உணவு
உணவு ஒவ்வொரு மனிதனின் அத்தியாவசியத் தேவையாகும் உயிர் வாழ்வதற்கு. அவ்உணவை உற்பத்தி செய்ய உலகின் மொத்த நிலப்பரப்பில் 37 சதவீத நிலப்பரப்பு மட்டுமே விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை(FAO)அமைப்பின் ஓர் அறிக்கையில், வரும் 2050 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 9.1 பில்லியனை எட்டும் என்றும், அது இன்றைய மக்கள் தொகையை விட 34 சதவீதம் அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எதிர்பார்க்கப்பட்ட மக்கள் தொகை வளர்ச்சியின் காரணமாக உலகெங்கிலும் உணவு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக வளரும் நாடுகள் விவசாயத்தில் தன்னிறைவு பெறுவது என்பது மிகவும் அவசியமாகிறது இல்லையேல் அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படும். விவசாயத்தில் நமது செயல் திறனை பராமரிப்பது, மேம்படுத்துவது மற்றும் தன்னிறைவு பெறுவது என்பது வரவிருக்கும் காலங்களில் மனித குலம் எதிர்கொள்ளவிருக்கும் கவனிக்கப்படாத மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும்.
தொலை உணர்வு (Remote Sensing) தொழில் நுட்பம்:
விவசாயத்தில் தன்னிறைவு பெறுவதற்கு புது தொழில் நுட்பங்களையும், வழிமுறைகளையும் பின்பற்றுவது அவசியமாகிறது. புதுப்புது தொழில்நுட்பங்கள் மூலம் நாம் விவசாயத்தில் உள்ளீடுகளை (inputs) குறைக்கவும், வெளியீடுகளை(outputs) அதிகரிக்கவும் முடியும். இதன் மூலம் நம் வருவாய் அதிகரிப்பதோடு உணவு உற்பத்தியும் பெருகும். இவ்வாறு மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களில் ஒன்றுதான் தொலை உணர்வு (Remote Sensing) தொழில் நுட்பம். இந்த தொலை உணர்வு தொழில் நுட்பமானது ஒரு இடத்தின் அல்லது பொருளின் தகவல்களை அதனுடன் தொடர்பில் இல்லாமலே சேகரிப்பதாகும்.
செயற்கைக்கோள்கள்
இதற்கு செயற்கைக்கோள், தொலைநிலை சென்சார்கள், மற்றும் யுஏவி அல்லது ட்ரோன் எனப்படும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 24 மணி நேரமும் நம்மால் தகவல்களை சேகரிக்க முடியும். தற்போது செயற்கைக்கோள்கள் விவசாயத்திற்கு பலவழிகளில் பயன்படுத்தப் படுகின்றது. ஆரம்பத்தில் செயற்கைக்கோள்கள் பயிர் விளைச்சலை மதிப்பிடுவதற்கான வழிமுறையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது ஆப்டிகல் மற்றும் ரேடார் சென்சார்களின் மூலம் பயிரிடப்பட்ட நிலப்பரப்பின் துல்லியமான வரைபடத்தை வழங்க முடியும், அதே நேரத்தில் பயிர் வகைகளுக்கு இடையில் உள்ள வேறுபடுகள் மற்றும் அவற்றின் ஆரோக்கியத்தையும், முதிர்ச்சியையும் தீர்மானிக்க முடியும்.
