விளை நிலத்தைப் பாதுகாக்க மரம், செடி, கொடி போன்றவற்றால் அமைக்கும் வேலி உயிர் வேலி (Live Fencing) எனப்படுகிறது. உயிருள்ள தாவரங்களினால் அமைக்கப்படுவதாலும், பல உயிர்கள் இதில் வாழ்வதாலும் உயிர் வேலி என்றழைக்கப்படுகிறது. விளை நிலத்தை விலங்குகளிடமும், மனிதர்களிடமும் இருந்து பாதுகாக்கவும், சூறாவளி காற்றிலிருந்து பயிரை பாதுகாக்கவும் உயிர் வேலி அமைக்கப்படுகிறது. பயிரை விளைவிக்க வரும் செலவை விட அதனை பாதுகாக்க அமைக்கும் செயற்கை கம்பி வேலியின் செலவு மிகுதியானது. இயற்கை உயிர் வேலி அமைப்பதனால் நிலத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல், உயிர் வேலியிலும் விளைச்சலை பெறலாம். ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் உயிர்வேலிகள் மாறுபடும். அந்தந்த மண்ணுக்கும், சூழலுக்கும் ஏற்ப தகுந்த உயிர் வேலியை அமைக்க வேண்டும். வேலியில் முள் வேலியே முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. ஐந்தடுக்கு உயிர் வேலி வகைகளும் உண்டு. சரியான மழைக்காலங்களில் உயிர் வேலி அமைப்பதால் தொடக்கத்தில் மழை நீர் வழியாக உயிர் பிடித்து பின்னர் வறட்சியைத் தாங்கி, நீண்ட பலன் தரும் அரணாக உயிர்வேலி அமைகிறது.
உயிர் வேலியில் பயன்படுத்தப்படும் மரங்கள்:
- முள் மரங்களான முள்கிழுவை, பரம்பை, இலந்தை, ஒத்தக்கள்ளி, கொடுக்காப் புளி, பனை மரம் வெள் வேல், குடை வேல் போன்றவற்றை வளர்க்கலாம்.
- சவுண்டல், மலை வேம்பு, சவுக்கு, நுனா போன்ற நீள்குடை மரங்களை வளர்க்கலாம்.
- கால்நடை தீவனங்களான அகத்தி, முள்முருங்கை, மலைக்கிழுவை, ஆமணக்கு ஆகியவற்றை வளர்க்கலாம்.
- மூலிகைகளான பிரண்டை, முடக்கத்தான், நொச்சி, கோவக்கொடி அதோடு சூரை, பீர்க்கங்காய், பாகற்காய் என விவசாயிகள் தங்கள் தேவைக்கு ஏற்ப உயர் வேலிகள் அமைக்கலாம்.
உயிர்வேலியின் பயன்கள்:
- விளை நிலத்தை பாதுகாக்கவும், மண் அரிப்பைத் தடுக்கவும் மற்றும் சூறாவளி காற்றால் பயிர்கள் சேதமடைவதைத் தவிர்க்கவும் பயன்படுகிறது.
- ஆடு மாடுகளுக்கு தீவனமாக, வயலுக்கு பசுந்தாள் உரமாக பயன்படுகிறது.
- காய்கனிகள், கீரைகள், மூலிகைகள் உற்பத்தி செய்ய பயன்படுகிறது. இதன்மூலம் விவசாயிகளின் வருவாய் மேம்படும்.
- பறவைகளுக்கு உணவு, உறைவிடமாகவும் பயன்படுகிறது.
- தேன் கூடுகள் அதன் அருகில் அமைப்பதின் மூலமாகவும் நன்மைகளைப் பெறலாம்.
- உயிர் வேலிகள் விறகுக்காகவும், மரச்சாமான்களுக்காகவும் பயன்படுகிறது.
- இது மட்டுமின்றி காற்றின் மூலன் பரவக்கூடிய பூஞ்சாண நோய்க் காரணிகள் மற்ற வயலிலிருந்து பரவுவதைத் தடுக்கும் அரணாக விளங்குகிறது.
- எனவே ஒவ்வொரு விவசாயியும் தங்களுடைய நிலத்தில் உயிர்வேலி அமைப்பதன் மேற்கூறியுள்ள நன்மைகளைப் பெற முடியும்.
கட்டுரையாளர்: பி.மொ்லின், முதுநிலை வேளாண் மாணவி, வேளாண் நுண்ணுயிரியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: merlinbrittoagri@gmail.com