Site icon Vivasayam | விவசாயம்

தக்காளி பயிரைத் தாக்கும் ஃபுசேரியம் வாடல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

அறிமுகம்

தக்காளி ஒரு வெப்ப மண்டலப் பயிராகும், இது ஆண்டு முழுவதும் பயிர் செய்வதற்கு ஏற்றதாகும். ஜூன் – ஜூலை, நவம்பர் – டிசம்பர், பிப்ரவரி – மார்ச் ஆகிய மாதங்கள் தக்காளி பயிர் நடவு செய்ய உகந்த காலம் ஆகும். நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் கொன்ட நிலம் தக்காளி சாகுபடிக்கு ஏற்றது ஆகும். தக்காளிப் பழத்தில் வைட்டமின் ‘ஏ’ ‘சி’ போன்ற உயிர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. தக்காளிப் பயிரானது பூஞ்சை, பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் ஏற்படும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகிறது. அதிலும், புசாரியம் ஆக்சிஸ்போரம் f. sp. லைகோபெர்சிசி என்ற பூஞ்சை அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

ஃபுசேரியம் வாடல் நோயின் அறிகுறிகள்

வேர்களில் உள்ள காயங்கள் மூலமாக, இந்த நோய்க்காரணி தாவரங்களுக்குள் நுழைகிறது. நோயின் முதல் அறிகுறியாக கிளை நரம்புகள் வெளிர் நிறமாக மாறி, இலைகளில் பசுமை சோகை ஏற்படும். விளை நிலங்களில் கீழ் இலைகள் முதலில் மஞ்சள் நிறமாக மாறும் மற்றும் சிற்றிலைகள் கருகி காய்ந்துவிடும். அறிகுறியானது தொடர்ச்சியாக மற்ற இலைகளுக்கும் பரவ தொடங்கும். இந்த பூஞ்சை, சைலம் வெசல்களின் வாஸ்குலார் திசுக்களை ஆக்கிரமிப்பதன் மூலம் தாவரங்களில் நீரின் இயக்கத்தைக் குறைக்கிறது. அதனால் செடிகள் வாடிவிடும். கடைசி நிலையில் வாஸ்குலர் திசு பழுப்பு நிறமாக மாறி, தாவர வளர்ச்சி குன்றி பின்பு செடிகள் இறந்துவிடும்.

வாடல் நோயின் கட்டுப்பாட்டு முறைகள்:

உழவியல் முறை

கோடை காலத்தில் நிலத்தை ஆழமாக உழுவதன்மூலம் மண்ணில் உள்ள நோய்க்காரணியை அழிக்க முடியும். நோய் இல்லாத, நல்ல தரமான விதைகளைப் பயன்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றி அழிக்க வேண்டும். தானியங்கள் போன்ற வாடல் நோய் தாக்காத பயிருடன் பயிர் சுழற்சி செய்வதன் மூலம் இந்த நோயினை கட்டுப்படுத்தலாம்.

உயிரியல் முறை

நுண்ணுயிர் கொல்லிகளான சூடோமோனாஸ் ஃப்ளோரசென்ஸ் (பி. எஃப் 1) (Pseudomonas fluorescens) அல்லது ட்ரைக்கோடெர்மா விரிடி (Trichoderma viride) கொண்டு 1 கிலோ விதைக்கு 4 கிராம் என்ற விகிததில் விதைநேர்த்தி செய்யவதன் மூலம் இந்நோய் விதை மூலம் பரவுவதைத் தடுக்க முடியும்.

இரசாயன முறைகள் : பூஞ்சைக் கொல்லிகள்

1 கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் பூஞ்சைக் கொல்லியை விதைநேர்த்தி செய்வதன் மூலமும், கார்பென்டாசிம் 0.1% (1 கிராம்/ லிட்டர் நீருக்கு) அல்லது காப்பர் ஹைட்ராக்ஸி குளோரைடு / காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.2% (2 கிராம்/ லிட்டர் நீருக்கு) என்ற அளவில் தெளிப்பதோடு பாதிக்கப்பட்ட செடிகளின் வேர்ப் பகுதியைச் சுற்றி ஊற்றுவதன் மூலமும் வாடல் நோயினைக் கட்டுப்படுதலாம்.

கட்டுரையாளர்: கு. முருகவேல், உதவிப் பேராசிரியர் (தாவர நோயியல் துறை), ஜே.கே.கே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரி, தூக்கநாயக்கன்பாளையம். மின்னஞ்சல்: mvelpatho@gmail.com தொடர்பு எண்: 9843380137.

Exit mobile version