செயற்கைக்கோளின் பயன்கள்
செயற்கைக்கோளின் தொலைநிலை சென்சார்கள் மூலம் பெறப்படும் தரவுகளால் (Data) நாம் தாவர ஆரோக்கியம், மண்ணின் நிலை, வெப்பநிலை, ஈரப்பதம், பூச்சி தாக்குதல் மற்றும் நோய் தாக்குதல் போன்ற பலவற்றை நம்மால் கண்காணிக்க இயலும். இவ்வாறு செயற்கைக்கோளின் மூலம் பெறப்படும் ஸ்பெக்ட்ரல் இன்டெக்ஸ் (Spectral index) தரவுகள் மூலம் பயிர்களை அடையாளம் காண முடியும். அத்துடன், சாகுபடி பரப்பளவை மதிப்பிடுதல், பருவகால வரைபடத்தைத் தயாரித்தல் (வேளாண் பருவங்களில் தொடக்க, முடிவு மற்றும் முன்னேற்றத்தைக் கண்காணித்தல்), பினோலஜி வரைபடம் (பயிரின் பல்வேறு கட்டங்கள்) மற்றும் மகசூல் வரைபடம் (விளைச்சலை மதிப்பிடுதல்) போன்ற தகவல்களை பெற முடியும். இப்படி பெறப்பட்ட படங்கள் மற்றும் தரவுகளின் மூலம் மாநில அரசுகளுக்கு கொள்கை தயாரிக்கவும், அத்துடன் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் இடுபொருட்களை வழங்கவும் மற்றும் பயிர் காப்பீட்டை விரைவாக வழங்குவதற்கும் இது உதவும். பயிர் புள்ளிவிவரங்கள் பற்றிய தகவல்கள் திட்டமிடுதல் மற்றும் முடிவெடுக்கும் நோக்கங்களுக்காக தேவைப்படுகின்றது, அதாவது உணவு தானியங்களை விநியோகித்தல் மற்றும் சேமித்தல், அரசுகொள்கைகள், விலை நிர்ணயம், கொள்முதல் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் பல. இதுபோன்ற முடிவெடுப்பதில் வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகம் செயற்கைக்கோள் மற்றும் ரிமோட் சென்சிங்கின் தொழில்நுட்பங்களை திறம்பட பயன்படுத்தி வருகிறது. இந்த தொழில்நுட்பமானது பல நன்மைகளை வழங்குகிறது, குறிப்பாக சரியான நேரத்தில் முடிவெடுக்கும் வழிமுறைகள், இடம்சார்ந்த சித்தரிப்பு, பயிர் பரப்பளவு மதிப்பீடு, பயிர் விளைச்சல் மற்றும் உற்பத்தி மதிப்பீடு, பயிர் நிலை, அடிப்படை மண் தகவல்களைப் பெறுதல், பயிர் முறை ஆய்வுகள், சோதனை பயிர் காப்பீடு போன்ற பல முக்கியபணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
பருவமழை அல்லது வறட்சியின் மூலம் பாதிப்பு ஏற்பட்டால் செயற்கைக்கோளின் படங்கள் மூலம் பாதிப்பு அடைந்த இடங்கள் மற்றும் சேதத்தின் அளவு ஆகியவற்றை அறிய உதவும். இது தாமதமின்றி அரசாங்கம் முடிவெடுப்பதற்கு உதவும். இந்த தகவல் சந்தைக்கு தெரிவிக்க உதவுகிறது. மேலும், பயிர் தோல்வி அல்லது பஞ்சம் குறித்த ஆரம்ப எச்சரிக்கையை வழங்குகிறது. துல்லியமான வேளாண்மையின் மூலம் செயற்கைக்கோள்கள் ஒரு மேலாண்மை கருவியாகவும் பயன்படுத்தப்படுகின்றது. அது ஒவ்வொரு விவசாயிகளின் வயல்களை விரிவாக வகைப்படுத்த உதவுகின்றது, இது பெரும்பாலும் ஜி.ஐ.எஸ்(GIS) உடன் இணைந்து பயன்படுத்தப்படுகின்றது. மேலும் பயனுள்ளதாகவும், திறமையாகவும் சாகுபடி செய்ய வழிவகை செய்கின்றது. உதாரணமாக, வெவ்வேறு நிலங்களுக்குரிய பயிர்கள், உரங்கள் அதன் அளவுகள் போன்ற பலவற்றை பரிந்துரைக்க பயன்படுத்தப் படுகின்றது.
முதுநிலை வேளாண் மாணவர்கள், தொலையுணர்வு மற்றும் புவியியல் தகவல் துறை
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை. மின்னஞ்சல்: shankarx002@gmail.com . அலைபேசி எண்: +91 8508203344, +91 9894815472 .