ஒரு தாவரத்தின் வளர்ச்சி என்பது இரண்டு காரணிகளால் நிர்வகிக்கப்படுகிறது. ஒன்று வளமான மண், இரண்டு தேவையான பருவநிலை. ஒரு விவசாயியின் பயிர் சாகுபடி நல்ல மகசூலை தருமா? அல்லது தோல்வியில் முடியுமா? என்பதும் இதைச் சார்ந்தே அமைகிறது. பண்ணை சார்ந்த உரங்கள், பசுந்தாள் உரங்கள், மண்புழு உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் போன்றவற்றை தேவையான அளவு இட்டு சிறந்த வடிகால் வசதியுடன் பாதுகாத்தாலே போதும் மண்ணின் வளத்தை கூட்டிவிடலாம். ஆனால் பருவநிலை மாற்றத்தை நம் ஒருவரால் மாற்றிவிட முடியுமா? என்றால் முடியாது. ஏனெனில் இது பல காரணிகளை உள்ளடக்கியது. ஆனால் மாறுகின்ற பருவநிலைக்கு ஏற்ப சாதுரியமாக பயிர் தேர்வு மற்றும் மேலாண்மை முறைகளை செயல்முறைப்படுத்துவதன் மூலம் இதனை சரிசெய்யலாம். திடீர் பருவநிலை மாற்றம் நோய்கள் மற்றும் நோய் உருவாக்கும் காரணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றது. நோய்கள் மற்றும் நோய் உருவாக்கும் காரணிகள் எண்ணிக்கை அதிகரித்தால், அது நேரடியாக மகசூலை பாதிக்கும். ஒரு விவசாயியின் வாழ்வாதாரம் மகசூலை நம்பி உள்ளதால் மகசூலை பாதுகாத்திட பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. நோய்கள் மற்றும் பூச்சிகளின் தாக்குதல் வந்தபின்பு பயிர்களை பாதுகாக்க ஒரு விவசாயி அதிக பணம் மற்றும் உழைப்பை செலவிட வேண்டியதாக இருக்கிறது. அதனால் மேலோங்கிய நோய்களின் தீவிரத்தை முன்கூட்டியே கணிப்பது அவசியம். இதனைப் பல ஆண்டுகளுக்கு முன்பே நமது அவ்வையார் “பருவத்தே பயிர் செய்“ என்றும், நம் அய்யன் திருவள்ளுவர் தனது 483 வது திருக்குறளில்
“அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்”
குறள் விளக்கம்,
அதாவது ஒரு செயலை செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும், தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால், செய்வதற்கு அரிய செயல் என்று எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பொழிந்து வருவதால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிலக்கடலை பயிர் மானாவாரியாகவும் மற்றும் இறவைப் பயிராகவும் பயிரிடப்பட்டு வருகின்றன. தற்போது காற்றில் நிலவிவரும் அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக நோயின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிலக்கடலையின் மகசூலை பாதிக்கும் பல காரணிகளில் நோய்களினால் ஏற்படும் சேதம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றில் பூஞ்சாணங்கள் மற்றும் நச்சு கிருமிகளால் ஏற்படும் நோய்கள் அதிகமான சேதத்தை விளைவிக்கும்.
நிலக்கடலை சாகுபடியை பெரிதும் பாதிக்கும் நோய்கள் ஆவன,
1.டிக்கா இலைப்புள்ளி நோய்
2.இலை துரு நோய்
3.தண்டு மற்றும் வேர் அழுகல் நோய்.
இந்த நோய்களின் தீவிரத்தை கட்டுப்படுத்திட சில வழிமுறைகளைக் கையாள வேண்டியது அவசியம்.
டிக்கா இலைப்புள்ளி நோய்
இதில் முன்பருவ இலைப்புள்ளி நோய் மற்றும் பின்பருவ இலைப்புள்ளி நோய் என இரண்டு வகைப்படும்.
