இயல்பு என்பது இன்பம் மட்டுமல்ல துன்பமும் தான்; காற்றுக்கு இயல்பு தென்றல் மட்டுமல்ல புயலும் தான்; தீபம் மட்டுமல்ல பெரும் பிளம்பும் நெருப்பின் வடிவம்தான். அதுபோல்தான் நீரும் வெறும் கட்டுக்குள் மட்டும் ஓடிய ஒரு ஆறு, உலகில் இல்லை எல்லாம் கரை உடைத்து வெள்ளம் கண்டவை தான். இவர்கள் இவ்வளவு தான் இயற்கையை எளிதில் அடக்கிவிடலாம் என்று மனிதன் எண்ணிய போதெல்லாம் மீண்டும் தன் கட்டற்ற பலத்தால் இயற்கை அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது. காலத்தால் இவை அழியாது என்று எண்ணியவை யாவையும் கணநேரத்தில் அழித்து அவன் கண்முன்னே காட்டி இருக்கிறது இயற்கை. இவற்றிற்கு எந்த பாகுபாடும் இல்லை, இவற்றிற்கு எந்த பண்பாடும், நாகரீகமும், சாம்ராஜ்யங்களும், நகரங்களும் தப்பியது இல்லை.
அதற்கு பெரும் உதாரணம் நம் பூம்புகார். பழந்தமிழ் நாட்டின் சோழர்களின் முக்கியமான துறைமுக நகரம் பூம்புகார். வர்த்தகம், வாணிபம், வாழ்வியல், கலை என்று பலவற்றிலும் செழுத்திருந்த பகுதி. அப்படிப்பட்ட நகரம் ஒரு காலத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் கடல்கொண்டதாக ஆய்வாளர்களும் தமிழ் அறிஞர்களும் கூறுகின்றனர். அதற்கு ஒரு ஆதாரமாக கண்டுபிடிக்கப்பட்டதுதான் கடலுக்கு அடியில் இருக்கும் பூம்புகாரின் கல்மண்டபம். தமிழக அரசும் ஒரு முறை இதை அறிய ஒரு ஆய்வுக்கு அனுமதியும் நிதியும் தந்தது. இப்படி உலக அளவில் பல பண்பாடுகள் நீரால் படாதபாடு பட்டு இருக்கின்றன.
உலகின் பழமையான நாகரீகங்களான எகிப்திய நாகரீகம், மெசபடோமிய நாகரீகம், சிந்து சமவெளி நாகரீகம், சீனாவின் மஞ்சள் நதி நாகரீகம் என்று எல்லா பண்பாடுகளும் வெள்ளத்தால் பெரும் சேதத்தை சித்தரிக்கின்றன. குறிப்பாய் எகிப்தின் 50 சதவீத மக்கள் நைல் நதியை நம்பியே உள்ளனர். இவற்றில் பல முறை வெள்ளம் ஏற்பட்டு அம்மக்களின் அன்றாட வாழ்வையும் உயிரையும் பறித்து இருக்கின்றது. இருந்தும் அம்மக்கள் வெள்ளத்தை வரவேற்கத்தான் செய்திருக்கின்றனர். காரணம், வெள்ளம் வந்தால் நிலம் செழிப்படையும் என்பது அவர்களது நம்பிக்கை அறிவியலும் அதை உண்மை என்று கூறுகிறது. இதுபோன்ற மத்திய கிழக்குப் பகுதிகளையும் டைகிரிஸ் யுப்பரட்டஸ் நதிகளில் பல முறை வெள்ளம் வந்ததற்கு உண்டான ஆராய்ச்சிகளும் சான்றுகளும் இருக்கின்றன. நம் சிந்துசமவெளி நாகரீகம் அழிந்ததற்கு வெள்ளம் ஒரு முக்கிய பங்காகும்.
