பண்டைய கால வேளாண் தொழில் நுட்பத்தில் பசுவில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும் விவசாயத்தில் பயன்படுத்தப்பட்டன. நமது முன்னோர்கள் அனைத்து விதமான நல்ல நிகழ்வுகள் மற்றும் கோவில்களில் பஞ்சகவ்யாவை பயன்படுத்தினர். இதன்மூலம் உடலுக்கு பல விதமான நன்மைகள் கிடைத்தன. இதே வழியைப் பின்பற்றி கொடுமுடி திரு. நடராஜன் அவர்கள் பயிர்களுக்கு பஞ்சகவ்யாவை பயன்படுத்தி வெற்றி பெற்றதின் மூலம் இன்று தமிழகத்தில் பஞ்சகவ்யா இயற்கை வேளாண்மையில் ஒரு மிகப் பெரிய பங்கு வகிக்கிறது.
பஞ்சகவ்யா என்பது பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை கொண்டு உருவாக்கப்படும் ஒரு உயிரி நீர்மக்கலவை. இது பயிர்களின் வளர்ச்சி ஊக்கியாகவும் மற்றும் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கவும் பயன்படுகிறது. பஞ்சகவ்யாவில் ஒன்பது வகையான பொருட்கள் சேர்க்கப்படுகிறது. அவை மாட்டுச்சாணம், மாட்டு கோமியம் (சிறு நீர்), பால், தயிர், நாட்டுச்சர்க்கரை (இரசாயனம் கலக்காதது), நெய், வாழை, இளநீர் மற்றும் தண்ணீர். இவைகளை சரியான அளவில் பயன்படுத்தினால் எதிர்பார்க்கும் தீர்வைக் காணலாம். முதன் முதலாக இரசாயன வேளாண்மையில் இருந்து அங்கக வேளாண்மைக்கு நிலங்களை மாற்றும் பொழுது பஞ்சகவ்யா அனைத்துப் பயிர்களின் மகசூல் இழப்பை குறைக்கிறது. விலை உயர்ந்த இரசாயனப் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களை குறைப்பதினால் பஞ்சகாவ்யா அதிகப்படியான இலாபத்தையும், அங்கக விவசாயிகளின் உற்பத்தி செலவையும் குறைகின்றது.
தேவையான உபகரணங்கள்: பிளாஸ்டிக் கொள்கலன் (ட்ரம்) அல்லது சிமெண்ட் தொட்டி, கலக்குவதற்கு மரக்குச்சி, மூடுவதற்கு காற்றோட்டம் உள்ள பருத்தி துணி, ஓர் கொசுவலை (அல்லது) சணல் சாக்கு.
தயாரிக்கும் முறை:
முதல் கட்டம்:
- பசு மாட்டுச்சாணம் – 7 கிலோ
- பசு மாட்டு நெய் – 1 கிலோ
இந்த இரண்டு பொருட்களையும் நன்றாக கலந்து காற்றோட்டமுள்ள துணி அல்லது வலை கொண்டு மூடி விடவும். இதன்மூலம் ஈ உள்ளே சென்று முட்டை இடுவதை தவிர்க்கலாம். கலக்கும் குச்சியை உள்ளேயே வைத்து மூடி விடவும். இந்த கலவையை காலை மற்றும் மாலை நேரங்களில் கலக்கி மூன்று நாட்கள் வரை வைக்கவும்.
இரண்டாம் கட்டம்:
- பசு மாட்டு கோமியம் – 10 லிட்டர்
- தண்ணீர் – 10 லிட்டர்
மூன்று நாட்கள் கழித்து மாட்டு கோமியம் (சிறுநீர்) மற்றும் தண்ணீரை இதனுடன் சேர்த்து தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நன்றாகக் கலக்கி 15 நாட்கள் வரை வைக்கவும்.
மூன்றாம் கட்டம்: 15 நாட்கள் கழித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அதனுடன் கலந்தால் 30 நாட்களுக்குள் பஞ்சகாவ்யா தயாராகிவிடும்.
- பால் -3 லிட்டர்
- தயிர் -2 லிட்டர்
- நன்கு கனிந்த பூவன் வாழைப்பழம்-12 எண்ணிக்கை
- இளநீர் -3 லிட்டர்
- கரும்பு சாறு -3 லிட்டர் (கரும்பு சாறு இல்லையென்றால் 500 கிராம் நாட்டுச்சர்க்கரை (இரசாயனம் கலக்காதது) மூன்று லிட்டர் தண்ணீரில் கலக்கி பயன்படுத்தலாம்).