முதலில் தோன்றக் கூடிய முன்பருவ இலைப்புள்ளி நோய் பெரும்பாலும் விதைத்த 30 நாள்களில் தோன்றும். முதலில் இலைகளில் கருமைநிற வட்ட வடிவப் புள்ளிகள் சிறியதாகத் தோன்றும். நாளடைவில் இவை விரிவடைந்து 3-8 மி.மீட்டர் விட்டம் வரையிலான புள்ளிகளாக மாறும். ஒரே இலையில் சில புள்ளிகளிலிருந்து பல புள்ளிகளாக பெருக்கமடையும். புள்ளிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து , ஒழுங்கற்ற வடிவமாக மாறும். கரும் பழுப்புநிற புள்ளிகளைச் சுற்றி பளிச்சென்ற மஞ்சள் நிறவளையத்தைக் கொண்டும் அடிப்பரப்பு இளம் பழுப்பு நிறமாகவும் தென்படும்.
பின்பருவ இலைப்புள்ளி நோயின் அறிகுறி பயிர் விதைத்த சுமார் 40-50 நாள்களில் தோன்றும். இந்த நோய் காரணி தோற்றுவிக்கும் புள்ளிகள் சிறியதாகவும், சுமார் 1-6 மி. மீட்டர் வரை விட்டத்தைத் கொண்டும் காணப்படும். புள்ளிகளின் மேற்பரப்பு கரும்பழுப்பு அல்லது கருமை நிறத்திலும், அடிப்பரப்பு நல்ல கருமை நிறத்திலும் தென்படும். இப்புள்ளிகளைச் சுற்றி மஞ்சள் நிற வளைப்பகுதி காணப்படாது. புள்ளிகள் பெரும்பாலும் இலைகளில் காணப்பட்டாலும், இலைக்காம்பு, தண்டு, பூக்காம்பு போன்ற பாகங்களிலும் தென்படும். பூக்கும்பருவத்திலிருந்து அறுவடை வரையில் நோயின் தீவிரம் அதிகமாகக் காணப்படும். இலையின் மேற்பரப்பு நோயினால் பாதிக்கப்படும் போது ஒளிச்சேர்க்கை தடைபடுகிறது, ஒளிச் சேர்க்கை தடைபட்டால் அது நேரடியாக உணவு உற்பத்தியை பாதிக்கும். நோய் அதிகமாகத் தாக்கிய இலைகள் காய்ந்து உதிர்ந்துவிடும். பூக்காம்புகள் தாக்கப்படும் போது காய் பிடிப்பதும் பாதிக்கும் .
மேலாண்மை:
நோயினால் தாக்கப்பட்டு நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் இலைகள் , செடியின் பாகங்கள் போன்றவற்றை சேகரித்து எரித்துவிட வேண்டும் . அறுவடைக்கு பின்னர் கொடிகளை நிலத்திலிருந்து முழுமையாக அப்புறப்படுத்துதல் அல்லது எரித்து விடுதல் வேண்டும் . நோய் தாக்காத பயிரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விதைகளை சரியான பருவத்தில் விதைப்பு செய்தல் நல்லது. இலைப்புள்ளி நோய்களினால் அதிகம் பாதிக்கப்படாத ரகங்கள் T-64, C-501, MH-4, TMV-6 மற்றும் TMV-10. நிலக்கடலை உடன் ஊடுபயிராக பச்சைப்பயிறு 4:1 என்ற விகிதத்தில் பயிரிடும்போது நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும். ஒரே நிலத்தில் தொடர்ந்து நிலக்கடலை பயிரிடுவதைத் தவிர்த்து பயிர் சுழற்சி முறையை கையாள வேண்டும்.
ஒரு கிலோ விதைக்கு, விதை நேர்த்தியாக டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் ப்ளுரோசன்ஸ் 10 கிராம் என்ற அளவில் கலந்து விதைக்கலாம். காற்று மூலம் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த நோயின் அறிகுறி தென்பட்டவுடன், ஏக்கருக்கு கார்பன்டாசிம் 200 கிராம் அல்லது குளோரோதலோனில் 400 கிராம் அல்லது மான்கோசெப் 400 கிராம் அல்லது டெபுனாகொனசோல் 200 மில்லி மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இலை துரு நோய்
இலையில் சிறிய வட்ட வடிவ, ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறம் கொண்ட துரு போன்ற கொப்புளங்கள் இலையின் அடிப்புறத்தில் தோன்றும். பின்னர் இலையின் இரு புறங்களிலும் தோன்றி, மஞ்சள் நிறமாக மாறி இலை சுருங்கி உதிர்ந்துவிடும்.
