Skip to content

விஞ்ஞானி டூ விவசாயி – ஹரி நாத் காசிகணேசன்

உலகில் பல தொழில்கள் இயங்கி கொண்டியிருந்தாலும், ஏர்த் தொழிலின் பின்னேதான் அனைவரும் சுற்ற வேண்டிருக்கிறது. இந்த கருத்திற்கு இணங்க தமிழ்நாட்டில் பிறந்து, அமெரிக்காவில் விஞ்ஞானியாக பணிபுரிந்து, அப்பணியை விடுத்து மீண்டும் தாயகம் திரும்பி இயற்க்கை விவசாயம் செங்கல்பட்டில் உள்ள கலிவந்துபட்டு கிராமத்தில் செய்து வருகிறார், முனைவர். ஹரி நாத் காசிகணேசன் அமெரிக்காவில் நோய் தீர்க்கும் மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வந்தவர் முனைவர்  ஹரிநாத். நமது தமிழ்நாட்டில் மிகவும் போற்றக்கூடிய இயற்கையான முறை உழவுத் தொழிலைத் தேர்ந்தெடுத்து மிகவும் ஆரோக்கியமாக செய்து வருகிறார். இது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை:

எனது சொந்த கிராமம் பென்னாகரம். அடிப்படையில் நான்  விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பாவை சிறு வயதில் இழந்தேன். அம்மாதான் தனியாக  என்னை வளர்த்தார். சென்னையில் முதுநிலை மனித உடலயியல் படிப்பை முடித்துவிட்டு, வேலூர்  சிஎம்சியில் பேராசிரியராக பணி புரிந்தேன். பிறகு 1993- ஆண்டு மத்திய அரசின் DRDO நிறுவனத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளராக பணியில் சேர்ந்தேன். அந்த நிறுவனத்தின் ஆணி வேராக இருந்த டாக்டர் அப்துல்கலாம் அய்யாவை நன்றாக எனக்கு தெரியும், உழைப்பிற்க்கு இலக்கணம் அவர்தான் என கருதுகிறேன். அவரிடம் இருந்து நான் கற்றவை அதிகம். அவர் எனது வாழ்க்கை பயணத்தில் பெரிய மாற்றத்தை விதைத்துள்ளார். பின் 2005-இல் அமெரிக்கா சென்றேன். அங்கே சார்லெஸ்டன், தெற்க்கு கலிபோர்னியா மருத்துவ பல்கலைக்கழத்தில் இணைந்து பணியாற்றினேன். தொடர்ந்து பத்து ஆண்டுகளில் இருதயத் துறையில் மருத்துவ பயிற்சியாளராக பொறுப்பேற்றேன்.

ஊரில் அம்மாவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தமிழகம் திரும்பினேன். அம்மா முழங்கால் வலி மற்றும் இடுப்பு வலியால் அவதிப்பட்டார். மூட்டு மற்றும் கழுத்து வலிகளை குறைக்கவும், வலியை உணராமல் செய்யவும், வீரியமுள்ள வலி போக்கி மருந்துகள் செலுத்தப்பட்டன. இதன் விளைவாக அம்மாவின் குடலில் புண்கள் ஏற்பட்டன. கூடவே வலியும். அம்மாவின் உடல்நிலையில் முன்னேற்றத்திற்கான படிநிலை ஏதுவும் தென்படவில்லை. நாட்கள் போக போக அம்மாவின் உடல்நிலை மிகவும் மோசமான நிலை எட்டியது. அந்த நேரத்தில் என் எண்ணத்தில் உதித்தது, அமெரிக்காவில் மருந்துகளை கண்டுபிடிக்கும் தொழிலில் பணிபுரிந்த என்னால் அம்மாவின் உடல்நிலையை சரி செய்ய முடியவில்லை என்று வேதனை மனதில் குடிகொண்டது. அம்மாவின் வலிக்கு மருந்து தர முடியவில்லையே என்று எண்ணம் நாளுக்கு நாள் மனவலி அதிகரித்தது.

ஒரு கட்டத்தில் பாரம்பரிய மருந்து முறை எனது நினைவில் வந்து சென்றது. முருங்கை இலையை கொத்தாக தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த வடிநீரை அம்மாவுக்கு தினமும் கொடுத்து வந்தேன். அதன்பிறகு வலி சிறிது சிறிதாக குறையத் தொடங்கியது. சில மாதங்களில் அம்மா முழுமையாக குணம் அடைந்தார், மூட்டு மற்றும் கழுத்து வலி மாயமாக மறைந்தது. இந்த திருப்பம் என்னுள் ஒரு தீயை மூட்டியது. பாரம்பரிய வைத்தியம், இயற்க்கை விவசாயம் நோக்கி    எனது கவனம் திரும்பியது.

