உலகளவில் முக்கிய உணவுப் பயிராக விளங்கும் நெற்பயிர், தமிழ்நாட்டில் 20 இலட்சம் எக்டரில் பயிரிடப்படுகிறது. குறுவையில் 16%, சம்பா பருவத்தில் 74 %, நவரையில் 10% என்னுமளவில் சாகுபடி செய்யப்படுகிறது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரிப் படுகையில், சம்பாவில் அதிகளவாக 4.1 இலட்சம் எக்டரிலும், தாளடியில் 1.2 இலட்சம் எக்டரிலும் பயிரிடப்படுகிறது.
1965 இல் தமிழ்நாட்டில் எக்டருக்கு 1400 கிலோவாக இருந்த மகசூல், 2000 இல் 3000 கிலோவாக உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட உயர் விளைச்சல் இரகங்கள் மற்றும் சாகுபடி உத்திகளால் தற்போது தமிழகத்தின் நெல் உற்பத்தித் திறன் எக்டருக்கு 3040 கிலோவாகவும், பெரும்பான்மையான இடங்களில் எக்டருக்கு 5 டன்னுக்கு மேலாகவும் உள்ளது. தமிழகத்தின் சராசரி நெல் உற்பத்தித் திறன் எக்டருக்கு 4100 கிலோவாகும். தமிழ்நாட்டில் 2013-14 இல் 17.26 இலட்சம் எக்டரில் 71.15 இலட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது.
சம்பா, தாளடிக்கு ஏற்ற நெல் வகைகள்
திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடியில் நெல் பயிரிடப்படுகிறது. ஜூலை-ஆகஸ்ட் முதல் ஜனவரி-பிப்ரவரி வரை முன்சம்பா பட்டமாகும். இப்பட்டத்துக்கு 150-160 நாட்கள் வயதுள்ள நீண்ட கால நெல் இரகங்கள் ஏற்றவை. பின்சம்பா மற்றும் தாளடிப் பருவம், செப்டம்பர்-அக்டோபர் முதல் ஜனவரி-பிப்ரவரி 15ஆம் தேதி வரை உள்ளது. இதற்கு 125-140 நாட்கள் வயதுள்ள மத்திய கால நெல் இரகங்கள் ஏற்றவை.
மத்திய கால இரகங்கள் (125-140 நாட்கள்)
கோ 45:
வயது 135-140 நாட்கள். அரிசி நீண்டு சன்னமாக, வெள்ளையாக இருக்கும். எக்டருக்கு 5.5 டன் மகசூல் கிடைக்கும். துங்ரோ வைரஸ் நோயைத் தாங்கி வளரும்.
கோ 48:
இது 2007 இல் வெளியிடப்பட்டது. கோ 43 மற்றும் ஏஎஸ்டி 19 இரகத்தை ஆதாரமாகக் கொண்டது. வயது 130-135 நாட்கள். மிக உயரமாக வளரும். அரிசி மத்திமமாக, சன்னமாக இருக்கும். எக்டருக்கு 6 டன் மகசூல் கிடைக்கும். குருத்துப்பூச்சி, குலை நோய், இலையுறைக் கருகல் நோய், இலையுறை அழுகல் நோய் மற்றும் துங்ரோ வைரஸ் நோயை ஓரளவு தாங்கி வளரும். பாக்டீரியா கருகல் நோயைத் தாங்கி வளராது.
கோ 49:
இது 2007 இல் வெளியிடப்பட்டது. வயது 130-135 நாட்கள். குட்டையாக இருக்கும். நன்கு தூர் கட்டும். அரிசி மத்திமமாக, சன்னமாக, நுனி சற்று வளைந்து இருக்கும். பச்சைத் தத்துப்பூச்சி, தண்டுத் துளைப்பான், குலை நோய் மற்றும் துங்ரோ நோயை ஓரளவு தாங்கி வளரும். எக்டருக்கு 6.3 டன் மகசூல் கிடைக்கும்.
கோ 50:
இது 2010 இல் வெளியிடப்பட்டது. கோ 43 மற்றும் ஏடிடீ 38 இரகத்தை ஆதாரமாகக் கொண்டது. வயது 135-140 நாட்கள். சாயாத இரகம். நீண்ட கதிர்களில் மத்திமமாக, சன்னமாக மணிகள் இருக்கும். எக்டருக்கு 6.4 டன் விளைச்சலைத் தரும். குலை நோய், இலையுறை அழுகல், பாக்டீரிய கருகல், துங்ரோ மற்றும் தத்துப்பூச்சிக்கு மிதமான எதிர்ப்புத் தன்மை உடையது.
ஆடுதுறை 46:
வயது 135 நாட்கள். நன்கு தூர் பிடித்து வளரும். அரிசி நீண்டு சன்னமாகவும் வெள்ளையாகவும் இருக்கும். எக்டருக்கு 6.1 டன் விளைச்சல் கிடைக்கும். ஆயிரம் மணிகள் 23.8 கிராம் இருக்கும். முழு அரிசித் திறன் 63% ஆகும். இலை மடக்குப்புழு மற்றும் குருத்துப் பூச்சி, குலைநோய், இலைக்கருகல் மற்றும் துங்ரோ நோயைத் தாங்கி வளரும்.
ஆடுதுறை 49:
இது 2011 இல் வெளியிடப்பட்டது. சிஆர் 1009 மற்றும் சீரகச் சம்பாவை ஆதாரமாகக் கொண்டது. வயது 130-135 நாட்கள். சாய்வதில்லை. முத்துகளைக் கோர்த்ததைப் போல் மணிகள் இருக்கும். அரிசி மத்திமமாக, சன்னமாக, வெள்ளையாக இருக்கும். எக்டருக்கு 6.2 டன் மகசூல் கிடைக்கும். ஆயிரம் மணிகள் 14 கிராம் இருக்கும். அறுவடையின்போது மணிகள் உதிராது. முழு அரிசித்திறன் 71.3%. சோறு ஒன்றுக்கொன்று ஒட்டாமல் சுவையாக இருக்கும். குலை நோய், இலையுறைக் கருகல் நோய், இலையுறை அழுகல் மற்றும் துங்ரோ நோயை ஓரளவு தாங்கி வளரும். பாக்டீரிய கருகல் நோயைத் தாங்கி வளராது.
கோ 43:
வயது 135-140 நாட்கள். அரிசி மத்திமமாக, சன்னமாக, வெள்ளையாக இருக்கும். எக்டருக்கு 5.2 டன் விளைச்சல் கிடைக்கும். ஆயிரம் மணிகள் 20 கிராம் இருக்கும். நெற்பழ நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும்.
-தொடரும்….
கட்டுரையாளர்கள்: இரா. வினோத், வ. பாஸ்கரன், சீ. விஜய், ஜோ. மேரி லிசா மற்றும் க. அண்ணாதுரை, வேளாண் கல்வி நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், குமுளூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம். மின்னஞ்சல்: rvinothagri@gmail.com