மேலாண்மை:
நோயினால் தாக்கப்பட்டு நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் இலைகள், செடியின் பாகங்கள் போன்றவற்றை சேகரித்து எரித்துவிட வேண்டும். அறுவடைக்கு பின்னர் கொடிகளை நிலத்திலிருந்து முழுமையாக அப்புறப்படுத்துதல் அல்லது எரித்து விடுதல் வேண்டும். வயல்களில் களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியமானது, ஏனெனில் அதிகப்படியான களைகள் நோயின் தீவிரத்தை ஊக்குவிக்கும் வாய்ப்புள்ளதால் வயலிளும், வயலைச் சுற்றிலும் களைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். நிலக்கடலையில் ஊடு பயிர் செய்வதன் மூலமும் நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம். பாஸ்பரஸ் சார்ந்த உரங்களை இடுவதன் மூலமும் நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம். இலை துரு நோய் வயலில் முழுவதும் பரவிய பின்பு அதனை கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமானது அல்ல ஆனால் தேவைப்பட்டால் மான்கோசெப், ப்ரோபிகொனாசொல் அல்லது குளோரோதலோனில் 3 கிராம் / 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
தண்டு மற்றும் வேர் அழுகல் நோய்
வேர் அழுகல் நோய்க்கு காரணமான பூஞ்சாணங்கள் மண்ணின் மூலம் பரவும் தன்மை கொண்டவை. ஆனால் தண்டு அழுகல் நோய்க்கு காரணமான பூஞ்சாணங்கள் காற்றின் மூலமாகவும், நீர் பாசனம் மூலமும் பரவும் தன்மை கொண்டவை. இந்தியாவில் நிலக்கடலையின் விளைச்சல் இழப்பில் 27 சதவீதம் இந்த நோய்கள் மூலம் ஏற்படுகின்றன. நிலப்பரப்பை ஒட்டியுள்ள தண்டு பகுதிகளில் சிவப்பு மற்றும் பழுப்பு நிற புண் போன்ற அறிகுறிகள் காணப்படும். மண்ணின் அதிகப்படியான ஈரப்பதம் நோயின் தீவிரத்தைக் அதிகரிக்கும்.
மேலாண்மை
கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணில் உள்ள நோயினை உருவாக்கும் காரணிகளை அழிக்கலாம்.
வயலில் அதிகப்படியான தண்ணீர் தேங்காமல் இருக்க மேட்டுப்பாத்தி அல்லது சிறந்த வடிகால் வசதிகளை அமைக்க வேண்டும். பயிர் சுழற்சி முறையை கையாள்வதும், பாதிக்கப்பட்ட செடிகளை வயல்களில் இருந்து அப்புறப்படுத்தி அதனை எரிப்பதும் அவசியமாகும். சாமந்தி பூ சாறு மற்றும் ஜிப்சம் தேவையான அளவு இடுவதன் மூலம் இந்நோயினை கட்டுப்படுத்தலாம். நன்மை தரக்கூடிய டிரைக்கோடெர்மா விரிடி போன்ற நுண்ணுயிரிகளை பயன்படுத்தி விதைநேர்த்தி செய்வதன் மூலமும் அல்லது மக்கிய உரங்களுடன் டிரைக்கோடெர்மா விரிடி உயிர் நுண்ணுயிரிகளை கலந்து வயலில் இடுவதன் மூலமும் இந்நோயினை கட்டுப்படுத்தலாம்.
கட்டுரையாளர்:
க. கோகுலகண்ணன், முனைவர் பட்ட படிப்பு மாணவர், உழவியல் துறை, அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம். மின்னஞ்சல்: gokulakannan.agri@gmail.com