கரும்புக்கேற்ற ஊடுபயிர்:
கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் கரும்புப் பயிரில் ஊடுபயிராக உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறு வகைகளையும், சணப்பை மற்றும் தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உரப் பயிர்களையும் ஊடுபயிராக சாகுபடி செய்து மண் வளத்தை அதிகரித்து உபரி வருமானம் பெறலாம். இந்த ஊடுபயிர் சாகுபடி மூலம் கரும்பு பயிர் இளங்குருத்துப் புழுத் தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்திப் பாதுகாப்பதுடன் செடிகள் வளர உதவுகிறது. கரும்பு பயிரில் ஊடு பயிர் செய்யும் போது, குறுகிய வயதுடைய கிளைகள் இல்லாத மேலோட்டமான வேர்களைக் கொண்ட உளுந்து, பச்சைப்பயறு, சணப்பை, தக்கைப்பூண்டு போன்ற பயிர்களை கரும்பு நடவு செய்த பின்பு கரும்பு பார்களுக்கிடையே ஒரு வரிசையிலோ அல்லது இரு வரிசையிலோ நடவு செய்ய வேண்டும்.
மணற்பாங்கான நிலத்திற்கு சணப்பையும், களிமண் நிலத்திற்கு தக்கைப்பூண்டும் ஊடுபயிர் விதைப்பு செய்ய வேண்டும். சணப்பை மற்றும் தக்கைப்பூண்டு பயிர்களை 45-50 நாட்களில் பூக்கும் தருணத்தில் மடக்கி உழுது விடுவதால் நிலத்தில் அங்ககப் பொருட்கள் அதிகமாகி உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது. எனவே கரும்பு நடவு செய்யும் விவசாயிகள் உளுந்து, பாசிப்பயறு போன்ற ஊடுபயிர்களை சாகுபடி செய்து உபரி வருமானம் பெறுவதோடு, சணப்பை மற்றும் தக்கைப்பூண்டு பயிர்களை பயிரிடுவதால் மண் வளத்தைப் பெருக்கி பயன் அடையலாம். கரும்பு வயலில் ஏக்கருக்கு 4 கிலோ உளுந்து அல்லது பாசிப்பயறு அல்லது சோயா மொச்சை 6 கிலோ கரும்பு நட்ட 3-ம் நாள் ஊடுபயிராக விதைக்கலாம். நீடித்த நவீன கரும்பு சாகுபடியில் அதிக இடைவெளி இருப்பதால் ஊடுபயிராக காய்கறிகள், பயறுவகைகள், வெள்ளரி, தர்ப்பூசணி, பசுந்தாள் உரப் பயிர்களை பயிர் செய்யலாம்.
பருத்திக்கேற்ற ஊடுபயிர்
பருத்தி விவசாயிகள் ஊடுபயிர் சாகுபடி செய்வதன் மூலம் கணிசமான லாபம் பெறலாம். பருத்தி நடவு 6 வரிசைக்கு ஒரு வரிசை தட்டப்பயறு நடவு செய்யலாம். அல்லது மக்காச்சோளம் இதேபோல நடவு செய்யலாம். மேலும் ஊடுபயிராக வரப்பு ஓரங்களில் வெண்டை அல்லது ஆமணக்கு பயிரிடலாம். பருத்திப் பயிரில் தட்டப்பயறு ஊடுபயிராக சாகுபடி செய்வதால் பொறிவண்டு இனப்பெருக்கம் அதிகமாகி அசுவுனியைப் பிடித்து உண்ணும். பருத்தியைத் தாக்கும் காய்ப்புழு முதலில் சூரியகாந்தி பயிரையேத் தாக்குவதால் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்துதல் இலகுவாகிறது. மேலும் சூரியகாந்தியின் மகரந்த்தினை பருத்தியின் சூழினை உண்ணும் கண்ணாடி இலைப்பூச்சி அதிகம் விரும்பி உண்ணும். இவ்வாறு சாறு உறிஞ்சும் பூச்சிகளையும், காய்ப்புழுக்களின் இளம் பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம்.
மக்காச்சோளம் ஊடுபயிராக விதைப்பதால் அதன் மகரந்தத்தை உண்டு, பொறிவண்டு இனப்பெருக்கம் அதிகமாகிறது மேலும் இது பருத்தியை தாக்கும். வெண்டை ஊடுபயிராகப் பயிரிடுவதால், பருத்தியினைத் தாக்கும் காய்ப்புழுக்கள் அதிகமாக வெண்டைப் பயிரையே விரும்பி உண்பதால் அதன் தாக்குதல் வெண்டைப் பயிரில் அதிகமாக இருக்கும். வரப்பு ஒரங்களில் ஆமணக்கு பயிரிடுவதால் பருத்தியினை தாக்கும் புகையிலைப் புழு (புரோடினியா) தாக்குதல் பருத்தி பயிருக்கு குறைகிறது. மேலே குறிப்பிட்டுள்ள ஊடு பயிர்களை தினந்தோறும் கண்காணித்து முட்டை குவியல் புழுக்களை கையால் பொறுக்கி அழிக்கவும். மேலும் பருத்தியை தாக்கும் அனைத்து காய்ப்புழுக்களையும் ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தலாம்.
இப்படி நாம் முதன்மைப் பயிருடன் ஊடுபயிராக சாகுபடி செய்வதால் மிகுந்த நன்மை கிடைக்கும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆகவே இந்த மானாவாரி சமயத்தில் கண்டிப்பாக ஊடுபயிரை பயன்படுத்துங்கள். உண்மையாகவே உங்களது வருமானத்தை ஊடுபயிர் சாகுபடி இரட்டிப்பாக்கும் என்பதில் ஐயமில்லை.
-முற்றும்.
கட்டுரையாளர்: என்.மதுபாலன், வேளாண் துணை இயக்குனர்(ஒய்வு), தர்மபுரி மாவட்டம். தொடர்புக்கு: 9751506521.