின் காய்ந்து விடும். மர நிழல்கள் மற்றும் வரப்பு ஓரங்களில் தாக்குதல் முதலில் தோன்றி பின் விரைவில் பரவும். கதிர் வரும் சமயத்தில் தாக்குதல் அதிகமானால் நெல்மணிகள் முற்றுவது பாதிக்கும்.

கட்டுபடுத்தும் முறைகள் :

  • கோடையில் ஆழ உழவு செய்து , வயல் வரப்புகளைச் செதுக்கி சுத்தம் செய்தல்
  • மாற்றுப் பயிர் சாகுபடி செய்தல்
  • இப்பூச்சித் தாக்கும் மற்ற செடிகள், களைகளை நீக்க வேண்டும்
  • கயிறு கொண்டு இழுத்து இலைச் சுருட்டுப் புழுக்களை கிழே விழச் செய்தல்
  • பேசில்லஸ் துரிஞ்சியேன்சிஸ் 300 மிலி / ஏக்கர் தெளித்தல்
  • விளக்கு பொறி வைத்து அந்துப் பூச்சிகளைக் கவர்தல் (5 பொறிகள் / ஏக்கர் தெளிதல்)
  • முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் ஒரு ஏக்கருக்கு 2CC  என்ற அளவில் வயல்களில் வெ ளியிடுதல்
  • 3% வேப்பெண்ணெய் ஏக்கருக்கு 4–6 லி வேப்பெண்ணெயை 200 லி தண்ணிரில் மற்றும் 5% வேப்பங்கொட்டைக் கரைசல் தெளித்தல்.
  • இவற்றின் தாக்குதல் பொருளாதாரச் சேத நிலையைக் கடக்கும் போது பூச்சிக் கொல்லி மருந்துகளான கார்டப் ஹைட்ரோகுளோரைடு 50 SP @ 400 கிராம் (அ) ப்ளுபெண்டமைடு 30 மிலி (அ) பிப்ரோனில் 400 மிலி இவற்றில் எதாவது ஒன்றினை 200 லிட்டர் தண்ணிரில் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிக்கவும்.

புகையான்:

இப்பூச்சியானது நடவுப் பயிர் முதல் அறுவடைப் பருவம் வரை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும்

தாக்குதல் அறிகுறிகள் :

பயிர்களில் தாக்குதல் ஆரம்பம் முதல் அறுவடைப்பருவம் வரை நீடிக்கும். இவைகள் சாற்றை உறிஞ்சுவதால் பயிர் வலுவிழுந்து சாய்ந்துவிடும். பயிர்கள் முதலில் மஞ்சள் நிறமாகி பின்னர் பழுப்பு நிறமாகி புகைந்தது போல் திட்டு திட்டாகக் காணப்படும். இந்த பூச்சிகள் புற்குட்டை வைரஸ் நோயைப் பரப்புகிறது.

கட்டுபடுத்தும் முறைகள் :

  • எதிர்ப்பு சக்தி இரகங்களான ADT 36, Co 42, Co 46, ASD 18, PHP 71 ஐ பயிரிடலாம்
  • அடிக்கடி நீரை வடிக்கட்டிப் பாய்ச்சிடுதல், நாற்றங்களில் அடிதாள்களை நீக்கிடுதல்
  • குஞ்சுகள், தாய்ப்பூச்சிகளை கையால் சேகரித்து அழித்தல்
  • முட்டை, குஞ்சு, வளர்ந்த நிலை உயிருண்ணிகள் மற்றும் முட்டை ஒட்டுண்ணிகளைப் பாதுகாப்பதோடு ஊக்கப்படுத்தியும் கட்டுப்படுத்தலாம். பூஞ்சாண உயிர் எதிரிகளையும் மெட்டரைசியம் பயன்படுத்தலாம்.
  • இயற்கை எதிரிகளான மிரிட் நாவாய்ப் பூச்சி, மைக்ரோவிலியா போன்றவற்றை ஊக்குவித்தல்
  • இவற்றின் தாக்குதல் பொருளாதாரச் சேத நிலையைக் கடக்கும் போது பூச்சிக் கொல்லி மருந்துகளான பியுபுரோபேசின் 25 SC @ 400 மிலி (அ) டைநிட்ரிபூயூரான் 20 SG @ 200 கிராம் (அ) இமிடக்லோப்ரிட் 17.8 SL @ 200 மிலி (அ) புரபனோபாஸ் 50 EC @ 400 மிலி  இவற்றில் எதாவது ஒன்றினை 200 லிட்டர் தண்ணிரில் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிக்கவும்.

கட்டுரையாளர்கள்:

  1. ஜோ. மேரி லிசா, முதுநிலை ஆராய்ச்சியாளர் (பூச்சியியல் துறை), வேளாண் கல்வி நிறுவனம், குமுளூர், திருச்சி. மின்னஞ்சல்: lishajoseph28@gmail.com
  2. முனைவர். சீ. விஜய், உதவி பயிற்றுநர் (பூச்சியியல் துறை), வேளாண் கல்வி நிறுவனம், குமுளூர், திருச்சி. மின்னஞ்சல்: entovijay@gmail.com

Leave a Reply

editor news

editor news