Site icon Vivasayam | விவசாயம்

மஞ்சளில் குழித்தட்டு நாற்று பயிர் பெருக்க முறை

ஏழைகளின் குங்குமப்பூ என அழைக்கப்படும் மஞ்சள் இந்தியாவின் மிகப்பழமையான நறுமணப் பயிராகும். இதனை தமிழர்கள் புனிதப் பொருளாக பயன்படுத்துகின்றனர். மஞ்சளில் குர்குமின் என்னும் வேதிப்பொருள் நிறத்தைத் தருவதுடன் பல்வேறு பயன்களையும் தருகிறது. இது தமிழர்களின் வாழ்விலும், உணவிலும் மற்றும் மருத்துவத்திலும் பாரம்பரியமாக நீங்காத இடத்தை பெற்றுள்ளது. மஞ்சள் பொதுவாக தாய் கிழங்கு மற்றும் விரலி கிழங்குகளை கொண்டு பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. பொதுவாக ஒரு எக்டருக்கு 2000 முதல் 2500 கிலோ விதை கிழங்குகள் தேவைப்படுகின்றன. மஞ்சள் சாகுபடியில் அதிக செலவை தரக்கூடிய இடுபொருள்களில் விதை மஞ்சள் வாங்குவது முதன்மையான ஒன்றாகும். இந்த செலவை குறைக்க குழித்தட்டு நாற்றங்கால் முறை பெரிதும் உதவுகிறது.

 மஞ்சளில் விதை கிழங்கு தேர்வு

அதிக மகசூல் தரக்கூடிய ரகங்கள், பூச்சி மற்றும் நோய் தாக்காத தரமான விதைக் கிழங்குகளை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்த மஞ்சளை அறுவடை செய்தவுடன் செதில் பூச்சி மற்றும் பூஞ்சாணம் தாக்காதவாறு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

 விதை நேர்த்தி

மஞ்சளை நடுவதற்கு முன்பு விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைக் கிழங்குகளை விதை நேர்த்தி செய்ய ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி லிட்டர் பாசலோன் அல்லது 0.3 சதம் காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது 0.3 சதம் மேன்கோசெப் அல்லது 2 கிராம் கார்பன்டெசிம் அல்லது 1 கிராம் எமிசான் கலந்த நீரில் 30 நிமிடம் ஊறவைத்து பின் நடவு செய்ய வேண்டும். உயிரியல் முறையில் ஒரு கிலோ விதைக்கு சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 10 கிராம் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்யலாம். விதை நேர்த்தி செய்வதால் கிழங்குகளை தாக்கும் செதில் பூச்சி மற்றும் கிழங்கு அழுகல் நோய் ஏற்படுத்தக்கூடிய பூஞ்சைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் விதை நேர்த்தி செய்வதால் விதை கிழங்கின் முளைப்புத்திறன் அதிகரிக்கிறது.

குழித்தட்டு நாற்று உற்பத்தி முறை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் குழித்தட்டு நாற்று உற்பத்தி முறையை மஞ்சளில் அறிமுகப்படுத்தியுள்ளது. மஞ்சள் நடவிற்கு ஒரு மாதத்திற்கு முன் விதை நேர்த்தி செய்த விதை கிழங்குகளை முதலில் இரண்டு வளையம் மற்றும் ஒரு கணு உள்ளவாறு சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். இவ்வாறு நறுக்கப் பட்ட மஞ்சள் துண்டுகளின் எடை தோராயமாக 5 முதல் 7 கிராம் என்ற அளவில் இருக்கும். இதை மேன்கோசெப் 0.3 சத கரைசலில் 30 நிமிடம் விதைநேர்த்தி செய்து காய்கறி மற்றும் கரும்பு பயிரைப் போல 98 குழிகள் கொண்ட குழித்தட்டுகளை பயன்படுத்தி நாற்று உற்பத்தி செய்து நடவு செய்யலாம். இதற்கு நன்கு மக்கிய தென்னை நார் கழிவு மற்றும் மண்புழு உரம் (75:25) இவற்றுடன் டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் என்ற உயிரியல் கட்டுப்பாட்டு பொருளை எக்டருக்கு இரண்டு கிலோ என்ற அளவில் கலந்து குழித்தட்டுகளில் உள்ள குழிகளில் பாதி அளவு நிரப்பி அதில் நறுக்கப்பட்ட மஞ்சள் துண்டுகளை கணு பகுதி மேல்நோக்கி உள்ளவாறு வைக்க வேண்டும். பிறகு தென்னைநார் கலவை கொண்டு நிரப்பி ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி 50% நிழல் வலை கூடாரத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். கணுவில் இருந்து முளைப்பு வெளிவரும் சமயத்தில் (7 நாட்கள்) குழித்தட்டுகளை பிரித்து நிழல் வலையில் அடுக்க வேண்டும். பூவாளி கொண்டோ அல்லது கைத்தெளிப்பான் பயன்படுத்தியோ தேவைக்கு ஏற்ப நீர் தெளிக்க வேண்டும். 0.5 சத 19:19:19 உரக் கரைசலை 20 நாட்களில் தெளிக்கலாம். 30 முதல் 35 நாட்களில் மஞ்சள் நாற்றானது நடவிற்கு தயாராக இருக்கும்.

பயன்கள்

  1. விதை கிழங்கின் தேவை 25% குறைகிறது. ஒரு எக்டருக்கு 750 கிலோ விதை கிழங்குகள் தேவைப்படுகின்றன.
  2. நடவு வயலில் இருக்கும் காலம் குறைகிறது. இதனால் நீர் மற்றும் மின்சாரம் சேமிக்கப்படுகிறது, மேலும் ஒரு முறை களை எடுப்பதற்கான செலவு குறைகிறது.
  3. சரியான எண்ணிக்கையில் பயிர்களை பராமரிக்க முடிகிறது.
  4. தரமான நாற்றுகளை உற்பத்தி செய்ய முடிகிறது.
  5. விதைக் கிழங்கின் அளவும் அதற்கான செலவும் குறைகிறது.
  6. 25% மகசூல் அதிகரிக்கிறது.
  7. 98 -100% பயிர்களை பராமரிக்க முடிகிறது.

கட்டுரையாளர் :

முனைவர் அ. பழனிசாமி

தொழில் நுட்ப வல்லுநர் (தோட்டக்கலை), தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், வேளாண் அறிவியல் நிலையம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி மாவட்டம்-606301. மினன்னஞ்சல்:palanihort@gmail.com

Exit mobile version