மானம் இழந்த விவசாயம்:
மானியமும் வேண்டாம், தள்ளுபடியும் வேண்டாம். விவசாயிகள் உற்பத்தி செய்த பொருளுக்குரிய விலை வழங்கப்பட்டாலே போதும். இதைசொல்வது அகில இந்திய அளவில், ஒரு ஒப்பற்ற விவசாயிகள் சங்கத்தலைவரான மகேந்தர்சிங் தியாகத் கூறுவதாகும்.
தியாகத் கூறுவது யாதெனில், 1966 ஆம் ஆண்டு 1 டிராக்டர் விலை ரூ.11,000/- இன்று (2020) இல் அதுவே 7 லட்சம் ஆகிவிட்டது. 40 பைசாவிற்க்கு விற்ற டீசல் இன்று ரூ.77 உரம், பூச்சிமருந்து, விதை விலைகள் நூறு மடங்கிற்க்கு மேலாக உயர்ந்துவிட்டன. 1966-ல் 24 மனிநேரமும் மின்சாரம் கிடைத்தது. இன்று ஒருநாளைக்கு 3-4 மணிநேரமே வழங்கப்படுகின்றது. 10 கிராம் தங்கம் அன்று ரூ. 250/- இன்று ரூ. 48, 450/-. அன்று 1000 கிலோ கோதுமைக்கு ரூ.760 என்றும் கரும்புக்கு ரூ.130/- டன் என்றும் நிர்ணயத்திருந்தார்கள். இன்று ஒரு குவிண்டால் கோதுமைக்கு ரூ.1350 என்றும் கரும்புக்கு ரூ. 2,850/- டன் என்றும் நிர்ணயமாயுள்ளது. கடந்த 54 ஆண்டுகளில் நிகழ்ந்த விலை ஏற்ற அடிப்படையில் கவனித்து கோதுமைக்குரிய விலை ரூ. 4050/குவிண்டால் என்றும், கரும்புக்கு ரூ.3500/டன் என்றும் நிர்ணயம் செய்வதுதான் நியாயம். இவ்வாறு தியாகத் கூறியுள்ளதை இன்றுள்ள எதார்த்தங்களை வைத்துக் கவனித்தால் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை எவராலும் மறக்க முடியாது.
வரவு எட்டணா! செலவு பத்தணா!
உலகமயமாதல் விளைவால் விற்பனைப் பொருள்களில் தடையற்ற வணிகம் என்பது ஏனோ அரிசி, கோதுமைக்கு மட்டும் இல்லை. அவற்றுக்கு கட்டுப்பாடான பொருளாதாரம் உள்ளது. அரசு ஏகபோகமே திகழ்கின்றது. அரசு கொள்முதல் விலையை நிர்ணயிக்கின்றது. அப்படி நிர்ணயிக்கப்படும் விலைக்கும் விஷம் போல் ஏறிவரும் சாகுபடிச் செலவுக்கும் தொடர்பே இல்லை. இந்திய விவசாயிகளில் ஐந்தில் நான்கு பேர் நடுத்தரம் – சிறு – குறு விவசாயிகள் ஆவர். இதில் நிலத்தை குத்தகைக்கு எடுத்துச் சாகுபடி செய்வோரும் அடக்கம். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை நிகழ்த்திய (2018) ஆய்வின்படி 1 ஏக்கர் கோதுமை சாகுபடி செய்ய சுமார் ரூ. 18,000 செலவாகிறதாம். தமிழ்நாடு வேளாண்துறையின் தகவலின்படி 1 ஏக்கர் நெல் சாகுபடி செய்ய ரூ. 22,000/- செலவாகின்றதாம். தமிழகத்தில் கூலி ஆட்கள் சம்பளம் மட்டுமே ரூ. 12,000/- ஆகின்றது. நெல்லைச் சாகுபடி செய்யாமல் காசு கொடுத்து அரிசி வாங்கிப் பொங்கித் தின்பவனுக்குச் சோறு இனிக்கும்.