30 நாட்களுக்கு பிறகு பஞ்சகாவ்யா கரைசல் தயாராகிவிடும். இதை தயாரிக்கும் போது, நாட்டு மாடு (அல்லது) பசுவின் பொருட்கள் மட்டும் பயன்படுத்தவும். இதனை நிழலில் தான் வைக்க வேண்டும் .
தெளிக்கும் முறை:
பொதுவாக பஞ்சகாவ்யாவை அனைத்து பயிர்களுக்கும் 3% அளவு தெளிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது. 10 லிட்டர் கொள்ளளவு உள்ள கைத் தெளிப்பான் அல்லது விசைத்தெளிப்பான் பயன்படுத்தும் போது, 300 மி.லி. அளவு தேவைப்படும்.
பாசன நீரில் கலந்து விடுவது: பஞ்சகாவ்யா கரைசலை நீர்ப் பாசன முறையில் 20 லி/ ஏக்கர் என்ற அளவில் கலந்து சொட்டுநீர்ப்பாசனம் அல்லது வாய்க்கால் பாசன முறையில் இதனை பாய்ச்சவும்.
விதை மற்றும் நாற்று நேர்த்தி: நடவு செய்வதற்கு முன்பு விதைகளை கலந்து வைக்க அல்லது நாற்றுகளை ஊற வைக்க 3% பஞ்சகாவ்யா கரைசல் பயன்படுத்தப்படுகின்றது. மேற்கண்ட இரு முறைகளுக்கும் 20 நிமிடங்கள் போதுமானது. மஞ்சள், பூண்டு மற்றும் கரும்பு வேர்க்கரணைகளை நடவு செய்வதற்கு முன் 30 நிமிடங்கள் இந்தக் கரைசலில் ஊற வைக்க வேண்டும்.
விதை சேமிப்பு
விதைகள் உலர்வதற்கு முன்பும், சேமித்து வைப்பதற்கு முன்பும் 3% பஞ்சகாவ்யா கரைசலில் நனைத்து எடுத்து சேமிக்கவும்.
பஞ்சகாவ்யாவின் பயன்கள்
- பயிர்களின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுவதனால், மகசூல் அதிகமாகும்
- தும்பி, சிலந்தி மற்றும் பிற நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மற்றும் நோயின் தாக்கத்தையும் கட்டுப்படுத்தும்.
- வாழை: 3% பஞ்சகவ்யா (100 மி.லி.) கரைசலை ஆண் மொட்டுக்களை அகற்றிய பின் குலையின் நுனியில் பாலிதீன் பைகளைப் பயன்படுத்தி கட்டுவதன் மூலம் வாழைக் குலையின் அளவு ஒரே சீராக வளர்ச்சியடையும்.
- காய்கறிகள் மற்றும் இதர பழப்பயிர்கள்: பஞ்சகவ்யா பயன்படுத்துவதால் மகசூல் 18% அதிகரிக்க வாய்ப்புண்டு; பஞ்சகவ்யா காய்கறிகள் மற்றும் பழங்களை பளபளப்பாக்கும் தன்மையுடையது, மேலும் காய்கறிகள் மற்றும் பழங்கள் நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருப்பதற்கு உதவுகின்றது;
- நெல் பயிரில் பூ பூக்கும் முன்பாக இருமுறை தெளித்தால் சிறந்தது.
- அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
திருச்சியில் உள்ள மத்திய ஒருங்கிணைத்த பயிர் பாதுகாப்பு மையமானது, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி விவசாயிகள் பாதுகாப்பான உணவு உற்பத்தி செய்வதற்கு, பஞ்சகவ்யா தயாரிப்பு முறைகள் பற்றி குறுகிய கால பயிற்சிகளை நடத்துகிறது. விருப்பமுள்ளவர்கள் அதில் பங்கேற்று பயிற்சி பெற்று பயனடையலாம்.
கட்டுரையாளர்கள்:
முனைவர். சி. ஞானசம்பந்தன் (உதவி இயக்குனர்), முனைவர். ம. அய்யம்பெருமாள் (தொழில் நுட்ப அலுவலர்), ம அமுதா (உதவி பயிர் பாதுகாப்பு அலுவலர்) மற்றும் கோ.காளீஸ்வரன் (தொழில் நுட்ப அலுவலர்), மத்திய ஒருங்கிணைத்த பயிர் பாதுகாப்பு மையம், இந்தியா வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகம், இந்திய அரசு, திருச்சிராப்பள்ளி. தொடர்பு எண் : 0431-2420970/2420190.
இமெயில் : ipmtn16@nic.in