Site icon Vivasayam | விவசாயம்

கோடை உழவு, கோடி நன்மை பொன் ஏர் கட்டுதல் – பகுதி-3

கோடை உழவில் ஆழமாக உழுது மேல்மண்ணை கீழாகவும் கீழ்மண்ணை மேலாகவும் புரட்டிவிடுவதால் மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு மண் இலகுவாகிறது. இதனால் மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. மண்ணின் நீர்பிடிப்புத்தன்மை அதிகரிக்கிறது. 2-3 வருடத்திற்கு ஒருமுறை சட்டிக் கலப்பை கொண்டு உழவு செய்யவேண்டும். மேலும் கோடைக்கு பின் பருவ மழையினால் மண் அரிமானம் ஏற்படுவது தடைசெய்யப்படுகிறது.

கோடை உழவு செய்யாத நிலத்தில் மண்புழுக்கள் தங்காது!

மண்ணிலுள்ள சமையல்காரர்களான நுண்ணுயிர்களுக்குச் சிறந்த வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொடுக்கிறது கோடை உழவு. வேர்ப் பகுதியில் வாழக்கூடிய அத்தனை நுண்ணுயிர்களுக்கும் தேவையானவை கிடைத்துவிடும். உளிக்கலப்பை, சட்டிக்கலப்பை இவை இரண்டும்தான் கோடை உழவு செய்யும் கலப்பைகள். மழைக்காலத்தில் உழவு செய்யும்போது, ஈரப்பதம் இருப்பதால் சாதாரண உழவாக இருக்கும். கோடையில்தான் ஆழமாக உழ முடியும். ஒரு வயலில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கோடை உழவு செய்தால், அந்த நிலத்தில் மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகமாகும். கோடை உழவே செய்யாத ஒரு நிலத்தில் டன் டன்னாக மண்புழு உரத்தைக் கொட்டினாலும் மண்புழுக்களைப் பார்க்க முடியாது.

கோடை உழவு நன்மைகள் களைக்கட்டுப்பாடு!

முதற்பயிரின் தூர்கள் மக்கி களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. ஓராண்டு மற்றும் பல்லாண்டுக் களைகள் (அருகம்புல், கோரைப்புல் கிழங்கோடு) அதிக செலவின்றி அழிக்கப்படுவதோடு, அவையே மக்கி பயிர்களுக்கு உரமாகி நிலத்திற்கு வளம் சேர்க்கிறது. மேற்கண்ட செயல்களால் சாகுபடி செய்யும் போது பயிர்களின் வேர் வளர்ச்சி அதிகரித்து பயிர்கள் நன்றாக ஊன்றி நிற்கவும், அதனால் அதிக கிளைகள் / அதிக தூர்கள், அதிக பூக்கள், அதிக மற்றும் தரமான விளைச்சலுக்கும் வழிவகையாகிறது.

வளிமண்டலச் சத்துகளையும் அறுவடை செய்யலாம்!

கோடை மழை வழக்கமான மழைபோல் இருக்காது. நீண்டகாலத்துக்குப் பிறகு பெய்யும் கோடை மழையில் நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் இருக்கும். முதலில் கிடைக்கும் மழையில் கோடை உழவு செய்வதன் மூலம் அடுத்தடுத்து கிடைக்கும் மழைகளில் கிடைக்கும் சத்துக்களை மண்ணில் சேமிக்கலாம்.

ஊட்டச்சத்து நிலை நிறுத்தம்

கோடை உழவு செய்வதினால் ஏற்கனவே மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களும், நம்மால் இடப்பட்ட ஊட்டச்சத்துக்களும் வேறு இடங்களுக்கு அரித்து சென்று வீணாவது தடைசெய்யப்படுகிறது. நுண்ணுயிரிகளால் காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில் சேமிக்கபடுகின்றது.( உயிரியல் செயல்பாடு ).

பூச்சித்தாக்குதல்களை கட்டுப்படுத்த:

பயிர்களை சேதப்படுத்தும், மண்ணில் மறைந்து வாழும் பூச்சியினங்கள் மற்றும் கூண்டுப்புழுக்கள் செலவின்றி அழிக்கப்படுகிறது. இவைகள் பெரும்பாலும் இரசாயனங்களால் முழுமையாக கட்டுப்படுவதில்லை. பூச்சிகளின் ஊண்வழங்கிகள் / உணவளிப்பான்கள் அழிக்கப்படுவதால் அவைகளின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் பயிர்களைத்தாக்கும் பூச்சிகள், கூண்டுப்புழுக்கள், புழுக்களின் பல்வேறு பருவங்கள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள்யாவும் பெருமளவில் கோடை வெப்பத்தாலும், பல்வேறு பறவைகளாலும் கட்டுப்படுத்தப்படுகிறது. சிகப்பு கம்பளிப்புழு அழிக்கப்படுகிறது (கடலைப் பயிர்).

நோய் கட்டுப்பாடுகள்:

இந்த கோடை உழவினால் மண்ணில் வாழும் பயிர்களில் பல்வேறு நோய்கள் உருவாகுவதற்கு காரணமான பூசணங்களும், பூசண வித்துக்களும் (பித்தியம்,பைட்டோப்தோரா) செலவின்றி அழிக்கப்படுகின்றன.

கோடை உழவு மூலம் சுற்றுசூழல் பாதுகாப்பு:

மேற்கண்ட பயிர் பாதுகாப்பு நடைமுறைகளான களைக்கட்டுப்பாடு, பூச்சிக்கட்டுப்பாடு மற்றும் நோய்க்கட்டுப்பாடுயாவும் செலவின்றி, செயற்கை இரசாயணங்களின்றி கட்டுப்படுத்தப்படுவதால் இரசாயண பின் விளைவுகளான காற்று மாசுபடுவது, தண்ணீர் மாசுபாடு, வேளாண் நிலங்கள் மாசுபடுவது மற்றும் பிற உயிரினங்கள் பாதிக்கப்படுவது பெருமளவில் குறைக்கப்படுகிறது.

உழவுக்கும் உழவனுக்கும் இவ்வளவு உறுதுணையாய் இருக்கிறது கோடை உழவு. விவசாயிகளாகிய தாங்கள் கோடை உழவு செய்வீர்களானால் கோடி பலனைக் காண்பீர்கள்.

-முற்றுபெற்றது.

கட்டுரையாளர்கள்: 1. கோ.சீனிவாசன், முனைவர் பட்ட படிப்பு மாணவர் (உழவியல் துறை), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர். மின்னஞ்சல்: srinivasan993.sv(at)gmail.com

  1. க.சத்யப்பிரியா, உழவியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.
Exit mobile version