Site icon Vivasayam | விவசாயம்

சோளத்தில் தேன் ஒழுகல் நோயும் மேலாண்மை முறைகளும்

சோளம் தமிழ்நாட்டில் முக்கியமான தீவனப்பயிர்களில் ஒன்றாகும். இது வறட்சியைத் தாங்கும் திறனைப் பெற்றிருப்பதால் வறட்சியான மாவட்டங்களில் பெரும்பாலும் மானாவாரியாக பயிரிடப்படுகிறது. நீர் உள்ள இடங்களில் பாசன முறைகளிலும் பயிரிடப்படுகிறது. தீவனப்பயிராக இருப்பதால் இதில் வரும் நோய்களுக்கும் பூச்சிகளுக்கும் விவசாயிகள் பெரும்பாலும் எந்த வித மேலாண்மை முறைகளையும் கடைபிடிப்பது இல்லை. இதனால் அதிகப்படியான மகசூல் இழப்பு ஏற்படுகிறது. அந்த வகையில் முக்கியத்துவம் பெரும் ஒரு நோய்  தேன் ஒழுகல் நோய் ஆகும். இந்நோயானது கிளாவிசெப்ஸ் பியூசிபார்மிஸ் என்ற பூஞ்சாணத்தின் மூலம் ஏற்படுகிறது. அதன் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மேலாண்மை முறைகள் குறித்தும் இக்கட்டுரையில் காண்போம்.

நோய் தாக்குதலுக்கான காரணங்கள்:

காற்றில் ஈரப்பதம் அதிகம் உள்ள காலங்களில் வானம் மேகமூட்டமாக காணப்படும் போது இந்நோய்த் தாக்குதல் ஏற்படுகிறது. குறிப்பாக காரிப் பருவத்தில் மானாவாரியாக விதைக்கும் பொழுது பூக்கும் தருணத்தில் அதிக மழை வரும். அதனால் இந்நோய் அதிகம் தாக்கப்டுகிறது. ஸ்கிளிரோடியா மற்றும் கொனிடியாக்கள் மூலம் இந்நோய் அதிகம் பரவுகிறது. இந்நோய் பரவ மழைத்துளிகளும் இரண்டாம் நிலை காரணியாக உள்ளது.

நோய்க்கான அறிகுறிகள்:

இந்த நோயானது பூக்கும் தருணத்தில்தான் முதலில் தெரியும்.  நோய் தாக்கிய கதிர்களில் இருந்து தேன் போன்ற திரவம் வடிவது இதன் அறிகுறியாகும். இந்த தேன் போன்ற திரவம் மற்ற நோயற்ற செடிகளின் மீது படும்போது இந்த நோய் அதற்கும் பரவுகிறது. இந்த நோய் தாக்கிய கதிர்களில் தானியங்கள் உருவாவது இல்லை. இதற்கு மாறாக அடர் பழுப்பு அல்லது வெளிர் கருப்பு நிறத்தில் பூஞ்சாண வித்துக்கள் உருவாகிறது. பூஞ்சாண வித்துக்கள் அறுவடையின் பொழுது மண்ணிலும் தானியங்களிலும் கலந்து அடுத்த பருவத்தில் நோய் பரவ காரணமாகிறது.

நோய் தாக்கிய கதிர்களிலிருந்து வடியும் தேன் போன்ற திரவத்தில் எர்காட்டமைன், எர்காட்டோமெட்ரின், எர்கோடாக்சின் போன்ற நச்சுப் பொருட்கள் நிறைந்துள்ளது. இது விலங்குகளிலும், மனிதர்களிலும் மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இதனால் மனிதர்களில் எர்கோடிசம் என்ற நோய் ஏற்படுகின்றது. விலங்குகளில் சில சமங்களில் இறப்பு கூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

மேலாண்மை முறைகள்:

பூக்கும் தருணத்தில் மழை பெய்வதாலும் காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதாலும் இந்நோய் ஏற்படுகிறது. எனவே பூக்கும் தருணம் மழையுடன் சேராதவாறு பயிரிட வேண்டும். விதைக்கும் பொழுது 10% சோடியம் குளோரைடு (NaCl) கரைசலில் விதைகளை கொட்டி நீர் மேல் மிதக்கும் விதைகளை நீக்கிவிட வேண்டும். விதைப்பதற்கு முன் ஒரு கிலோ விதைக்கு  4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனஸ் புளோரசன்ஸ் போன்ற உயிர் பூஞ்சாண கொல்லிகள் அல்லது 2 கிராம் கார்பண்டசிம் என்ற பூஞ்சாணக் கொல்லிகளுடன் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். கதிர்களில் இந்நோய் காணப்பட்டால் அந்த கதிரை அழித்து விட வேண்டும். துவரை போன்ற உயரமாக வளரும் பயிர்களை ஊடு பயிர்களாக பயிரிடுவதன் மூலம் காற்றின் மூலம் பூஞ்சாண வித்துக்கள் பரவுவதைத் தடுக்கலாம். இந்நோய் தாக்கப்பட்ட வயலில் நாம் நுழையும் போது தேன் போன்ற திரவம் நம் உடலில் ஒட்டிக்கொள்ளும். இதனால் மற்ற வயல்களிலும் பரவிவிடும்.  எனவே, இந்நோய் தாக்கப்பட்ட வயலுக்குள் நுழைந்த பிறகு மற்ற சோள வயல்களுள் நுழையக்கூடாது.  பூக்கும் தருணத்தில் இந்நோய் தென்பட்டால் ஒரு ஹெக்டேருக்கு 500 கிராம் கார்பண்டசிம் பூஞ்சாணக்கொல்லியை தெளிக்க வேண்டும். கதிர்களில் இந்நோய் தென்பட்ட பிறகு மேலாண்மை செய்வது கடினம். வருமுன் காப்போம் வளம் பெருவோம்.

கட்டுரையாளர்கள்:

1. எ. செந்தமிழ், முதுநிலை வேளாண் மாணவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: elasisenthamil@gmail.com

2. கா. சரண்ராஜ், முதுநிலை வேளாண் மாணவர், விஸ்வபாரதி பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: klsk.1998@gmail.com

Exit mobile version