Site icon Vivasayam | விவசாயம்

கேரளாவில் வன விலங்குகளை தடுப்பதில் புதிய வேளாண் யுக்திகள்

கடந்த சில ஆண்டுகளாக வன விலங்குகள் மற்றும் மனிதர்கள் இடையிலான மோதல்கள் நமது நாட்டில் பெருகி வருகிறது. குறிப்பாக நமது நாட்டில் உள்ள பருவ மாற்று பிரச்சனைகள் காரணமாக வனங்களில் ஏற்படும் மாற்றங்கள், தொழில் வளர்ச்சி என்ற போர்வையில் தொடர்ச்சியாக காடுகள் அழிக்கப்பட்டு வரும் சூழலில் வன விலங்குகள் தங்களின் உணவு, தண்ணீர் மற்றும் குடியிருப்புத் தேவைகளை கருத்தில் கொண்டு வன நிலங்களுக்கு அருகில் உள்ள நிலங்களில் தங்களது நடமாட்டத்தை அதிகரிக்கும் போது வன விலங்குகள் மற்றும் மனிதர்கள் (Animals Vs Human beings) இடையே மோதல்கள் உருவாகிறது. இதனால் வன நிலங்களுக்கு அருகில் உள்ள விவசாய நிலங்களில் சாகுபடி செய்யும் பயிர்களை வன விலங்குகள் தங்களின் உணவுத் தேவையை கருத்தில் கொண்டே உண்ண வரும் போது மோதல்கள் துவங்குகிறது. இத்தகைய நடைமுறை சூழலில் விவசாயிகள் வெடிப் பொருட்கள், துப்பாக்கிகள், ஆயுதங்களை கொண்டு தங்களது வேளாண் உயிர் பொருட்களை, உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கும் முயற்சிகளை பல வனச் சட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எதிராக போய் முடிகிறது. இத்தகைய நடைமுறை சூழலில் கேரளா மாநில விவசாயிகள் காட்டு எருமைகள் மற்றும் முள்ளம் பன்றிகளிடமிருந்து (Porcupines) தங்களது வேளாண் மற்றும் தோட்டக்கலை விளைப்பொருட்களை பாதுகாக்க மேற்கொண்டுள்ள இப்புதிய வேளாண் முயற்சிகள் நமது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக உள்ளது.

கேரளா மாநில வன விவசாயிகளின் புதிய முயற்சிகள்:

கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மற்றும் வயநாடு பகுதிகளில் உள்ள மலை பிரதேசங்களில் விவசாயிகளின் நிலங்களில் அதிகப்படியான காட்டு எருமைகள் மற்றும் முள்ளம் பன்றிகள் கடுமையான சேதங்களை ஏற்படுத்துகிறது. இதனை தடுக்க முள்வேலிகள் மற்றும் தடுப்புகள் போடப்பட்டாலும் அவை போதுமான பயன்களை தருவது கிடையாது. இத்தகைய நடைமுறை சூழலில் புதியதாக இத்தடுப்புகளில் பழைய சேலையை சுற்றி வைக்கும் போது அதனை தாண்டி வன விலங்குகள் வருவது கிடையாது. இதனால் வாழை, மரவள்ளிக்கிழங்கு மற்றும் பல தோட்டக்கலைப் பயிர்கள் வன விலங்குகளால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. இப்புதிய பாதுகாப்பு முறையால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. தற்போது வனப் பகுதிகளுக்கு அருகில் தோட்டக்கலை மற்றும் விவசாய பயிர்களை சாகுபடி செய்யும் கேரளா விவசாயிகள் இந்த புதிய எளிய முறையான பழைய புடவைகளை அல்லது சேலைகளை தடுப்புகளுடன் சேர்த்து சுற்றி பாதுகாத்து தங்களது விவசாய விளைப் பொருட்களை பாதுகாத்து வருகின்றனர். இப்புதிய பயிர் பாதுகாப்பு முறை மிகவும் செலவு குறைந்ததாகவும், விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதாக உள்ளதால் வேளாண் மற்றும் வனத் துறை அதிகாரிகள் இப்புதிய வன விலங்குகளை தடுக்கும் முறைக்கு அதிகளவு ஊக்கம் வழங்கி வருகின்றனர். இவ்வாறு கேரளா மாநிலத்தில் விவசாய விளைப் பொருட்களை மற்றும் வன விலங்குகளை பாதுகாப்பதிலும், மனிதர்கள் மற்றும் வன விலங்குகள் இடையே  ஏற்படும் மோதல்கள், உயிர் இழப்புகளை தடுப்பதில் கேரளா விவசாயிகளின் மிகவும் குறைந்த செலவிலான இப்புதிய வன விலங்குகள் தடுப்பு முறையை நமது நாட்டின் அனைத்துப் பகுதி விவசாயிகளும் பின்பற்றி தங்களின் வேளாண் விளைப் பொருட்களை வன விலங்குகளிடம் இருந்து எளிதான முறையில் பாதுகாக்கலாம் என்பதில் சந்தேகமில்லை.

கட்டுரையாளர்:

முனைவர் தி. ராஜ் பிரவின், இணைப் பேராசிரியர், வேளாண் விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: trajpravin@gmail.com

Exit mobile version