நெல் கொள்முதல் விலையை ரூ. 2000 உயர்த்தக்கோரி, தமிழ்நாடு விவசாயிகள் தொடர்ந்து வீதிக்கு வந்து போராடுகிறார்கள். நெல்லுக்கு விலை இல்லாமல் போனால் விவசாயி வீட்டில் விளக்கு எறியுமா? நெல்லை விட கரும்பு போட்டவன் நிலை மிக பரிதாபம். தேங்காய் சீசனில் தேங்காய்க்கு விலை இல்லை. காய்கறி மார்க்கெட் நிலை தடுமாறுகிறது. பூ உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலைமை படுமோசம். இப்படி இன்றைய சூழலில் விவசாயிகள் பன்முனைத் தாக்குதலுக்கு ஆட்படுகின்றனர். வேளாண்மைக்கு மரியாதை குறைந்துவிட்டதால் வேளாண்மை கீழே நிற்க ஏனைய தொழில்கள் எல்லாம் உயரப் பறக்கின்றன. விவசாயி தள்ளாடுகின்றான். விவசாயம் செய்யாமல் வேறு தொழில் செய்பவர்கள் உயர உயரப் பறக்கின்றனர்.
இது என்ன வளர்ச்சியா? பெட்ரோல், ஹைட்ரோகார்பன், கார், விமானம் இல்லாமல் வாழலாம். உணவின்றி உயிர்வாழ முடியுமா? நமது தலைமை அமைச்சர் விவசாயிகளின் துணையில்லாமல் எப்படித்தான் இந்தியாவைத் தலைநிமிர்த்தப் போகிறாரோ? ஒன்றுமே புரியவில்லை. இப்படிப்பட்ட ஓர் எதிர்மறையான வளர்ச்சியை கிராமம்தோறும் பார்க்கலாம். இப்போது கிராமங்கள் எல்லாம் முதியோர் இல்லங்களாக மாறிவருகின்றன. தான் பட்ட நஷ்டத்தை, கஷ்டத்தை தன் பிள்ளைகள் பட வேண்டாம் என்று விவசாயிகள் நினைப்பதனால் அவர்களின் பிள்ளைகள் அருகில் உள்ள நகரத்தில் ஏதோ பிழைப்பதற்க்காக வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பதை பார்க்கலாம். இந்த நகரமயமாதல் இந்தியாவில் மிகப் பாடுபடும் சுற்றுச்சூழல் சீரழிவை, வேளாண் தொழில் நெருக்கடியை ஏற்படுத்துவதை யாவரும் அறிவோம்.
இன்றைய நவீன இந்தியாவில் அதன் அரசியல் அமைப்பில் ஒரு கட்சி அரசியலை அண்டி வாழ வேண்டிய நிலை தீவிரமாகிவிட்டது. மக்கள் தாமாகவே செய்து வந்த குடிமராமரத்து என்ற பொதுவேலை இன்று அரசின் பொறுப்பாகிவிட்டது. அரசியல் கட்சிகள், அரசியலில் நீடிக்க இலவசங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. மக்களை இலவசங்களை நோக்கி எதிர்பார்க்கும் பிச்சைக்காரர்களாக உளவியல் ரீதியாக மாற்றிவிட்டனர். எல்லாவற்றையும் அரசாங்கம் செய்யும் என்று மக்களை நம்பவைத்துவிட்டதால் வேளாண்மையில் உற்பத்தி திறன் குறைந்துவிட்டது. வேளாண்மை செய்ய யாரும் முன்வருவதில்லை.
-தொடரும்….
கட்டுரையாளர்: முனைவர் அக்ரி ச. பாபு, இணைப் பேராசிரியர், உழவியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.
மின்னஞ்சல்: agribabu74@gmail.com அலைபேசி எண் : 9486836801.