உலகளவில் நெல் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. 2018-19 பயிர் ஆண்டில் 116.42 மில்லியன் டன்னாக இருந்த நெல் உற்பத்தி 1.05 மில்லியன் டன் அதிகரித்து 2019-20 பயிர் ஆண்டில் 117.47 மில்லியன் டன்னாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை காவிரி டெல்டா பகுதிகளில் நெல் அதிகம் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நெற்பயிர் சாகுபடிக்கு முக்கிய சவாலாக இருப்பது குலை நோய் ஆகும். நெல் பயிரிடும் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்நோய் அதிகம் காணப்படுகிறது. இந்தியாவில் இந்நோய் முதன்முதலில் 1918ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்தோய் தாக்கப்பட்ட பயிர்களில் 70 முதல் 80 சதவிகிதம் வரை மகசூல் பாதிக்கப்படுகின்றது.
நோய் தாக்கப்பட்டதற்கான அறிகுறிகள்:
பயிர்களின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் இந்நோய் தாக்கப்படுகிறது. இலை, கழுத்து, கணு ஆகிய அனைத்துப்பகுதிகளிலும் இந்நோய் தாக்கப்படுகிறது. இலைகளின் மேல் பகுதியில் முதலில் சிறிய புள்ளிகள் தோன்றும். பிறகு அப்புள்ளிகள் வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் நிற மைய பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவ புள்ளிகளாக மாற்றம் அடையும். பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும். தீவிர தாக்குதலின் போது, பயிர் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிக்கும். இதையே “குலை நோய்” என்கிறோம். கதிர் வெளிவந்தவுடன் பயிர்கள் சாய்ந்துவிடும். இலைகளில் இந்த அறிகுறிகள் தென்பட்டால் அதனை “இலை குலை நோய்” என்கின்றோம்.
கழுத்துப் பகுதியில் சாம்பல் நிறம் முதல் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி பிறகு கருப்பு நிறமாக மாறி, கதிர் மணிகள் சுருங்கி காணப்படுவதுடன் கதிர்கள் உடைந்து தொங்கிவிடும். இதை “கழுத்து குலை நோய்” என்றும் “கழுத்து அழுகல் நோய்” என்றும் கூறுகின்றோம்.
கணுக்கள் கருப்பு நிறமாக மாறி உடைந்துவிடும். இதை “கணு குலை நோய்” என்கின்றோம். பயிரின் அடிப்பாகத்தில் இடைக்கணுத் தாக்குதலும் ஏற்படுவதால் வெண்கதிர் அறிகுறி தோன்றும். கதிர்ப்பருவ நிலைக்கு முன்பே கழுத்துப் பகுதியில் நோய் தாக்கினால் தானியங்கள் உருவாகாது. கதிர்ப்பருவத்திற்கு பின் தாக்குதல் ஏற்பட்டால், தானியங்கள் உருவானாலும், குறைந்த தரத்துடன் காணப்படும். கதிர் மற்றும் கதிர்க்கிளைகளில் உள்ள புள்ளிகள் பழுப்பு நிறமாக (அ) அடர்பழுப்பு நிறமாக இருக்கும். நெல் இரகங்களைப் பொருத்து, புள்ளிகளின் அளவும், வடிவமும் வேறுபடும்.
குலை நோய் ஏற்படுவதற்கு சாதகமான சூழ்நிலைகள்:
பைரிகுலெரியா ஒரைசே என்ற பூஞ்சாணத்தின் மூலம் இந்த நோய் ஏற்படுகிறது. காற்றின் மூலம் பரவும் பூஞ்சாண வித்துக்கள் (கொனிடியாக்கள்) இந்நோய் பரவுவதற்கான முதல்நிலை காரணமாக உள்ளன. பாசன நீர் மூலமும் மற்ற இடங்களுக்கு பரவுகின்றது. நிலத்தில் உள்ள பயிர் கழிவுகள், வைக்கோல் மற்றும் விதைகள் மூலமும் பரவுகின்றது. நெல் பயிரிடா காலங்களில் வரப்புகளில் உள்ள களைச்செடிகளில் இந்நோய் வாழ்ந்து நெல் பயிரிடும்பொழுது நெற்பயிருக்கு பரவுகிறது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் பொழுது மிதமான சாரல்மழை பொழியும் பொழுதும் காற்றின் ஈரப்பதம் 93 முதல் 99 சதவிகிதம் இருக்கும் பொழுதும் இரவு நேர வெப்பநிலை 26° செல்சியஸ்கு கீழே இருக்கும் பொழுதும் இந்நோய் அதிகம் தாக்கப்படுகிறது.
குலை நோய் மேலாண்மை முறைகள்:
வரப்புகளில் உள்ள களைச்செடிகளை அகற்ற வேண்டும். தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும். தங்கள் பகுதிக்கு ஏற்ற நோய் எதிர்ப்புடைய ரகங்களை தேர்வு செய்து பயிரிட வேண்டும். கார்பண்டசிம் என்ற பூஞ்சாணக் கொல்லியை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். அல்லது உயிர்பூஞ்சாணக் கொல்லியான சூடோமோனாஸ் புளோரசன்ஸை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். நாற்றாங்காளில் இந்நோய் தென்பட்டால் கார்பண்டசிம் என்ற பூஞ்சாணக் கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். 25 சதுர மீட்டர் பரப்பு உள்ள நாற்றங்காலில் 2.5 செ.மீ ஆழம் வரை நீர் தேக்கி வைக்க வேண்டும். இந்த தேங்கிய நீரில் 2.5 கிலோ சூடோமோனஸ் ஃபுளோரோசன்ஸ் பொடியைத் தூவி நன்கு கலக்க வேண்டும். நாற்றுக்களின் வேர்களை, இதில் 30 நிமிடங்கள் ஊற வைத்து பின் நடவு செய்ய வேண்டும். இதனால் நெற்பயிரில் ஏற்படும் பல்வேறு நோய்களை தவிர்க்கலாம். நடவு செய்த 45 நாட்களுக்கு பின் 10 நாட்கள் இடைவெளியில் சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ் பொடியை ஒரு லிட்டர் தண்ணீரில் 10கிராம் என்ற அளவில் கலந்து மூன்று முறை தெளிக்க வேண்டும்.
வயலில் நோய் தோன்றும்பொழுது ஒரு ஹெக்டேருக்கு மெட்டாமினோஸ்டுரோபின் 500 மில்லி, அசாக்சிஸ்டுரோபின் 500 மில்லி அல்லது டிரைசைக்ளோசோல் 500 கிராம் என்ற அளவில் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் இந்நோயை கட்டுப்படுத்தலாம்.
கட்டுரையாளர்கள்:
- கா. சரண்ராஜ், முதுநிலை வேளாண் மாணவர் (பயிர் நோயியல் துறை), விஸ்வபாரதி பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: saranraj.klsk.1998@gmail.com
- எ. செந்தமிழ், முதுநிலை வேளாண்மை மாணவர் (உழவியல்), அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: elasisenthamil@gmail.com