Skip to content

கரும்புத் தோகையில் ஊறுகாய்ப் புல் தயாரித்தல்

கரும்புத் தோகை என்பது கரும்பு அறுவடையின் போது கிடைக்கும் உபப்பொருளாகும். இதில் கரும்பின் பச்சை இலை, இலைக் கற்றை, முதிர்ச்சியடையாத கரும்பும் அடங்கும். கரும்புத் தோகையில் பீனால், அமினோ அமிலம் மற்றும் பாலிசாக்கரைடுகளும் உள்ளன. இது கரும்பு சர்க்கரை படிகமாதலின் போது விரும்பத்தகாத நிறத்தினை கொடுக்கும். எனவே முதல் உபப்பொருளான கரும்புத் தோகை சர்க்கரை உற்பத்தியின் போது நிலத்திலேயே விடப்படுகின்றன.மேலும் இது நிலத்திலேயே எரியூட்டப்பட்டு உரமாக்கப்படுகின்றன. மொத்தம் 15 சதவீத கரும்புத் தோகை மட்டுமே கால்நடைகளுக்கு உணவாக்கப்படுகின்றன.

கரும்புத் தோகையில் உள்ள ஊட்டப்பொருட்கள் பின்வருமாறு: உலர்ப் பொருட்கள் 85%, ஜீரணத்தன்மை 27.5%, கச்சாப் புரதம் 5.5%, ஆற்றல் 7.0 மெகா ஜீல்/கிகி. கனிம ஊட்டப்பொருட்களாவன, சாம்பல் 9.6, கால்சியம் 0.43, மணிச் சத்து 0.15, சோடியம் 0.05, பொட்டாசியம் 2.31. கால்நடைகளின் எதிர்க்காலத் தேவைகளையும் வறட்சியினையும் கருத்தில் கொண்டு வீணாக எரியூட்டப்படும் கரும்புத் தோகைகளினை பதப்படுத்தி ஊறுகாய்ப் புல் தயாரிக்கப்படுகின்றன. கரும்புத் தோகையினுடன் பயறுவகை தீவனப்பயிர்களை 4:1 என்ற விகிதத்தில் கலந்து ஊறுகாய்ப் புல் தயாரிக்கலாம்.

தயாரிக்கும் முறை:

  • பச்சை கரும்புத் தோகையினை வெயிலில் 2 முதல் 3 மணி நேரம் உலர்த்த வேண்டும்.
  • ஈரப்பத அளவினை 70% ஆக குறைக்க வேண்டும்.
  • தீவனப்பயிர்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி பதனக் குழியில் அடுக்க வேண்டும்.
  • 20-30 செ.மீ வரை அடுக்கிய பிறகு தீவனத்தினை நன்கு அழுத்தி காற்றினை வெளியேற்ற வேண்டும்.
  • அதன் மீது 2% சர்க்கரைக் கரைசல் மற்றும் 1% உப்புக் கரைசலை தெளிக்க வேண்டும்.
  • இவ்வாறு தரைமட்டத்திற்கு மேல் 1.0-1.5 மீ உயரம் வரும் வரை நிரப்ப வேண்டும். அதன் மேற்பகுதியில் வைக்கோல் கொண்டு மூடி அதன் மேல் ஈரமண்ணை பூசி காற்று மற்றும் நீர் புகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  • 30-45 நாட்களில் திறமிக்க, பசுமையான நறுமணம் கொண்ட ஊறுகாய்ப் புல் தயாராகி விடும்.
  • அமிலத் தன்மை 3.5-4.2 வரை இருக்கும்.

தரம் உயர்த்தும் முறை:

  • பழக்கழிவு,காய்கறி கழிவுகளை பயன்படுத்தியும், லாக்டிக் அமிலம் மற்றும் 5-1.0% சுண்ணாம்பு சேர்த்தும் தரம் உயர்த்தலாம்.
  • ஆலம்சாத் மற்றும் நரோசி ஆகியோரின் ஆய்வுப்படி கரும்புத் தோகை ஊறுகாய்ப் புல்லானது பால் மற்றும் கால்நடைகளுக்கு எவ்வித எதிர் விளைவுமின்றி 75% குதிரை மசால் தீவனத்தினை மிச்சப்படுத்தலாம்.
  • இவ்வாறு வீணாக எரியூட்டப்படும் கரும்புத் தோகையை கால்நடைகளுக்கு சுவையான உணவாக பயன்படுத்தலாம்.

ஊறுகாய்ப்புல் பயன்படுத்தும் முறை:

  • கறவை மாடு – 15 முதல் 20 கிலோ ஒரு நாளுக்கு
  • கிடா –  5 முதல் 8 கிலோ ஒரு நாளுக்கு
  • வளர்ந்த கன்று – 4 முதல் 5 கிலோ ஒரு நாளுக்கு
  • வளர்ந்த ஆடு – 200 முதல் 300 கிராம் ஒரு நாளுக்கு என்ற அளவில் கொடுக்கலாம். தேவையற்ற கால்நடைத் தீவன செலவுகளைக் குறைக்க முடியும்.

கட்டுரையாளர்: கண்ணன்.கூ, இளங்கலை வேளாண்மை நான்காம் ஆண்டு, குமரகுரு வேளாண்மை கல்வி நிறுவனம், சக்தி நகர், ஈரோடு. மின்னஞ்சல்: kannanslm2016@gmail.com

Leave a Reply

editor news

editor news