Vivasayam | விவசாயம்

தர்பூசணியில் பழ ஈ தாக்குதலும் மேலாண்மையும்

பழ ஈக்கள், பொதுவாக பேக்டோசீரா (Bactocera sp.) என்ற பேரினத்தையும், டிப்டீரா (Diptera) வகுப்பையும் சார்ந்தவையாகும். இதில் 4000 – க்கும் மேற்பட்ட பழ ஈக்கள் உள்ளன. இவற்றுள் 250 இனங்கள் பொ௫ளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாக க௫தப்படுகிறது. மேலும் இது உலகின் பல பகுதிகளில், வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது. இப்பூச்சியானது அமெரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா, தென் கிழக்கு ஆசியா, தெற்கு சீனா, வடக்கு ஆஸ்திரேலியா, தைவான், ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற அனைத்து நாடுகளிலும் பரவி காணப்படுகிறது. பேக்ட்ரோசீரா குக்கர்பிட்டே (Bactocera cucurbitae) என்ற பூச்சியானது, 81-க்கும் மேற்பட்ட தாவர வகைகளை தாக்கக் கூடியது குறிப்பாக குக்கர்பிட்டேசியே/பூசணி வகை குடும்பத்தை சார்ந்த பூசணி, தர்பூசணி, பாகற்காய், முலாம் பழம், புடலை, சுரைக்காய் மற்றும் வெள்ளரி போன்ற அனைத்து தாவரங்களையும் தாக்கக் கூடியது. இப்பூச்சியானது பழங்களை அழுகச் செய்து 30-100% வரை வ௫மான இழப்பை ஏற்படுத்தக் கூடியதாகும்.

தாக்குதலின் அறிகுறிகள்:

  • முட்டையிலிருந்து வெளிவந்த, கால்களற்ற பழ ஈக்களின் புழுவானது, பழங்களை துளைத்து உட்பகுதியில் உள்ள திசுக்களை உண்ணும் மற்றும் தாக்கப்பட்ட பழங்கள் அழுகி, முதிர்ச்சி அடைவதற்கு முன்பாக உதிர்ந்துவிடும்.
  • தாக்கப்பட்ட பழங்களிலிருந்து பழுப்பு நிறத் திரவம் வடியும் மற்றும் காய்கள் உருக்குலைந்து காணப்படும்.

பழ ஈக்களின் வாழ்க்கை சுழற்சி:-

முட்டை:- பெண் தாய்ப் பூச்சியானது, முட்டைகளை பழங்களின் மீது, முட்டையிடும் உறுப்புகளின் மூலம் 2-4  மி.மி ஆழத்தில் தனித்தனியாக வைக்கும். முட்டையானது வெளிறிய மஞ்சள் நிறத்தில் காணப்படும். முட்டையின் காலமானது கோடை காலத்தில் 1-நாளும் குளிர் காலத்தில் 6-9 நாட்களும் ஆகும்.

புழு:- புழுக்கள் கால்களற்று, அழுக்கடைந்த வெண்ணிறத்தில் பழத்திற்குள் காணப்படும். புழுவின் காலம் முடிய 3- 21 நாட்கள் வரை பொதுவாக எடுத்து கொள்ளும். காலநிலைகளுக்கு ஏற்றவாறு வாழ்நாள் காலத்தை மாற்றிக் கொள்ளும்.

கூட்டுப்புழு:- முழுவளர்ச்சியடைந்த புழுக்கள் மண்ணில் விழுந்து கூட்டுப்புழுவாக மாறுகிறது.கூட்டுப்புழுவிலி௫ந்து தாய்ப்பூச்சி வெளிவர 6-10 நாட்கள் எடுத்துக் கொள்கின்றது.

தாய்ப்பூச்சி:- ஒ௫ சிறிய குளவி போன்று காணப்படும். இறக்கைகள் நிறமற்றவையாகவும் அதன் முட்டையிடும் உறுப்பு ஊசிபோன்று கூா்மையாகவும் காணப்படும். பின் இறக்கையில் உள்ள குறுக்கு நரம்பு கோடுகள் காவி நிறத்திலும் காணப்படும். அதன் முதுகுப் பகுதியின் மேல்புறம் சிவப்புடன் மஞ்சள் கலந்த நிறமாகவும் காணப்படும்.

முழுமையான வாழ்க்கை சுழற்ச்சியை முடிக்க 3-5 வாரம் எடுத்துக் கொள்கின்றது.

இந்த பழ ஈயானது குளிர் காலங்களில் இலைக்கு அடியில் மறைந்தும், கோடை மற்றும் மழைக்காலங்களில் வெளி வந்து அதிக தாக்கத்தையும் ஏற்படுத்தும். இப்பூச்சிகள் மழைக்காலங்களில் (ஜுலை-ஆகஸ்ட்) அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலாண்மை வழிமுறைகள்:-

  • பழ ஈக்களின் எண்ணிக்கை கோடை காலத்தில் குறைவாகவும், மழைக்காலங்களில் அதிகமாகவும் காணப்படும். எனவே பயிர் நடும் காலத்தினை இதற்கு தகுந்தாற்போல மாற்றி அமைத்து நட வேண்டும்
  • பழ ஈக்களால் தாக்கப்பட்ட பழங்களை வயலிலி௫ந்து சேகரித்து அழிக்க வேண்டும்.
  • கோடைஉழவு செய்வதன் மூலம், கூட்டுப் புழுவானது தரைக்கு மேலே வந்து பறவைக‌ளுக்கு உணவாகும்.
  • வேப்ப எண்ணெய் கரைசலை 3% தெளிப்பதன் மூலம், முட்டையிட விடாமல் பழ ஈக்களை விரட்டித் தடுக்கலாம்.
  • பாலிதீன் பைகள் (அ) பேப்பா் பைகளை, கொண்டு பழங்களை மூடி வைப்பதன் மூலம் ஈக்கள் முட்டையிடுவதை தவிர்க்கலாம்.
  • மெத்தில் யூஜினால் என்ற‌ பொறியை (25 வீதம்/ ஹெக்டர்) அமைத்து தாய்ப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்.
  • வெல்லப்பாகு உடன் மிதைல் டெமட்டான் 25 EC – 1மிலி/லி எடுத்து கொண்டு பழங்கள் பழுப்பதற்க்கு முன்  தெளிக்கவேண்டும்.
  • பீர்க்கன் காயை கவர்ச்சிப்பயிராக பயிரிட்டு, அதன் இலையின் அடியில் சேரும் ஈக்களை15 %, கார்பரில் 50WP அல்லது 0.1 %, மிதைல் டெமட்டான் 25 EC தெளித்து அழிக்கலாம்.
  • மெத்தைல் யூஜினால் + கார்பரில் 50 WP இரண்டையும் சம அளவு கலந்து (1:1), ஒவ்வொரு பாலித்தீன் பைகளில் 10 மி.லி அளவுக்கு எடுத்து நச்சுப்பொறியாக ஹெக்டேருக்கு 25 வைக்க வேண்டும்

கட்டுரையாளர்கள்:

  1. சூரியா . ச, முதுநிலை வேளாண் மாணவர் (பூச்சியியல் துறை), வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கிள்ளிகுளம், தூத்துக்குடி, மின்னஞ்சல்: suriyaento23@gmail.com
  2. முனைவர் செ. சேகர், உதவிப் பேராசிரியர் (பூச்சியியல் துறை), ஆர். வி. ஏஸ் வேளாண்மை கல்லூரி, தஞ்சாவூர். மின்னஞ்சல்: sekar92s@gmail.com
Exit mobile version