இரத்தக் குருதி எருவை காய வைத்து, பொடி செய்து உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இறந்த விலங்குகளின் இறைச்சிக் கழிவுகள் காய வைக்கப்பட்டு மாமிச உரமாக மாற்றப்படுகிறது. இது தழைச்சத்தின் நல்ல ஆதாரமாக விளங்குகிறது. விலங்குகளிலிருந்து கிடைக்கக்கூடிய செறிவூட்டப்பட்ட அங்கக உரங்களின் சராசரி ஊட்டச்சத்து அளவு பின் வருமாறு:
விலங்குகளிலிருந்து கிடைக்கக்கூடிய செறிவூட்டப்பட்ட அங்கக உரங்களின் சராசரி ஊட்டச்சத்து அளவு:
அங்கக உரங்கள் | ஊட்டச்சத்துக்களின் அளவு (சதவீதத்தில்) | ||
தழைச்சத்து | மணிச் சத்து | சாம்பல் சத்து | |
இரத்தக்குருதி உரம் | 10 – 12 | 1 – 2 | 1.0 |
மாமிச உரம் | 10.5 | 2.5 | 0.5 |
மீன் உரம் | 4 – 10 | 3 – 9 | 0.3 – 1.5 |
கொம்பு மற்றும் குளம்பு உரம் | 13 | – | – |
பண்படாத எலும்பு உரம் | 3 – 4 | 20 – 25 | – |
வெந்த எலும்பு உரம் | 1 – 2 | 25 – 30 | – |
மண் வளத்தில் அங்ககப் பொருள்களின் பங்கு
அங்ககப் பொருள் மிகக் குறைவாக இருந்தாலும், சத்துப் பரிமாற்றத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இறந்த பயிரின் வேர்கள், பயிர் குப்பைகள், பல்வேறுபட்ட அங்கக உரங்களான பண்ணை எரு, மட்கிய எரு, பசுந்தாள் உரம், பூஞ்சாண், பாக்டீரியா, புழுக்கள் மற்றும் பூச்சிகளிலிருந்து இது பெறப்படுகிறது.
அங்ககப் பொருளின் செயல்கள்:
- அங்ககப் பொருள் மண்ணின் இயல்புத் தன்மை, முக்கியமாக மண் அமைப்பை மேம்படுத்துகிறது.
- பாக்டீரியா, பூஞ்சாணம் மற்றும் இதர உயிரிகளுக்கான உணவுப் பொருளாக அங்ககப் பொருள் செயல்படுகிறது.
- அங்ககப் பொருள் இருப்பதால், கரையாத மண் ஊட்டங்களை கரைய வைத்து பயிர்களுக்கு கிடைக்கும் வகையில் செய்கின்றன.
- மண்ணின் ஊட்டச்சத்து வழங்கும் திறனில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால், அதில் அதிக அளவு நேர் அயனி பரிமாற்றம் இருக்கின்றது.
- மண்ணின் நீர்ப் பிடிப்புத் திறனை முக்கியமாக மணல் கலந்த மண்ணில் அதிகப்படுத்துகிறது.
- கடின மண்களில் காற்றோட்டம் மற்றும் நீர் ஊடுருவும் திறனை மேம்படுத்துகிறது.
- நீர் மற்றும் காற்று அரிப்பினால் ஏற்படும் மண் இழப்பைக் குறைக்கிறது.
- சில பயிர்களின் உணவுப் பொருளின் (தழை, மணி, சாம்பல், முதலியனவற்றின்) முக்கிய ஆதாரமாக செயல்படுகிறது.
- அங்ககப் பொருளின் இருப்பால் பூச்சிக் கொல்லி மற்றும் இதர கடின உலோகங்களின் (Heavy metals) கழிவுக் குப்பை மேலாண்மையில் நன்மைத் தரக் கூடியதாக கருதப்படுகிறது.
கட்டுரையாளர்கள்: பெ.சி.ர. நிவேதிதா மற்றும் கோ.சீனிவாசன், முனைவர் பட்ட படிப்பு மாணவர்கள் (உழவியல் துறை), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை.