Skip to content

இயற்கை முறை பூச்சி மற்றும் நோய்க் கொல்லி : அக்னி அஸ்திரம், நீம் அஸ்திரா, சுக்கு அஸ்திரா, பிரம்மாஸ்திரம் மற்றும் பீஜாமிர்தம்

அக்னி அஸ்திரம்

இயற்கை முறை பூச்சி கொல்லி

தேவையான பொருட்கள்:

கோமியம் 20 கிலோ, புகையிலை 1 கிலோ, பச்சை மிளகாய் 2 கிலோ, வெள்ளைப்பூண்டு 1 கிலோ மற்றும் வேப்பிலை 5 கிலோ இவை அனைத்தையும் மண் பானையில் (வேறு பாத்திரங்கள் பயன்டுத்த கூடாது, வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு அக்னி அஸ்திரம் பலமிழக்கக்கூடும்) வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக 5 முறை மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். இறக்கி வைத்து மண்பானையின் வாயில் துணியை வேடுகட்டி 2 நாட்கள் அப்படியே வைத்து விடவேண்டும். நீரின் மேல் ஒரு ஏடு போல் ஆடை படியும். அதை நீக்கி விட்டால் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம். மேலும், 100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் அக்னி அஸ்திரம் மற்றும் 3 லிட்டர் கோமியம் கலந்து பயிர்கள் மேல் தெளித்தால் போதும் புழு பூச்சிகள் காணாமல் போய்விடும்.

 

நீம் அஸ்திரா

பூச்சி விரட்டி

தேவையான பொருட்கள்:

நாட்டு மாட்டுச்சாணம் 2 கிலோ, நாட்டு மாட்டுச்சிறுநீர் 10 லிட்டர், வேப்பங்குச்சிகள் மற்றும் வேப்ப இலை 10 கிலோ இவை அனைத்தையும் பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடி வைக்க கூடாது. இக்கரைசலை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவை கலக்கி விடவேண்டும். பின்பு வடிகட்டி வயலில் தெளிக்கலாம். பல வகை கெடுதல் செய்யும் பூச்சிகளுக்கு இது ஒரு நல்ல பூச்சி விரட்டியாகும். இந்த கரைசலை அதிகபட்சம் அறுபது நாட்கள் வைத்திருக்கலாம்.

 

சுக்கு அஸ்திரா

பூஞ்சாணக் கொல்லி

தேவையான பொருட்கள்:

சுக்குத்தூள் 200 கிராம், பசு அல்லது எருமைப்பால் 5 லிட்டர் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். பின்பு குளிர வைக்க வேண்டும். பசு அல்லது எருமைப்பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரமல்லாத பாத்திரங்களில் கொதிக்க வைக்க வேண்டும். மேலே படிந்திருக்கு ஆடையை அகற்றி விடவேண்டும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றை கலந்து வயலில் தெளிக்கலாம். இது மிகச்சிறந்த பூஞ்சாணக் கொல்லியாகும். இவற்றை 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.

 

பிரம்மாஸ்திரம்

அசுவனி   பூச்சி விரட்டி

தேவையான பொருட்கள்:

நொச்சி இலை 10 கிலோ, வேப்பம் இலை 3 கிலோ, புளியம் இலை 2 கிலோ, கோமியம்   10 லிட்டர். இவற்றை 10 லிட்டர் கோமியத்துடன் கலந்து அக்னி அஸ்திரம் தயாரிப்பது போல் மண்பானையில் தயாரிக்க வேண்டும். மேலும், 100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் பிரம்மாஸ்திரம் 3 லிட்டர் கோமியத்துடன் 1 ஏக்கருக்கு தெளிக்கலாம். மாதம் 2 அல்லது 3 முறை தெளிக்கலாம். அசுவனி போன்ற பூச்சிகள் அண்டாது.

 

பீஜாமிர்தம்

வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு நோய்களை தடுக்க

தேவையான பொருட்கள்:

பசு மாட்டு சாணி 5 கிலோ, கோமியம் 5 லிட்டர், சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம், மண் ஒரு கைப்பிடி அளவு, தண்ணீர் 20 லிட்டர்.  இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நன்றாக ஊற விடவேண்டும். விதை நேர்த்தி செய்ய விதைகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நாற்றுகளாக இருந்தால் அதன் வேர்களை நன்றாக நனையவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும். பயன்கள் : வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு  நோய்கள் தடுக்கப்படும்.

 

கட்டுரையாளர்:

  1. முனைவர். நெ. வினோதினி, த. பூவரசன் மற்றும் முனைவர். வே. மனோன்மணி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை- 641003.

மின்னஞ்சல்: ns.vinothini93@gmail.com

 

Leave a Reply

editor news

editor news