எனினும் அன்றைய காலங்களில் வெள்ளத்தால் ஏற்பட்ட பெரும் உயிரிழப்பு என்று குறிப்பிடப்படுவது சீனாவின் மஞ்சள் நதி உயிரிழப்பு தான். 1642 ஆம் வருடம் மிங் சாம்ராஜ்யத்தின் இறுதி காலகட்டம். அதற்கு முன்பே பதினைந்தாம் நூற்றாண்டில் பல முறை வெள்ளம் ஏற்பட்டது. இதனால் வெள்ளத்தை கட்டுக்குள் கொண்டுவர சில முன்னேற்பாடுகளை செய்கிறது. அப்படி ஒரு அணை போன்ற அமைப்பை உருவாக்கி வெள்ளத்தால் ஏற்படும் நீரை அங்கே சேமித்து வைக்கிறது. 1642 ஆம் வருடம் மக்கள் புரட்சியில் ஈடு பட மக்களைக் கட்டுக்குள் கொண்டுவர தவறிய அரசு அந்த அணையை உடைத்து புரட்சியை முடிவுக்கு கொண்டுவர எண்ணுகிறது. அதை நிறைவேற்றவும் செய்கிறது. இதனால் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். செயற்கையாக உருவாக்கப்பட்டது என்றாலும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய ஒரு வெள்ளம் என்று வரலாற்றில் கணிக்கப்படுகிறது. இதனால் 1642ஆம் வருடத்திற்குப் பிறகு இருபது ஆண்டுகள் பிளேக் நோயும் பஞ்சமும் அப்பகுதியை பெருமளவு சேதப்படுத்துகின்றன. இதுவே மிங் சாம்ராஜ்யம் முடிவுறும் காரணமாய் அமைகிறது.
இதனோடு மட்டுமில்லாமல் சீனாவின் மஞ்சள் நதி அதற்குப் பிறகு பலமுறை வெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதங்களை ஏற்ப்படுத்தியிருக்கிறது. 1938 இல் ஏற்பட்ட வெள்ளம் தான் சமீப காலங்களில் ஏற்பட்ட மிகக் கொடூரமான வெள்ளங்களில் ஒன்று. இவற்றால் 4 லட்சம் மக்கள் வரை இறந்திருக்கக் கூடும் என்று கணிக்கப்படுகிறது. இன்று கொரோனா தொற்று உருவாகக் காரணமான வுஹான் நகரமும் இந்த வெள்ளத்தில் இருந்து தப்பவில்லை. இவை சீன தேசத்தில் நடந்திருந்தாலும் உலகின் பல சாம்ராஜ்யங்கள் அழிய நீர் ஒரு பெரும் காரணமாய் அமைந்திருக்கிறது.
கிபி 365 இல் அலெக்ஸாண்டிரியாவில் ஆழிப்பேரலையால் அந்த சாம்ராஜ்யம் அழிந்திருகின்றது. எழுநூறு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் வெள்ளத்தால் பல சாம்ராஜ்யங்கள் அழிந்து இருக்கின்றன. அவற்றில் சில வங்கத்தில் சேனா, கிழக்கின் சோலங்கி, பராமர், தெற்கில் யாதவ பாண்டிய அரசுகளும் உட்படும். இப்படி வெள்ளம் கொண்டு சென்ற அரசுகள் உலக அளவில் கணக்கிட்டால் ஏராளம்.
சரி வெள்ளத்தால் உயிரிழப்பும் அரசுகளும் மட்டும் அழியவில்லை. சில அழகான சம்பவங்களும் நடந்திருக்கின்றன. இனி வரும் வாரம் அதைப்பற்றிக் காண்போம்…
தொடரும்…
கட்டுரையாளர்: அன்பன் செ. விக்னேஷ், இளநிலை வேளாண்மை பட்டதாரி, குளித்தலை, தொடர்பு எண்: 8344848960, மின்னஞ்சல்: vickysvicky42@gmail.com