Skip to content

இந்தியாவில் பரவிவரும் மரவள்ளி மாவுப்பூச்சியின் தாக்கம்

 

மரவள்ளிக்கிழங்கு மாவுப்பூச்சி (ஃபெனகாகஸ் மணிஹோட்டி) உலகில் மரவள்ளிக்கிழங்கில் அதிக அழிவினை ஏற்படுத்தும் பூச்சிகளில் ஒன்றாகும். இது தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டுள்ளது, ஆனால் 1970 களின் முற்பகுதியில் ஆப்பிரிக்க கண்டத்தில் தற்செயலாக அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சஹாரா கீழமை ஆப்பிரிக்கா முழுவதிலும் பரவத்தொடங்கியது. இப்பூச்சியினால் 84% விளைச்சல் இழப்பு ஏற்பட்டது மற்றும் சுமார் 200 மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் ஆபத்து ஏற்பட்டது. இந்த பூச்சி 2008 ஆம் ஆண்டு வரை ஆசியாவில் அறியப்படவில்லை, அதன் பின்னரே தாய்லாந்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது.

தற்போது பூச்சியானது அமெரிக்க வெப்ப மண்டல பகுதி (அர்ஜென்டினா, பொலிவியா, பிரேசில், கொலம்பியா, பராகுவே); ஆஸ்திரேலிய-ஆசிய பகுதி (இந்தோனேசியா); ஆப்பிரிக்க மண்டலம் (அங்கோலா, பெனின், புருண்டி, காங்கோ, கோட் டி ஐவோயர், காம்பியா, கானா, கினியா, கினியா-பிசாவ், கென்யா, மலாவி, மாலி, மொசாம்பிக், நைஜீரியா, ருவாண்டா, செனகல், சியரா லியோன், சூடான், தான்சானியா, டோகோ, உகாண்டா , ஜைர், சாம்பியா, சான்சிபார்); மற்றும் கிழக்கத்திய மண்டலம் (கம்போடியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம்) ஆகிய இடங்களில் பரவலாக உள்ளது. இப்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.

இந்த மரவள்ளிக்கிழங்கு மாவுப்பூச்சியானது 9 குடும்பங்களைச் சேர்ந்த தாவரங்களைத் தாக்குவதாக அறியப்படுகிறது. இப்பூச்சி மரவள்ளி தவிர, சிட்ரஸ் (எலுமிச்சை வகைகள்), சோலனம் இனங்கள் (தக்காளி வகைகள்) மற்றும் துளசி போன்ற பயிர்களை தாக்குகின்றது. மற்ற நாடுகளில் இந்த மாவுப்பூச்சியினை கட்டுப்படுத்தும் முப்பத்து மூன்று இயற்கை எதிரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த மாவுப்பூச்சியின் முட்டை, இளங்குஞ்சுகள் மற்றும் முதிர்ச்சி பெற்ற மாவுப்பூச்சி ஆகிய அனைத்து நிலைகளும், இலைகளின் அடிப்பகுதி உள்ளிட்ட அனைத்து தாவர பாகங்களிலும் காணப்படும். குறிப்பாக நுனிக்குருத்திற்கு அருகிலுள்ள இலைகளில் இவை சாற்றினை உறிஞ்சுவதால், அவ்விலைகள் சுருண்டு மூடிக்கொத்து போல காட்சியளிக்கும், இடைக்கணுக்களின் நீளம் குறைந்தும், தண்டுகள் சிதைவடைந்தும் காணப்படும். இப்பூச்சியின் தாக்கம் அதிகமாக இருப்பின் இலைகள் காய்ந்து உதிர்ந்துவிடும்.

இப்பொழுது இந்தியாவில் தற்போதைய கணக்கெடுப்பின்படி, இந்த பூச்சி மரவள்ளி செடி கிடைக்காத பொழுது பொன்னாங்கண்ணி, முடியின் பச்சை, காட்டுமுள்ளங்கி ஆகிய மூன்று களைகளில் உயிர்வாழ்வதாகவும், இனப்பெருக்கம் செய்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. கார்டியாஸ்டெதஸ் இனங்கள், ஸ்பால்ஜிஸ் ஈபியஸ், ஸ்கிமன்ஸ் காக்சிவோரா ஆகிய பூச்சிகள் இந்தியாவில் காணப்படும் மரவள்ளி மாவுப்பூச்சியின் இயற்கை எதிரிகளாகும்.

மரவள்ளிக்கிழங்கு மாவுப்பூச்சி பரவுவதைத் தவிர்ப்பதற்கான உத்திகள்:

  • குறிப்பிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட தாவரங்களை முற்றிலுமாக அழிப்பதன் மூலம் இந்த மாவுப்பூச்சி இந்தியாவின் பிற மரவள்ளி வளரும் பகுதிகளுக்கு மேலும் பரவுவதைத் தவிர்க்கலாம்.
  • மேலும் நடவு செய்வதற்கு பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து கரணை குச்சிகளின் பயன்பாடு மற்றும் போக்குவரத்தைத் தவிர்க்கவும்.
  • புதிய பகுதிகளிலும், மாற்று தாவரங்கள் மற்றும் களைகளிலும் மரவள்ளி வளரும் பகுதிகளில் தொடர்ச்சியாக கண்காணித்தல் வேண்டும்.
  • இந்த அயற்பண்புடைய பூச்சிக்கு எதிராக உயிரியல் கட்டுப்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்; கார்டியாஸ்டெதஸ் இனங்கள், ஸ்பால்ஜிஸ் ஈபியஸ், ஸ்கிமன்ஸ் காக்சிவோரா ஆகிய பூச்சிகள் இந்தியாவில் காணப்படும் மரவள்ளி மாவுப்பூச்சியின் இயற்கை எதிரிகளாகும். அபோஅனகைரஸ் லோபெஸி எனும் ஒட்டுண்ணி ஏற்கனவே தாய்லாந்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அங்கு இது மாவுப்பூச்சியினை திறமையாகக் கட்டுப்படுத்தியுள்ளது, பின்னர் தாய்லாந்திலிருந்து இந்தோனேசியா மற்றும் லாவோஸுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

அதிக அளவில் பாதிக்கப்பட்ட இடங்களில் தயாமேதாக்சம் (Thiamethoxam 25WG) 0.6 கிராம்/லிட்டர் அல்லது ப்ரோபெனோபோஸ் (Profenophos 50 EC) 2 மில்லி/லிட்டர் ஆகிய பூச்சிக்கொல்லிளை பயன்படுத்தலாம்.

கட்டுரையாளர்: எம். எஸ். ஆர். ஹரன், முதுநிலை வேளாண் மாணவர் (பூச்சியல் துறை), வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிள்ளிகுளம். மின்னஞ்சல்: haranmsr30@gmail.com

Leave a Reply

editor news

editor news