Vivasayam | விவசாயம்

மரவள்ளி கிழங்கின் நாற்றங்கால் செய்முறை

தமிழகத்தில் அதிக அளவு பயிரிடக்கூடிய பயிராக மரவள்ளி திகழ்கிறது. இதன் கிழங்கானது கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்-சி நிறைந்து காணப்படுகிறது. வளரும் நாடுகளுக்கு மரவள்ளியானது ஒரு பிரதான பயிராக கருதப்படுகிறது. மேலும் இதன் கிழங்கானது சமையலுக்கும் மற்றும் பல வணிக முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களான ரவா, ஜவ்வரிசி,  மைதா மற்றும் மதுபான உற்பத்தியில் பயன்படுகிறது. மேலும் காகிதம் மற்றும் ஜவுளி உற்பத்தியிலும் பெரும் பங்களிக்கிறது. இத்தகைய வணிக முக்கியத்துவம் வாய்ந்த மரவள்ளியினை நாற்றங்கால் முறையில் தரமான நாற்றுக்களை உற்பத்தி செய்து நிலத்தில் நடவு செய்து விளைச்சலை அதிகரிக்கலாம்.

விதைத்துண்டுகளை உற்பத்தி செய்தல்

  • நல்ல தரமான வைரஸ் நோய் தொற்று இல்லாத செடியினை தேர்ந்தெடுத்து அதன் குச்சிகளை விதைகளுக்காக பயன்படுத்த வேண்டும்.
  • விதைக்குச்சிகளை சேகரித்த பிறகு அதனை சிறிது காலம் உலர வைப்பதனால் முளைப்பு திறனை அதிகரிக்கலாம்.
  • வழக்கமாக 15-20 செ.மீ நீளமுள்ள தண்டு குச்சிகளை பயன்படுத்துவார்கள்.
  • இப்போது மேம்படுத்தப்பட்ட முறையில் குறைவான சிறு தண்டுக்குச்சிகளைப் பயன்படுத்தி அதிக விளைச்சலை பெறலாம். அவ்வாறானவை,

சிறு துண்டுகள் (Mini setts)

  • 4 கணு துண்டுகள் (4 Budded setts)
  • 2 கணு துண்டுகள் (2 Budded setts)
  • நுனி துண்டுகள் (Tip cuttings)
  • இவ்வாறாக உற்பத்தி செய்யப்பட்ட விதைத் துண்டுகள் எவ்வித நோய் தாக்குதல் இல்லாமலும், கணுக்கள் சேதமடையாமலும் மற்றும் சம அளவுள்ள துண்டுகளாக இருக்க வேண்டும்.

சிறு துண்டுகள் (Mini Setts)

வழக்கமான முறையில் 2 செ.மீ நீளமுள்ள, 10-12 கணுக்கள் உள்ள குச்சிகளை பயன்படுத்துவார்கள் ஆனால் சிறு துண்டுகள் மூலம் குறைந்த குச்சிகளை பயன்படுத்தி துண்டுகளின் பெருக்க விகிதத்தை அதிகரிதிக்கலாம்.

விதை துண்டுகளை நேர்த்தி செய்தல்

விதை துண்டுகளை தயார் செய்த பிறகு நோய் தாக்குதலில் இருந்து காப்பதற்கு பூஞ்சாண கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். அவ்வாறாக 1 லிட்டர் தண்ணீரில் 1 கிராம் கார்பென்டாசிம் கரைசலை தயாரித்து அதில் துண்டுகளை 15 நிமிடம் வரை ஊறவைக்க வேண்டும்.

நாற்றங்கால் மேலாண்மை

  •  நாற்றங்காலிற்கு 35% நிழற்பாங்கான மற்றும் நீர் வசதி அருகில் உள்ள இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  • 1 மீட்டர் அகலமும், 20 செ.மீ உயரமும் மற்றும் தேவையான அளவு நீளம் கொண்ட மேட்டுப்பாத்தி அமைத்து அதில் சிறு துண்டுகளை நடவு செய்யலாம்.

மூன்று முறைகளில் நடவு செய்யலாம்

  • செங்குத்தான நடவு (90°)
  • சாய்வான நடவு (45°)
  • கிடைமட்ட நடவு

  • துண்டுகளை 5×5 செ.மீ இடைவெளியில் மேட்டுப்பாத்தியில் நடவு செய்ய வேண்டும்.
  • துண்டுகள் 9 -15 நாட்களுக்குள் முளைக்க ஆரம்பித்துவிடும்.
  • 15-25 நாட்களுக்கு பிறகு முளைத்த நாற்றுக்களை நிலத்தில் நடவு செய்யலாம்.
  • முளைக்காத நோய் மற்றும் பூச்சி தாக்குதலுக்கு உள்ளான நாற்றுக்களை நாற்றங்காலில் இருந்து நீக்கிவிடலாம்.
  • நல்ல தரமான நாற்றுகளை மட்டுமே நாற்றங்கால் மூலமாக பெற்று விளைச்சலை அதிகரிக்கலாம்.

கட்டுரையாளர்:

ப. ஜெயசங்கரன்

இளநிலை வேளாண்மை,

இளநிலை ஆராய்ச்சியாளர்,

சுற்றுச்ச௲ழல் அறிவியல் துறை,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை -3.

மின்னஞ்சல் – jayasankar.js03@gmail.com

Exit mobile version