கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமானது ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு பொங்கல் பரிசாக புதிய பயிர் ரகங்களை வெளியிடுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள தோட்டக்கலைப் பயிர் ரகங்களையும், அதன் சிறப்பம்சங்களையும் இந்தக் கட்டுரையில் காண்போம்.
வாழை CO2
இந்த ரகமானது கற்பூரவள்ளி மற்றும் பிசாங்லிளின் ஆகிய ரகங்களின் இனக்கலப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டது. மேலும் இது நெய் பூவன் ரகத்தை ஒத்த பண்புகளை உடையது. இது நூற்புழு, சிக்காடோகோ இலைப்புள்ளி மற்றும் பிசேரியம் வாடல் நோய்களைத் தாங்கி வளரும் தன்மையுடையது. சராசரியாக 12 முதல் 13 கிலோ தார் எடையும் ஒரு தாருக்கு 12 முதல் 14 சீப்பும், 150 முதல் 160 காய்களையும் உடையது. சராசரியாக ஒரு எக்டருக்கு 32 டன் மகசூல் கிடைக்கும். 12 முதல் 13 மாதங்களில் அறுவடை செய்யலாம். அக்டோபர் முதல் ஜனவரி மாதங்களில் நடவு செய்ய ஏற்றது.
தக்காளி வீரிய ஒட்டு CO4
இந்த ஒட்டு ரகம் LE 1226 x LE1249 ன் இணைப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டது. சாதாரண வெப்பநிலையில் பத்து நாட்கள் சேமித்து வைக்கலாம். பழம் முதிர்ச்சி அடையும் நேரத்தில் மேற்பரப்பு பச்சையாகவும் பழுக்கும் சமயத்தில் சிவப்பு நிறமாக மாறும். ஐந்து முதல் ஆறு பழங்களை உடைய கொத்தாக இருக்கும். சராசரியாக ஒரு பழத்தின் எடை 75 கிராம் ஆக இருக்கும். ஒரு செடிக்கு சராசரியாக மூன்று கிலோ எடையுள்ள பழங்களை அறுவடை செய்யலாம். 150 நாட்களில் 20 முதல் 22 அறுவடை செய்ய முடியும். சராசரியாக ஒரு எக்டருக்கு 92.3 டன் மகசூலை கொடுக்கவல்லது. இந்த ரகம் இலை சுருள் வைரஸ் நோய்க்கு எதிர்ப்புத் தன்மை உடையது.
சின்ன வெங்காயம் CO6
இந்த ரகத்தினை விதைகள் மூலம் பயிர்ப்பெருக்கம் செய்து நடவு செய்யலாம். சராசரியாக ஒரு எக்டருக்கு 19.1 டன்கள் மகசூல் தரக்கூடியது. ஒரு கொத்தில் 5 முதல் 7 குமிழ்களை உடையது. ஒரு குத்தின் சராசரி எடை 90 முதல் 100 கிராம் ஆக இருக்கும். விதைத்ததில் இருந்து 130 நாட்களில் அறுவடைக்குத் தயாராக இருக்கும்.
மரவள்ளி YTP2
இந்த ரகமானது தொண்டாமுத்தூர் 1 ல் இருந்து தேர்வு செய்யப்பட்டது. கிளைகள் அற்று நேராக வளரும் தன்மை உடையது. குறைவான கணு இடைப்பகுதி மற்றும் அதிக இலை பரப்பை கொண்டது. கிழங்கு நீளமாக உருளை போன்று வெண்மை நிறமுடையது. சராசரியாக ஒரு செடிக்கு 6.28 கிலோ மற்றும் எக்டருக்கு 46.20 டன் மகசூலை கொடுக்கவல்லது. 29.62 சதம் மாவுச்சத்து கொண்ட ரகமாகும். இந்த ரகம் உண்பதற்கும் தொழிற்சாலைகளுக்கும் ஏற்றது. இந்த ரகம் தேமல் நோய்க்கு எதிர்ப்புத் தன்மை உடையது.
கொடுக்காப்புளி PKM 2
இந்த ரகமானது அந்தோசயனின் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடன்ட் அதிகம் உள்ள ரகமாகும். ஒரு கிலோவுக்கு சராசரியாக ரூபாய் 150 லிருந்து 200 வரை விலை கிடைக்கும். இந்த ரகமானது சந்தைகளில் அதிக முக்கியத்துவமும் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய சிவப்பு நிற சதைப்பற்று உடைய ரகமாகும்.
மணத்தக்காளி CO1
இந்தக் கீரையானது சோலனம் நைகிரம் என்ற தாவர பெயர் கொண்ட அதிக மருத்துவ பண்புகளை உடைய கீரை ஆகும். இந்த ரகமானது அதிக வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் உதடு வெடிப்புகளை சரி செய்யும் மருத்துவ பண்புகளை கொண்டது.
கட்டுரையாளர்: முனைவர் அ. பழனிசாமி, தொழில் நுட்ப வல்லுநர் (தோட்டக்கலை) தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், வேளாண் அறிவியல் நிலையம், சின்னசேலம். மின்னஞ்சல்: palanihort@gmail.com அலைபேசி எண்: 9842046218.