Site icon Vivasayam | விவசாயம்

வறட்சியை எதிர்த்து போராடும் திறன் பெற்ற இளஞ்சிவப்பு மெத்திலோட்ரோப் பாக்டீரியா (பிபிஎப்எம்) – பயன்கள்

வறட்சியின் தீவிரம் வரவிருக்கும் ஆண்டுகளில் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு விவசாயிகளையும் பயிர்களையும் காலநிலை மாற்றத்தின் கொடூரத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பது உறுதிப்படுத்தபட்டுள்ளது. பாக்டீரியா பெரும்பாலும் பல்வேறு மூலக்கூறுகளைக் கொண்ட சூழலில் வாழ்கிறது. இத்தகைய வசிப்பிடங்களில் ஒன்று ஃபைலோஸ்ஸ்பியர் ஆகும், அங்கு படிமுறை மெத்திலொட்ரோபிக் பாக்டீரியா எங்கும் நிறைந்ததாகவும், ஏராளமாகவும் காணப்படுகிறது.

பாக்டீரியாக்கள் பல்வேறு சூழலில் வாழ்கின்றன. மெத்தைலோட்ரோபிக் பாக்டீரியா  ஏராளமாக இலைகளைச் சுற்றி மற்றும் மேற்புறத்தில்  காணப்படும். மெத்தைலோட்ரோபிக் பாக்டீரியா மெத்தைலோ பாக்டீரியா பேரினத்தைச் சேர்ந்தவை. மெத்தைலோட்ரோபிக் பாக்டீரியா வளர்சிதை மாற்றத்தினால் மெத்தனால், கரிம அமிலங்கள் மற்றும் ஆல்கஹால் போன்ற  குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாற்று கார்பன் மூலக்கூறுகளால் உருவாக்கப்படுகின்றன. தாவர இலை பரப்பில் மைக்ரோமீட்டர் வரம்பில், பல்வேறு கார்பன் மூலங்கள், முக்கியமாக சர்க்கரை மற்றும் கரிம அமிலங்களை இலைத்துளை வழியாக வெளியிடுகிறது. மேலும், ஆவியாகும் கார்பன் மூலக்கூறுகள், குறிப்பாக தாவர செல் சுவர் வளர்சிதை மாற்ற விளைபொருளான மெத்தனால், இலைத்துளை வழியாக வெளியிடப்படுகிறது.

மெத்தைலோ பாக்டீரியத்தால் மெத்தனால் உட்கொள்ளப்படுகிறது. மேலும் காலையில் மெத்தனால் உமிழ்வு அதிகமாக இருக்கும், மெத்தைலோ பாக்டீரியம் அதனுடைய  வளர்சிதை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள,  கூடுதல் கார்பன் ஆதாரங்களை இரவு நேரத்தில் பயன்படுத்துகிறது, மெத்தனால் உமிழ்வு  இரவு நேரத்தில் இலைத்துளை மூடியிருக்கும் போது குறைவாக இருக்கும்.

மெத்தைலோ பாக்டீரியாவின் நன்மைகள்

மெத்தைலோ பாக்டீரியா காற்று வாழ் உயிரியாகும். அவை எளிதாக ஒரு மெத்தனால் சார்ந்த கனிம ஊடகத்தை (ஃபார்மேட், ஃபார்மால்டிஹைடு மற்றும் மெத்தனால்)  சார்ந்து வாழக்கூடிய தன்மை வாய்ந்தது. இந்த வகை பாக்டீரியா மெத்தனால் அகார் –ஊடகம் வைத்து பிரித்தெடுக்கப்படுகிறது.

செயல்பாடு : பயிர்களுக்கு பயிர் வளர்ச்சி ஊக்கிகளான சைட்டோகைனின் மற்றும் ஆக்ஸின்களை அளிக்கிறது.

பரிந்துரைக்கப்பட்ட பயிர்கள் : அனைத்துப் பயிர்கள், மரங்கள் மற்றும் பூச்செடிகள்

அளவு : 1சதவிகிதம்(1 லிட்டர் நீரில் 10 மில்லி லிட்டர்) முதல் 2 சதவிகிதம்(1 லிட்டர் நீரில் 20 மில்லி லிட்டர்) வரை திரவ நுண்ணுயிர் உரம் பரிந்துரைக்கப்படுகிறது

பயன்படுத்தும் முறை 

விதை நேர்த்தி : பரிந்துரைக்கப்பட்ட விதை அளவை 50 மிலி திரவ நுண்ணுயிரில் நன்கு கலந்து 5 முதல்10 நிமிடம் நிழலில் உலர்த்தி பின்பு விதைக்க வேண்டும்.

இலைகளில் தெளித்தல் 
காலை அல்லது மாலை நேரங்களில் 1 சதவிகிதம் முதல் 2 சதவிகிதம் திரவ நுண்ணுயிரைத் தண்ணீரில் கலந்து (10 லிட்டர் நீரில் 100 முதல் 200 மில்லி லிட்டர்) இலைகள் நன்கு நனையும்படி தெளிக்கவும்.

பயன்படுத்தும் காலம்

  • பயிர்களின் முக்கிய வளர்ச்சிக் காலங்கள்

பூ மற்றும் காய் பிடிக்கும் தருணம் (அல்லது) 30 முதல் 45 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தவும்

பயன்கள்

  • விதை முளைப்புத் திறனை அதிகரிக்கிறது
  • நாற்றுக்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது
  • பூக்கும் காலம் மற்றும் காய்களின் அறுவடை காலத்தைக் குறைக்கிறது
  • பழங்கள், காய்கள் மற்றும் விதைகளின் நிறம் மற்றும் தரம் அதிகரிக்கிறது
  • மகசூல் 10 சதவிகிதம் அதிகரிக்கிறது
  • வறட்சியைத் தாங்கும் திறனை பயிர்களுக்கு அளிக்கிறது.

குறிப்பு :

  • இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளுடன் கலந்து தெளிக்கக் கூடாது.
  • இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பதற்கு 7 முதல் 10 நாட்களுக்கு முன்பு (அ) பின்பு இந்த நுண்ணுயிர் திரவ உரத்தைத் தெளித்தல் வேண்டும்.

கட்டுரையாளர்கள்:

*மு .உமா மகேஸ்வரி மற்றும் **மொ. பா.கவிதா

*உதவி ஆசிரியர், உழவியல், ** உதவிப் பேராசிரியர், உழவியல், தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,பெரியகுளம்.

Exit mobile version