Site icon Vivasayam | விவசாயம்

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-7)

கொட்டும் மழையும்- கோப்பன் வகைப்பாடும்

“நல்லோர் ஒருவர்யிருக்க அது பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை” என்பது நம் சங்கத் தமிழ் நூல் நமக்கு அளித்த அறிவுரையாகும். ஆனால் இதில் வழிந்து வருவது இலக்கிய நயமும் ஒரு அழகிய இலக்கிய உவமையும் ஆகும். ஆனால் எல்லா இடங்களிலும் மழை ஒரே அளவாய் என்றுமே பொழிவதில்லை. இவற்றை அறிய பல விதமான வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் தாவரங்கள், தாவரங்களின் வகைகள், இயல்புகளை வைத்து அவ்விடத்தில் மழைப்பொழிவை நாம் எளிதில் வகைப்படுத்தலாம்.

உதாரணமாய் பைன் மரங்கள் வளரும் பகுதிகள் பனி மண்டலங்களாக இருக்கும். கள்ளி செடிகள் வளரும் இடங்கள் வறண்ட பகுதிகளாக இருக்கும். இவை நமக்குத் தெரிந்த சில வகைகள் ஆகும். எனினும் இதில் திருந்திய தெளிவான பயன்பாடுதான் விளாதிமீர் கோப்பன் வழங்கிய வகைபாடாகும். இவர் ருசிய ஜெர்மானிய புவியியலாளர் மற்றும் தாவரவியலாளர் ஆவார்.

ருசிய பேரரசி இரண்டாம் கேத்தரின் அவர்களால் ஜெர்மனியிலிருந்து அழைக்கப்பட்ட பல மருத்துவர்களில் கோப்பனின் தாத்தாவும் ஒருவராவார். அன்று குடிபெயர்ந்த கோப்பண்  குடும்பம் அங்கே தங்கி தன் வாழ்வைத் துவங்கியது. பின்பு   கோப்பன் அங்கே தன் படிப்புகளை முடித்து ஜெர்மனி சென்று அறிவியலாளர் ஆனார். இவர் அறிவியல் உலகிற்கு தந்த மிகச் சிறந்த கொடைகளில் ஒன்று தான் கோப்பன் வகைபாடு. இவரை தற்கால காலநிலையின் நிறுவனர் என்று அழைக்கின்றனர். 1850 இல் இருந்து 10 ஆண்டுகள் அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலில் பயணிக்கும் கையேட்டை உருவாக்கித் தந்து கொண்டிருந்தார்.

பின்பு ரஷிய வானிலை ஆய்வு மையத்தில் பணிபுரிந்தார். அங்கிருந்து ஜெர்மனி திரும்பிய கோப்பன் சிலகாலம் ஜெர்மானிய வானிலைத் துறையில் பணிபுரிந்தார். பின்பு அவர் அப்பணிகளை எல்லாம் துறந்து தன் ஆய்வை தொடங்கினார். பலூனை  பயன்படுத்தி வளிமண்டலத்தின் அடுக்குகளை கண்டுபிடிக்க முயன்ற கோப்பன் 1884இல் பருவநிலைப் பகுதிகள் பற்றிய முதல் வரைபடத்தை வெளியிடுகிறார். அங்கிருந்து அவருடைய ஆய்வு துவங்கி 1900இல் வெளிவருகிறது. இதை கோப்பன் கால நிலை வகைப்பாடு என்கின்றனர். இவை மேலும் மெருகேற்றப்பட்டு மேலும் பல மாறுதல்களுக்கு உட்பட்டு 1936 இல் முழுதாய் நிறைவுபெறுகிறது. இன்று கால நிலை பகுதிகளை கணக்கிடுவதற்கு கோப்பனின் வகைப்பாடு தான் மூலமாக விளங்குகிறது. டீகாண்டல் என்றழைக்கப்படும் தாவரவியலாளர் இன் 5 முக்கிய தாவர பிரதேசங்களை கோப்பன் ஏற்கிறார்.

1) மிக வெப்பநிலைக்குரியவை

2) வறட்சிக்குரியவை

3) இடை வெப்பநிலைக்கு உரியவை

4) நுன் வெப்பநிலைக்கு உரியவை

5) மிகத் தாழ்வெப்பநிலைக்குரியவை என்று பிரிக்கிறார் டீ காண்டல்

இவை அப்பகுதியில் வாழும் தாவரங்களை கணித்து அதன்பொருட்டு மழையின் அளவை பிரிக்கும் ஓர் வகைப்பாடாகும். இவற்றை பயன்படுத்திய கோப்பன் காலநிலையையும் இதனடிப்படையிலேயே பெறுகின்றார். முதலில் உலகை ஐந்து பெரும் காலநிலையாக பிரிக்கிறார்.  அவை

1) அயனமண்டல மழைக்காலநிலை

2) உலர்ந்த காலநிலை

3) இளஞ்சூடு மழைக்காலநிலை

4) நுனி குளிர் மழை காலநிலை

5) முனைவு காலநிலை என்று பெரும் பிரிவுகளாக பிரிக்கிறார்

மேலும் இவற்றை இரண்டாம் கட்டமாக (f,m,w,S,W,s,T,F) என்றும் பிரிக்கிறார்

சில தனித்த இயல்புகளைக் கொண்ட சில பகுதிகளை (a,b,c,d,h,K,H) என்று மேலும் சிலவற்றை பிரிக்கிறார். உதாரணமாக தமிழ்நாடு ஆந்திர கடல் பகுதிகளை கோப்பன் (75 லிருந்து 100 சென்டிமீட்டர் வருடாந்திர மழைப் பொழியும் இடம்) வகைப்பாட்டில் As என்று பிரிக்கிறார். கங்கை சமவெளி பகுதிகளில் (100 சென்டிமீட்டர் வருடாந்திர மழை பொழியும் இடம்) Cwg என்று பிரிக்கிறார். பின்பு ராஜஸ்தானின் மேற்கு பகுதிகளை (12 சென்டி மீட்டருக்கும் குறைவான வருடாந்திர மழை பொழியும் இடம்) BWhw என்று பிரிக்கிறார்.

இப்படித்தான் உலகின் பல இடங்களை மழைப்பொழிவை காரணமாய் வைத்து கோப்பன் வகைப்பாட்டில் பிரிக்கப்படுகிறது.

சரி மழையின் வகைகள் என்ன பருவ நிலைக்கும் புயல் மழைக்கும் வேறுபாடுகள் இருக்கின்றனவா?

அடுத்த இதழ்களில் பார்ப்போம்…….

கட்டுரையாளர்: அன்பன் செ. விக்னேஷ், இளநிலை வேளாண்மை பட்டதாரி, குளித்தலை, தொடர்பு எண்: 8344848960, மின்னஞ்சல்: vickysvicky42@gmail.com

Exit mobile version