Vivasayam | விவசாயம்

வெண்டை பயிரைத் தாக்கும் நரம்புத் தேமல் நோயும் அதனை கட்டுப்படுத்தும் முறைகளும்

நோய் இல்லாத ஆரோக்கியமான உடலைப் பெற அனைவரும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். அன்றாட சமையலில் பயன்படுத்தும் காய்கறிகளில் அத்தியாவசிய சத்துக்களான பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களில் ஏ, ஈ மற்றும் சி போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளன. இந்தியா முழுவதும் பயிரிடப்படும் காய்கறிப் பயிர்களில் வெண்டை ஒரு முக்கியமான பயிராகும்.  இது வைட்டமின்கள் ஏ, பி (Vitamin A, B), புரதம் மற்றும் தாதுக்கள் நிறைந்த பயிர் ஆகும். வெண்டை வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் நன்றாக வளரும் தன்மை கொன்ட தாவரம் ஆகும்.  வெண்டை பயிரைத் தாக்கும் நோய்களில், பூஞ்சையால் ஏற்படும் சாம்பல் நோய் மற்றும் நச்சுயிரியால் (Virus) ஏற்படும் நரம்புத் தேமல்/ நரம்பு வெளுத்தல் நோய் (Vein Clearing) ஆகியவை அதிக மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக நரம்புத் தேமல்  நோய் பயிரை அனைத்து நிலைகளிலும் பாதிக்கிறது. இந்த நோய் விதைத்த 20 நாட்களில் பயிர்களுக்கு தொற்றினால் விளைச்சல் அதிகபட்சமாகக் குறையும்.

நரம்புத் தேமல் நோயின் அறிகுறிகள்:

இது பயிர்களின் அனைத்து நிலைகளிலும் சேதத்தை ஏற்படுத்தும். ஆரம்பத்தில் இலை ஓரங்களிலிருந்து நரம்பு வெளுத்துக் காணப்படும். நாளடைவில் இலைப் பாகத்திலுள்ள நரம்புகள் கிளைநரம்புகள் யாவும் வெளுத்துத் தோன்றும். கிளை நரம்புகள் வெளுத்துக் காணப்பட்டு இடைப்பாகம் மட்டும் பசுமையாக இருப்பதால் வலை பின்னப் பட்டிருப்பதை போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். சில நேரங்களில் பயிர்கள்  கடுமையாக பாதிக்கப்பட்டால் முழு இலைகளும் மஞ்சள் நிறமாக மாறும்(குளோரோசிஸ்). பாதிக்கப்பட்ட தாவரங்கள் குட்டையாக காணப்படும். காய்கள் குட்டையாகி ஒழுங்கற்ற வடிவத்தைப் பெறுவதுடன் வெளுத்துக் காணப்படும்.

பரவுதல் :

இந்த நோய் வெள்ளை ஈ (பெமிசியா டபாசி ) மூலம் பரவுகிறது. வெண்டை சாகுபடி செய்யாத பருவத்தில் இந்த நோய் ஹைபிஸ்கஸ் டெட்ராபில்லஸ் மற்றும் குரோட்டன் ஸ்பார்சிஃபைரஸ் (நாய் மிளகாய்) போன்ற களைகளை தாக்கி அதன் மூலமும்  வெண்டை  செடிகளுக்கு பரவும்.

நரம்புத் தேமல் நோயின் கட்டுப்பாட்டு முறைகள்:

தடுப்பு நடவடிக்கைகள்

நோய் எதிர்ப்புடைய பூசா சவாணி (Pusa Savani), பர்பானி கிரந்தி
(Parbhani Kranti), COBh H 1, COBh H 3 மற்றும்  Bhendi Hybrid CO 4 போன்ற இரகங்களை பயிரிடுவதன் மூலம் நோயைத் தவிர்க்கலாம்.

உழவியல் முறை

பாதிக்கப்பட்ட செடிகளை அப்போதைக்கப்போது களைந்தெறிதல் அவசியம்.  நிலத்திலுள்ள களைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். வெள்ளை ஈ தாக்குதலை குறைக்க மக்காச்சோளத்தை நிலத்தை சுற்றி பயிரிடலாம். வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த வயலைச் சுற்றி ஒரு ஏக்கருக்கு 12 மஞ்சள் நிற அட்டையின் மீது ஆமணக்கு எண்ணெய் தடவி வைக்கலாம் இதன் மூலம் பூச்சிகள் கவரப்பட்டு இறக்கும்.

உயிரியல் முறை

வாராந்திர இடைவெளியில் ஒரு லிட்டர் தண்ணீரில் 5 முதல் 10 மில்லி வேப்ப எண்ணெயை கலந்து தெளிப்பதன் மூலம் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்.

இரசாயன முறைகள் :

டைமெத்தொயேட் 30 % EC 1.0 மி/ லி அல்லது தையோமீத்தாக்சம்     4.0 மி/ 10 லி பூச்சிக் கொல்லியை விதைத்த 25, 35, 45 வது நாட்களில் தெளித்து நோய் பரப்பும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும். ஒரு லிட்டர் தண்ணீரில் குளோர்பைரிபோஸ் 2.5 மில்லி + வேப்ப எண்ணெய் 2 மில்லி கலந்து தெளிப்பதன் மூலமும் நோய்க் காரணியைக் கட்டுப்படுதலாம்.

கட்டுரையாளர்கள்:

  1. கு. முருகவேல், உதவிப் பேராசிரியர் (தாவர நோயியல் துறை), ஜே.கே.கே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரி, தூக்கநாயக்கன்பாளையம். மின்னஞ்சல்: mvelpatho@gmail.com தொலைபேசி எண்: 9843380137
  1. கு. செல்வகுமார், உதவிப் பேராசிரியர் (உழவியல்துறை), ஜே.கே.கே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரி, தூக்கநாயக்கன்பாளையம். மின்னஞ்சல்: selvakumaragronomy@gmail.com தொலைபேசி எண்: 9524362293
Exit mobile version