செங்கல்பட்டில் உள்ள கலிவந்துபட்டு கிராமத்தில் 2015-இல்  நிலம் வாங்கினேன். இயற்கை  விவசாய முறையில் காய்கறிககையும், மூலிகை செடிகளையும் பயிரிட்டேன். தமிழகத்தில் பல பகுதியில் பயணித்து மாப்பிளை சம்பா, கிச்சிலி சம்பா, கருங்குருவை, வாசனை சீராக சம்பா, கருப்பு கவுனி போன்ற மருத்துவகுணம் மிக்க நெல் வகைகளை குறித்து கேட்டு தெரிந்து கொண்டேன். தமிழ்நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறையான சித்தர் பாடல்களில் மருத்துவ குணங்கள் உள்ள உணவுப் பொருட்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளன. அவற்றை பயிரிடவும் செய்தேன். முருங்கை, கறிவேப்பிலை, நெல்லி மரங்களையும் வளர்த்தேன்.

சிறிய கால இடைவேளையில் முருங்கை வைத்தியத்தை தொடங்கினேன். மூட்டுவலி, சர்க்கரை நோய், ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு இந்த முருங்கையின் மருத்துவ மூலங்குளுடன், சில மூலிகைகளையும் சேர்த்து மருந்தாக கொடுக்க தொடங்கினேன். அதில் வெற்றி கண்டு கூடுதல் ஆராய்ச்சிக்காக சில நிறுவனங்களையும் அணுகியுள்ளேன். விவசாயமும் ஒரு விஞ்ஞானம்தான். பாரம்பரிய முறையில் அரைத்து எடுக்க படும் எண்ணெய் வகைகள் பார்க்க பொன்நிறமாக இருக்ககாது. ஆனால்  பொண்ணாக மின்னச் செய்யும் என்கிறார் விஞ்ஞானியும், விவசாயியுமான முனைவர். ஹரி நாத் தற்போது அவர் மூலிகைத் தாவரங்களையும், கொடிகளையும் கண்டறியும் களப்பணியில் அவர் மட்டுமின்றி பென்னாகரம் சுற்றுவட்டார பகுதியில் பட்டப் படிப்பு படித்த மாணவர்களையும் இதில் இணைத்துக் கொண்டு பெரும்பணியை தொடங்கியுள்ளார்.

அம்மாணவர்கள் பெ. செந்தில் இளநிலை வேளாண்மை மற்றும் ச.சபரிநாதன் இளநிலை வேதியியல், தற்போது இவரின் வழிகாட்டுதலின்படி மித்ரா ப்ரோ பையோட்டிக்  ஹெல்த் மிக்ஸ் கேர் என்ற பெயரில் இயற்கை சார்ந்த மூலிகை மருந்து பொருள்கள் மற்றும் சிறுதானியக் கலவை தயார்செய்து விநியோகித்து வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள ஓகேனக்கல் நீர்வீழ்ச்சியை அறியாதோர் யாரும் இருக்கமாட்டார்கள், ஓகேனக்கல் சுற்றியுள்ள வனப்பகுதியில் தான் முனைவர். ஹரி நாத் களப்பணியில் ஈடுபட்டுள்ளார். அவரின் தேடலில் விளைத்த அபூர்வ மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள் தண்ணீர்விட்டான் கிழங்கு, கடுக்காய், காட்டு ரக கீரைகள், கள்ளி முள்ளியான், அபூக்கொடி (கோவச் செடி) போன்ற முன்னோர்கள் அறிந்த அரியவகை மூலிகைகளை மக்கள் அறிந்து பயன்படும் வகையில் இந்தத் தலைமுறை மட்டுமல்லாது வருங்கால தலைமுறை அறியும் வகையில் விழிப்புணர்வு செய்து வருகிறார்.. தான்  பெற்ற  இன்பத்தை இந்த வையகமும் பெறட்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இவர் முருங்கையில் “MORINGA BULLET” என்கிற மருந்தை தயாரித்து அதை 80%  மருந்தை மக்களுக்கு விற்பனை செய்கிறார், மீதம் 20% மருந்தை சமூக சிந்தனையோடு இலவசமாக  ஏழை, எளிய மக்களுக்கு  தருகின்றார். அவர் சேவை மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் கூறி விடை பெற்றேன்.

முனைவர். ஹரி நாத் காசிகணேசன் அவர்களைத் தொடர்பு கொள்ள: 8056170742.

கட்டுரையாளர்:

திரு. து. சத்தியராஜ், முனைவர் பட்டப்படிப்பு மாணவர், பயிர் சூலாக்கவியல் மற்றும் மரபியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: sathyarajagri17@gmail.com

தொலைபேசி எண்: 8667072033.

Leave a Reply

editor news

editor news