Site icon Vivasayam | விவசாயம்

பழுப்பு உரமும் அதன் முக்கியத்துவமும்

பழுப்பு உரமிடுதல் (Brown Manuring) என்பது மண்ணின் கரிமப்பொருட்களை அதிகரிக்கவும், மண்ணின் வளத்தை மேம்படுத்தவும், களைகளைக் குறைக்கவும் மற்றும் தாவரப் பொருள்களை மண்ணுக்குத் திருப்பித் தருவதுமாகும்.. பழுப்பு உரம் என்பது பசுந்தாள் உரத்தை போன்றதே ஆகும்.

சாதரணமாக பசுந்தாள் உரத்தை,

  • விதை விதைத்து
  • 45 நாட்கள் கழித்து
  • பூக்கள் பூக்கும் பருவத்தில்
  • செடிகளை மடக்கி அதே வயலில் ஏர் உழுது மக்க வைப்போம்.

ஆனால் பழுப்பு உரத்தில்ஏர் இன்றி களைக்கொல்லியைப் (Selective herbicide) பயன்படுத்தி தக்கைப் பூண்டுப் பயிரையும் களைகளையும் கொன்று நிலத்தில் அழுத்தி விடுவதன் மூலம் இது உரமாக செயல்படுகிறது. களைக்கொல்லியை பயன்படுத்தி பயிர்களை அளிப்பதன் மூலம் பயிர்கள் கருகி, பழுப்பு நிறத்தில் காணப்படும். அதுவே பிறகு உரமாக பயன்படுத்துவதால் இதை  “பழுப்பு  உரம் என்று அழைக்கிறோம். பழுப்பு உரம் என்பது நஞ்சை நெல் விவசாயத்தில் தற்போது பயன்படுத்தும் முறையாகும்.  இதை பயன்படுத்துவதன் மூலமாக அடுத்த பயிருக்கு கிடைக்கும் தழைச்சத்தை அதிகப்படுத்தலாம்.

செய்முறை:

  1. முதலில் தக்கைப் பூண்டினை ஒரு எக்டருக்கு 20 கிலோ என்ற விகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்பு மூன்று நாட்கள் முன் விதைத்த நெல் வயல்களில் 20 கிலோ விதைகளை அனைத்து இடங்களிலும் பரவும் வகையில் (Broadcasting) விதைக்கவேண்டும்.
  3. ஒரு மாதம் வரை தக்கைப் பூண்டு செடிகளை வளர்க்க வேண்டும்
  4. 30 நாட்கள் கழிந்த பிறகு 2, 4 -D (selective herbicide) எனப்படும் களைக்கொல்லியை பயன்படுத்தி தக்கைப் பூண்டுச் செடிகளை அழிக்க வேண்டும்.
  5. களைக்கொல்லி தெளித்த பிறகு பயிர்கள் வாடி, கருகி, பழுப்பு நிறத்தில் காணப்படும்.

பழுப்பு நிறம் வரும் பொழுது மண்ணில் கோனோவீடர் ) cono weeder) பயன்படுத்தி அழுத்திவிட வேண்டும். இதை பழுப்பு உரம் என்று கூறுகின்றோம்.

 

இந்த உரத்தின் மூலம்

  • மண்ணில் ஒரு எக்டேருக்கு 35 கிலோ நைட்ரஜனை (N)வேர் மண்டலத்தில் அளிக்கிறது.
  • மேலும் மண்ணின் வளத்தை மேம்படுத்தி ஒரு எக்டருக்கு 400 முதல் 500 கிலோ வரை மகசூலையும் அதிகரித்துத் தருகிறது.

நன்மைகள்:

  • மண்ணின் வேதிப் பண்புகளும், மண்ணின் நுண்ணுயிர்ப் பெருக்கத்தையும், மண்ணின் காற்றோட்டத்தையும் அதிகப்படுத்தவும் உதவுகிறது.
  • மண்ணின் இயற்பியல்-வேதியியல் பண்புகளைக் கணிசமாக மேம்படுத்துகிறது, அதாவது,
    • கரிமப் பொருட்கள்,
    • வேர் மண்டலத்தில் கிடைக்கக்கூடிய நைட்ரஜன்,
    • வேர் மண்டலத்தில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களின் செறிவு மற்றும் மண்ணின் மொத்த அடர்த்தியைக் குறைக்கிறது,
    • தழைச்சத்து – இழப்புகள் மற்றும் மண் அரிப்பை தடுக்கிறது.
  • பழுப்பு உரமாக மாறிய தாவரங்கள் மேலுறை போன்று மண்ணின் மீது பரவி மேற்பரப்பு மண் கடினமாவதில் (soil crusting) இருந்து தடுக்கிறது. இதனால் மண்ணில் நீர் ஊடுருவல் விகிதம் அதிகரிக்கிறது.
  • பல்வேறு விதமான பூச்சிகளுக்கும் நோய்களுக்கும் உறைவிடமாகத் திகழும் களைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமாக பூச்சிகளின் தாக்குதலையும் தாவர நோய்களையும் தவிர்ப்பதற்கு பழுப்பு உரம் மிகவும் உதவுகிறது.
  • பழுப்பு உரம் பயன்படுத்துவதன் மூலம் பயிர்களில் அதிகமாக களைகள் வளரும் பருவமான 45 நாட்கள் தவிர்க்கப்பட்டு 50% களைகளைக் கட்டுப்படுத்த முடியும்.
  • இதனால் பயிர்களின் உற்பத்தித் திறனும் மகசூலும் அதிகரிக்கும்.

கட்டுரையாளர்: 1. சு.கீர்த்தனா,  உதவிப் பேராசிரியர், உழவியல் துறை, அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அத்திமுகம்  கிராமம், சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம். மின்னஞ்சல்: keerthu.agri24(at) gmail.com

 

2 மூ. சத்தியசிவாநந்தமூர்த்தி, உதவிப் பேராசிரியர், தாவர நோயியல் துறை, RVS வேளாண்மைக் கல்லூரி, தஞ்சாவூர்.

Exit mobile version