Site icon Vivasayam | விவசாயம்

கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய்

தமிழகத்தின் தொன்றுதொட்டு பெரும்பான்மையான வீடுகளில் சமையலுக்கு  கடலை எண்ணெயே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தமிழகத்தின் முக்கிய எண்ணெய் வித்துப்பியிராகவும் விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கடலைச் சாகுபடியில் பெரும்பாலும் விவசாயிகள் கவனிக்கத் தவறிய நோயாக  டிக்கா இலைப்புள்ளி நோய் உள்ளது. இந்நோய் ஏற்படின் பெரும்பான்மையான விவசாயிகள் எவ்வித மேலாண் முறைகளையும் கடைபிடிப்பது இல்லை. ஆனால்  இந்நோய் மூலம் நிலக்கடலையில் 15% முதல் 59% வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. விவசாயிகளிடம் குறைந்த முக்கியத்துவம் பெற்ற இந்த டிக்கா இலைப்புள்ளி நோயின் மேலாண்மை பற்றி காணலாம்.

நோய்க்காரணம் மற்றும் அறிகுறிகள்

காற்று மற்றும் நிலத்தில் உள்ள முந்தைய பருவத்தில் பாதிக்கப்பட்ட தாவரத்தின் பாகங்கள் மூலம் பரவக்கூடிய பூஞ்சானத்தால் இந்நோய் ஏற்படுகிறது. இந்நோயானது முன்பருவ இலைப்புள்ளி நோய், பின் பருவ இலைப்புள்ளி நோய் என்ற இரு பருவங்களில் ஏற்படுகின்றது. வெப்பநிலை 25° முதல் 30° செல்சியஸ் வரை இருக்கும்பொழுது காற்றில் ஈரப்பதம் 80% மேல் இருந்தால் இலைகள் தொடர்ந்து ஈரப்பதத்துடன் காணப்படும். இந்த சூழ்நிலையே இந்நோய் பரவுவதற்கு மிகவும் சாதகமாக உள்ளது.  செர்கோஸ்போரா அராக்கிடிகோலா என்ற பூஞ்சாணத்தால் உருவாகும் முன் பருவ இலைப்புள்ளி நோய் நிலக்கடலை விதைக்கப்பட்ட 3 முதல் 4 வாரங்களுக்குள் ஏற்படுகின்றது. 1 முதல் 10 மி.மீ விட்டத்தில் இலைகளின் இரண்டு பக்கங்களிலும் வட்டமான கரும் பழுப்பு அல்லது கருப்புப்புள்ளிகள் இருக்கும். கரும்புள்ளியைச் சுற்றி மஞ்சள் நிற வளையங்கள் காணப்படும். இதன் அறிகுறிகள், காம்புகளிலும், தண்டுகளிலும் காணப்படும். இந்நோய் தாக்கப்பட்டால் இலைகள் காய்ந்து சருகாகி உதிர்ந்து விடும்.

செர்கோஸ்போரா பெர்சொனேட்டா என்ற பூஞ்சாணத்தால் உருவாகும் பின் பருவ இலைப்புள்ளி நோய் நிலக்கடலை விதைக்கப்பட்ட 45 நாட்களுக்கு மேல் அறுவடை காலம் வரை காணப்படுகின்றன. 1 முதல் 6 மி.மீ விட்டத்தில் வட்டவடிவ கருப்பு நிறப்புள்ளிகள் இலையின் அடிப்பாகத்தில் காணப்படும். பின் இந்த புள்ளிகள் இலையின் மேற்புறத்திலும் காணப்படும். இப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து, இலைகளுக்கு காய்ந்த தோற்றத்தைக் கொடுக்கின்றன. இறுதியில் இலைகள் உதிர்ந்துவிடுகின்றன.

மேலாண்மை முறைகள்:

நிலத்தில் உள்ள முந்தைய பருவத்தின் பயிர் கழிவுகளை அகற்றி நிலத்தை நன்கு தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். முதலில் இந்நோய் தாக்கப்பட்ட செடிகள் காணப்பட்டால் அந்த செடியை அப்புறப்படுத்துவது நல்லது. இதன் மூலம் இந்த நோய் மற்ற செடிகளுக்கு பரவாமல் தடுக்கலாம். விதைக்கும் பொழுது ஒரு கிலோ விதைகளுடன் உயிர் பூஞ்சாணக்கொல்லிகளான சூடோமோனாஸ் புலோரசன்ஸ் 10கிராம் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி 4கிராம் அல்லது கார்பன்டசிம் என்ற பூஞ்சாணக்கொல்லியுடன் 2 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

கம்பு மற்றும் சோளத்தை நிலக்கடலையுடன் (1:3) என்ற விகிதத்தில் விதைத்தால் இலைப்புள்ளி நோய்த் தாக்கத்தைக் குறைக்கலாம். தங்கள் பகுதியில் உள்ள வேளாண்விரிவாக்கத்துறையை அனுகி தங்கள் பகுதிக்கு ஏற்ற நோய் எதிர்ப்புத் திறனுடைய ரகங்களைத் தேர்வு செய்து நிலக்கடலையை பயிரிடவும். பயிர்களில் இந்நோய் அதிகம் காணப்பட்டால் ஒரு ஹெக்டேருக்கு கார்பன்டாசிம் 250 கிராம் அல்லது மாங்கோசெப் 500 கிராம் அல்லது குலோரோதலோனில் 1 கிலோ போன்ற பூஞ்சாணக்கொல்லிகளை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து இலைகள் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.

கட்டுரையாளர்கள்:

  1. எ. செந்தமிழ், முதுநிலை வேளாண் மாணவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: elasisenthamil@gmail.com
  2. கா. சரண்ராஜ், முதுநிலை வேளாண் மாணவர், விஸ்வபாரதி பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: saranrajklsk1@gmail.com
Exit mobile version