Skip to content

இயற்கை உரம் (பகுதி – 2) பருமனனான அங்ககப் பொருட்கள்

பருமனனான அங்ககப் பொருட்கள் குறைவான சதவீதம் கொண்ட ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது மற்றும் இதனை அதிக அளவில் பயிர்களுக்கு இட வேண்டும். பண்ணை உரம், மட்கிய உரம், பசுந்தாள் உரங்கள் பருமனனான அங்ககப் பொருட்களின் ஆதாரங்கள் ஆகும். இதைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்:

  1. நுண் ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய தாவர ஊட்டச் சத்துக்களை வழங்குகிறது.
  2. மண் இயல் நிலைக் குணங்களான மண் அமைப்பு, நீர் பிடிப்புக் கொள்ளளவு மற்றும் பல குணங்களை மேம்படுத்துகிறது.
  3. சிதைவுறுதலின் போது கரியமிலவாயுவை வெளிவிடுவதால் கரியமில உரமாகச் செயல்படுகிறது.
  4. பயிர் ஒட்டுண்ணி நூற்புழுக்கள் மற்றும் பூஞ்சாண்கள் ஓரளவிற்கு கட்டுப்படுத்துகிறது. மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் அளவை மாற்றுவதால் அதைக் கட்டுப்படுத்தலாம்.

பண்ணை உரம்:

பண்ணையில் உள்ள கால்நடைகளின்  சாணம் மற்றும் சிறுநீர், பண்ணைக் குப்பை மற்றும் கால்நடைத் தீவனக் குப்பைகளின் சிதைக்கப்பட்ட கலவை தான் பண்ணை உரமாகும். சராசரியாக, சிதைக்கப்பட்ட பண்ணை எருவில் 0.5 சதவீதம் தழைச்சத்து(N), 0.2 சதவீதம் மணிச்சத்து(P), 0.5 சதவீதம் சாம்பல்(K) சத்தும் உள்ளது. தற்போது விவசாயிகளால் தயாரிக்கப்படும் பண்ணை உர முறை தவறானது. சிறுநீரில் 1 சதவீதம் தழைச்சத்து, 1.35 சதவீதம் சாம்பல் சத்தும் உள்ளது. சிறுநீரில் இருக்கக் கூடிய நைட்ரஜன் யூரியா வடிவத்தில் இருக்கும். இதுவும் ஆவியாதல் மூலம் இழப்பை ஏற்படுத்தும். சேமிப்பின் போது கூட ஊட்டச்சத்துக்கள் அரிப்பு மற்றும் ஆவியாதல் மூலம் இழக்கப்படுகிறது. எப்படி இருந்தாலும் இழப்பை தவிர்ப்பது செயல்முறையில் முடியாத ஒன்றாகும்.

பண்ணை உரம் தயாரிக்க ஏற்ற பயிர்கள்: காய்கறிப் பயிர்களான உருளைக்கிழங்கு, தக்காளி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கேரட், முள்ளங்கி, வெங்காயம் மற்றும் பல. பண்ணை உரம் தயாரிக்க ஏற்ற மற்ற பயிர்கள்: கரும்பு, நெல், நேப்பியர் புல் மற்றும் பழப்பயிர்களான ஆரஞ்சு, வாழை, மா, தோட்டம் பயிர்களான தென்னை.
பண்ணை உரத்தில் உள்ள முழு ஊட்டச்சத்தும் உடனடியாக பயிர்களுக்கு கிடைக்காது. 30 சதவீத தழைச்சத்து, 60 – 70 சதவீதம் மணிச்சத்து, 70 சதவீதம் சாம்பல் சத்து மட்டுமே பயிருக்கு கிடைக்கும்.

செம்மறி மற்றும் வெள்ளாட்டு உரம்:

செம்மறி மற்றும் வெள்ளாட்டினுடைய எச்சங்களில் பண்ணை உரம் மற்றும் மட்கிய உரங்களில் உள்ள ஊட்டச்சத்தை விட அதிக ஊட்டச்சத்து உள்ளது. சராசரியாக, இந்த உரத்தில் 3 சதவீத தழைச்சத்து, 1 சதவீதம் மணிச்சத்து, 2 சதவீதம் சாம்பல் சத்து இருக்கிறது. செம்மறி அல்லது வெள்ளாடுகளின் தொழுவத்தினுடைய குப்பைக் கூளங்களை சிதைவுறுவதற்காக குழிகளில் போட வேண்டும். பின் வயலில் இட வேண்டும். இந்த முறையில் சிறுநீரில் உள்ள ஊட்டங்கள் வீணாகப் போகின்றது. இரண்டாவது முறை ஆடுகளை வேலி போட்டு வயலில் அடைத்து வைத்தல். இந்த முறையில் ஆடுகள் வயலில் இரவு முழுவதும் அடைத்து வைக்க வேண்டும். மண்ணில் சேர்க்கப்பட்ட சிறுநீர் மற்றும் ஆட்டுக் கழிவுகளை கொத்துக் கலப்பை அல்லது சிறுகலப்பை கொண்டு சிறிது ஆழத்திற்கு உழுது விட வேண்டும்.

கோழிப்பண்ணை உரம்:

பறவைகளின் எச்சக் கழிவுகள் விரைவாக சிதைவுறும். திறந்த நிலையில் இந்தக் கழிவுகளை வைத்திருந்தால் 30 நாட்களுக்குள் 50 சதவீத தழைச்சத்து இழப்பு ஏற்படும். கோழிப் பண்ணை உரத்தில் தழைச்சத்து மற்றும் மணிச்சத்து, மற்ற எருக்களைக் காட்டிலும் அதிகளவு இருக்கிறது.

பல தரப்பட்ட எண்ணெய் பிண்ணாக்கில் உள்ள ஊட்டச்சத்துக்களின் சராசரி அளவு:

 

பிண்ணாக்குகள்  ஊட்டச்சத்துக்களின் அளவு (சதவீதத்தில்)
தழைச் சத்து மணிச் சத்து சாம்பல் சத்து
உண்ணத் தகுதியற்ற பிண்ணாக்குகள்
பருத்தி விதைக் கட்டி (தோலுரிக்காதது) 3.9 1.8 1.6
புங்கக் கட்டி 3.9 0.9 1.2
இலுப்பைக் கட்டி 2.5 0.8 1.2
செந்தூரக் கட்டி (தோலுரிக்காதது) 4.9 1.4 1.2
உண்ணத் தகுதியுள்ள பிண்ணாக்குகள்
தேங்காய் கட்டி 3.0 1.9 1.8
பருத்தி விதை கட்டி (தோலுரித்தது) 6.4 2.9 2.2
நிலக்கடலைக் கட்டி 7.3 1.5 1.3
ஆளி விதைக் கட்டி 4.9 1.4 1.3
போயள் கட்டி 4.7 1.8 1.3
கடுகு விதைக் கட்டி 5.2 1.8 1.2
செந்தூரகக் கட்டி (தோலுரித்தது) 7.9 2.2 1.9
எள் கட்டி 6.2 2.0 1.2

தொடரும்…..

கட்டுரையாளர்கள்: பெ.சி.ர. நிவேதிதா  மற்றும்  கோ.சீனிவாசன், முனைவர் பட்ட படிப்பு மாணவர்கள் (உழவியல் துறை), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை.

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj