ஒவ்வொரு முறை என் ஊரில் இருந்து திருச்சி செல்லும் பொழுது முத்தரசநல்லூர் எனும் ஊரில் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் என்ற பெயர் இருக்கும். அப்போது எனக்குத் தோன்றும் எண்ணம், மனிதர்களாகிய நாம் தான் எவ்வளவு வளர்ந்துவிட்டோம். கரிமம் (carbon) பற்றி எவரும் அறியாமல் இல்லை. உலகில் எந்தப் பொருளை எடுத்தாலும் அதன் மூலம் கரிமம் தான் அப்படித்தான் நீரும், இன்று உலகில் நாம் பார்க்கும் அத்தனை பொருட்களிலும் நீர் இருக்கிறது. இல்லையெனில் நீரினால் அப்பொருள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதை ஒட்டியே வள்ளுவன் “நீரின்றி அமையாது உலகு” என்று உலகுக்கு உரைத்தான். இன்றைய உலகம் மறைநீர் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அன்றே அதன் தேவையை உணர்ந்து தமிழ் மறையில் தந்தான் வள்ளுவன். அதனால்தான் இன்றும் தமிழ் சமூகம் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது.
இன்றேல்லாம் நாம் வாழும் பகுதிக்கு நாம் நமக்கு தேவையான நீரை கொண்டு செல்கிறோம். ஒரு நொடிக்கு 230 கியூபிக் மீட்டர் அளவு நீரை உறிஞ்சி கொட்டும் நிலைக்கு வளர்ந்து இருந்தும் நாம் நீரை தவிர்த்து வாழ இன்றளவும் முடியவில்லை. மனிதன் வேட்டை சமூகம் என்ற நிலையிலிருந்து வேளாண் சமூகமாக மாறும் காலத்தில் அவன் முதல் தேவை தண்ணீர் ஆகத்தான் இருந்தது. குடிக்க, குளிக்க, சமைக்க, கொண்டாட, கும்பிட என எல்லாவற்றையும் நீரைக் கொண்டே அவன் நிறைவேற்ற வேண்டி இருந்தது. அதனால் இடம்பெயர்ந்து கொண்டு வேளாண்மை செய்து கொண்டிருந்த மனிதன், நதிக் கரையில் தங்கி தன் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டான். மனிதன் தங்கத் துவங்கியதும் கூட்டமாக ஒரு சமூகமாக வாழ ஆரம்பித்தான். சமூகம் என்று ஆனபிறகு தேவையும் அதிகமானது. மழை, வெயில், விலங்குகளிடம் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள வீடொன்று அவனுக்குத் தேவைப்பட்டது பின்பு உடை அணிய ஆரம்பித்தான்.
இந்த கூட்டம் பெருகியது, பிரிந்தது, ஒரு வீடு, இரண்டானது, பின் நான்கானது, பின்பு அது பெரும் சமூகம் ஆனது, அந்த சமூகம் ஊரானது, ஊர்கள் நகரங்களாக மாறின, நகரங்கள் நாகரிகங்களாக உருமாறின. இன்று நாம் கொண்டாடும் வியந்து போற்றும் நாகரிகங்கள் எல்லாம் நீரை மையப்படுத்தி வந்ததே. நைல் நதிக்கரையில் எகிப்திய நாகரீகம், டைகரிஸ்/யுபேரட்டஸ் நதிக்கரையில் மெசபடோமிய நாகரீகம், சிந்து நதியில் சிந்து சமவெளி நாகரிகமும், மஞ்சள் நதியில் சீன நாகரிகம் என எல்லா நாகரிகங்களும் நதியை மையப்படுத்தித் தோன்றின.
இப்படி தோன்றிய நாகரிகங்கள் பின்னாட்களில் அரசுகளாக உருமாறியது. இவை நீரை மையப்படுத்தி உருவானதால் இதை நீரியல் அரசு (HYDRALIC EMPIRE) என்று பெயர் இட்டனர். இப்பெயரை வடிவமைத்தவர் “கார்ல் ஆகஸ்ட் விட்போகல்” என்பவர். 1957ல் தான் எழுதிய புத்தகத்தில் இப்பெயரை குறிப்பிடுகிறார். ஒரு அரசு தண்ணீர் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில் இருந்தால் அந்த அரசு நீரியல்அரசு என்று கருதப்படுகிற ஆதிக்கம் என்பது யார் யார் தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என்பது தொடங்கி, நீர்ப்பாசனம், குடிநீர், வெள்ள நிர்வாகம் என்று இவற்றுக்கான வரையறை நீள்கிறது. பண்டைய நாகரீகம் தொட்டு அதற்குப் பிறகு உருவான அரசுகளும் குறிப்பாய் இந்தியாவில் மௌரியப் பேரரசு, ஆப்பிரிக்காவில் அஜூரன் அரசும் நீரியல் சார்ந்தவையே என்கிறார்.
விட்போகள் கௌடில்யர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் இதை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. எகிப்திய நாகரீகத்துக்கு பிறகு உருவானதே அஜூரன் அரசு இவை 13 ஆம் நூற்றாண்டு துவங்கியது என்கின்றனர். ஜூப்ப ஷேபெல்லே நதியில் இதன் அரசு அமைந்தது. இவற்றில் இருந்து கிடைத்த நீரைக் கொண்டு அமைக்க பட்ட வழித்தடம் மற்றும் சுண்ணாம்பு கிணறுகள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது.
சரி அரசாட்சி செய்த தண்ணீர் அப்படியே நில்லாமல் பலவற்றை அழித்த வரலாறு நாம் அறிவோமா….???
அடுத்தடுத்த வாரங்களில் அதைப் பற்றி பார்ப்போம்.
தொடரும்…
கட்டுரையாளர்: அன்பன் செ. விக்னேஷ், இளநிலை வேளாண்மை பட்டதாரி, குளித்தலை, தொடர்பு எண்: 8344848960, மின்னஞ்சல்: vickysvicky42@gmail.com