அன்புள்ள ஆசிரியருக்கு,
பல்லுயிர் பேணும் கோவில் காடுகள் குறித்து பிரவீன் எழுதியிருந்த கட்டுரையும் உலக சுற்றுச்சூழல் தினம் பற்றி பிரியதர்ஷினி எழுதியிருந்த கட்டுரையும் தற்போது தேவையான வாசிப்பாக அமைத்தது. ரெட் லேடி பப்பாளி மற்றும் கரும்பு சாகுபடி பற்றி செயல்பாட்டு முறைகளை குறிப்பிட்டு எழுதியது பாராட்டுக்குரியது.
கிசான் அழைப்பு மையம் போன்ற திட்டங்களின் தொடர் பகுதிகளின் வெளியீடு வரவேற்கத்தக்கது. இளநிலை வேளாண் மாணவர் புனித் குமார் எழுதியிருந்த கட்டுரையானது உழவுவின் சிறப்பையும் தமிழரின் பண்பாட்டையும் பறைசாற்றியது. சில வருடங்களாக பிரபலமாக இருக்கும் சுருள்பாசி வளர்ப்பும் அதன் முக்கியத்துவம் சொல்லியிருந்த மெர்லின்க்கு வாழ்த்துக்கள்.
நோய்க் கட்டுப்பாடு பக்கத்தில் தென்னை குருத்தழுகல் நோய், அதனை கட்டுப்படுத்தும் முறை மற்றும் பூச்சி மேலாண்மை பக்கத்தில் கரும்பின் வேரைத் தாக்கும் வெள்ளை வண்டினப் புழு, அதன் கட்டுப்படுத்தும் முறை பற்றி கட்டுரையாளர்கள் எழுயிருந்தது விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ள வாசிப்புகள்.
மாப்பிள்ளை சம்பா அவல் பொங்கல் தயாரிப்பு போன்ற சத்து மிகுந்த சுவையான உணவு தயாரிப்புகள் தொடர வாழ்த்துக்கள். வேளாண் இயந்திரங்கள் பற்றிய கட்டுரைகள் வெளிவந்தால் மேலும் பயனுள்ளதாக அமையும்.
– ச. கார்த்திகா, முனைவர் பட்டப்படிப்பு மாணவி, த.வே.ப, கோவை. மின்னஞ்சல்: karthisangilidurai@gmail.com
|
ஆசிரியர் பக்கம்
அன்புள்ள வாசகர்களுக்கு வணக்கம்,
இயற்கை மற்றும் செயற்கை விவசாயம் என்று இருவேறு விவாதங்களில் இணைய(சமூக வலைதள) விவசாயிகள் செய்யும் விவாதங்களைப் பார்க்கும் போது எண்ணற்ற கேள்விகள் மனதில் எழுகிறது. ஒவ்வொரு முறையிலும் ஒரு நன்மை இருந்தால் ஒரு தீமை கண்டிப்பாக இருக்கிறது. அதே போல தொழில்நுட்பங்கள், அறிவியல் என ஒவ்வொரு விசயங்களையும் ஒருங்கிணைக்கும் போது தான் தற்போதுள்ள மக்கள் தொகைக்கு உணவளிக்கும் சூழலும் உள்ளது. இப்போது உலகளவில் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள் பிரபலமடைந்து வருவதற்கான காரணம் இயற்கை, செயற்கை, தொழில்நுட்பம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து விவசாயிக்கு செலவை குறைத்து மகசூலை பெருக்கும் வழிமுறையாக இருப்பதே ஆகும். தேவையற்ற வீண் விவாதங்களை மேற்கொள்ளும் பெரும்பாலான இணைய விவசாயிகள் பெரும்பாலும் “நான் புடிச்ச முயலுக்கு மூணு கால்” என்ற எண்ணத்தோடு வீண் சவடால் பேசுகிறார்களே தவிர விவசாயிகள் எதைப் பின்பற்றும் போது என்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்று யாரும் பேச முன்வருவதில்லை. ஒரு சில புத்தகங்களையும் பத்திரிக்கைகளையும் படித்துவிட்டு இனியும் எதையும் ஆராயாமல் பேசி விவசாயிகளைப் பலியாக்காதீர்கள் கண்ணியவான்களே.. மக்காச்சோளத்தில் வந்த புழுவைக் கட்டுப்படுத்த ஒரு விவசாயி என்ன பாடு படுகிறான் என்பது விவசாயிக்கும் அவன் குடும்பத்துக்கும் தான் தெரியும்!
விவசாயம் குறித்த சந்தேகங்களை எங்கள் மின்னஞ்சல் மூலமாகவும், அலைபேசி எண் மற்றும் வாட்சப் வாயிலாகவும் கேட்கலாம். நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நிபுணர்களின் பதிலைப் பெற்று அடுத்தடுத்த இதழ்களில் வெளியிடத் தயாராக உள்ளோம். ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமை காலை 6 மணிக்கு www.vivasayam.org என்ற எங்களது இணையதளத்திலும் மற்றும் விவசாயம் செயலியிலும் மின்னிதழை வெளியிடுகின்றோம். எனவே எங்களது செயலியை தரவிறக்கம் செய்து வைத்திருந்தால் அதுவே உங்களுக்கு இதழ் வெளியாவதையும் மற்ற வேளாண்மை சார்ந்த செய்திகளையும் அறிவிப்பில் காட்டும். இதன்மூலம் நீங்கள் எளிதில் எங்களது மின்னிதழை படிக்க மற்றும் பின்பற்ற முடியும். விவசாயிகளும், வேளாண் மாணவர்களும், விஞ்ஞானிகளும், பேராசிரியர்களும், வேளாண் தொழில் முனைவோர்களும் தொடர்ந்து அக்ரி சக்தி இதழுக்கு தங்களுடைய கருத்துக்கள், கட்டுரைகள் மற்றும் விளம்பரங்களை வழங்கி எங்களை மேம்படுத்திக்கொள்ள உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
-நிர்வாக ஆசிரியர், அக்ரி சக்தி.