Site icon Vivasayam | விவசாயம்

கோடை உழவு– கோடி நன்மை ( பொன் ஏர் கட்டுதல் ) பகுதி-2

உழவு

 

இயற்கை விவசாயம், செயற்கை விவசாயம் அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது மண். அந்த மண்ணைக் கிளறிவிடுவதுதான் உழவு மற்றும் விவசாயத்தின் அடிப்படை ஆகும். சம்பா முடிந்ததும் அவசியம் கோடை உழவு செய்ய வேண்டும். தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வடகிழக்கு பருவக்காற்று மழைபெய்யும் மானாவாரி மற்றும் புஞ்சை நிலங்களில் பயிர்சாகுபடி நடைமுறையில் உள்ளது. முதற்பயிர் சாகுபடி ஆனி-ஆடி மாதங்களில் துவங்கி, இரண்டாவது பயிர் தை மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது. இடைப்பட்ட காலமான மாசி முதல் வைகாசி மாதம் வரை நிலம் உழவின்றி பல்வேறு இழப்புகளுக்கு ஆளாகும் நிலையில் தரிசாக உள்ளது. அப்பொழுது நம் வயலை உழுது புழுதிக்காலாக செய்யவேண்டும்.

மாரி(மழை) வரும் ஓரிரு மாத கோடை கால இடைவெளியில் அதாவது (பங்குனி-சித்திரை-வைகாசி மாதங்களில்) சாகுபடி நிலத்தை தரிசாக விடாமல் சட்டி கலப்பைக்கொண்டு உழுவதையே கோடை உழவு என்கிறோம். தற்போது உள்ள விவசாயிகள் பொன்னேர் கட்டுவதை பார்க்க முடிவதில்லை. பெரும்பாலான  விவசாயிகளிடம் ஏர் மாடுகள் இல்லை. கோடை உழவு என்பதைப் பெரும்பாலும் செய்வதில்லை. மழைக்காலத்தில் செய்யும் உழவைவிட, கோடைக்காலத்தில் செய்யும் உழவுதான் முக்கியமானது. மழைக்காலத்தில் போதுமான ஈரம் இருக்கும். அந்த ஈரத்தில் உழவு செய்யும்போது, மண்ணுக்குள் குளுமையான தன்மைதான் உருவாகும். ஆனால் கோடைக்காலத்தில் உழவு செய்யும்போது, வெப்பம், குளுமை இரண்டும் மண்ணுக்குக் கிடைக்கும். இப்படி இரண்டும் கிடைக்கும்போதுதான் மண்ணின் கட்டுமானம் பலப்படும்’ என்கிறது அறிவியல்.

Ø தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்

வேண்டாது சாலப் படும்.

  – திருவள்ளுவர்
Ø    கோடை உழவு கோடி நன்மை என்ற பழமொழிக்கேற்ப இதன் பயன்கள் பலவாகும்.

மண்ணைப் புரட்டிவிடும் போது, முதலில் மண் வெப்பமாகி, பிறகு குளிர வேண்டும். இதுதான் உழவியல் முறையின் அடிப்படை. கோடை உழவின் சூத்திரமும் அதுதான். அதாவது காய்ந்து குளிர்தல். அந்த நிலைக்கு மண்ணைக் கொண்டு செல்வதுதான் கோடை உழவு. அப்படிப் பதப்படுத்திய மண்ணில்தான் பயிர்கள் செழிப்பாக வளரும்.

கோடை உழவின் அவசியம்!

  • தைமாத அறுவடையின் போது, சாகுபடி செய்த பயிரிலிருந்து கொட்டிய இலைச்சருகுகள் நிலத்தின் மேல் போர்வையாக இருக்கும்.
  • அறுவடைக்குப்பின் வேரின் அடிக்கட்டைகள் மக்குவதற்கு அதிக வாய்ப்பின்றி இருக்கும்.
  • மேல்மண் இறுக்கமாக காணப்படும். இதனால் மழை நீர் பூமிக்குள் இறங்காமல் மேல் மண்ணுடன் மழை நீர் வெளியேறும்.
  • நிலத்தோடு மக்க வேண்டிய பயிர்கள், சருகுகள் காற்றுவீசும் போது வேறு இடங்களுக்கு எடுத்து செல்லப்படும்.
  • முந்தைய பயிரின் தூர்கள் கரையானின் தாக்குதலுக்குட்பட்டு பயனின்றி விரயமாகும்.

கோடை உழவு செய்யும் முறை!

நிலத்தின் மேட்டுப் பகுதியிலிருந்து தாழ்வான பகுதியை நோக்கி உழவு செய்ய வேண்டும். இரண்டாவது உழவு, குறுக்கு வசத்திலிருக்க வேண்டும். இப்படி நான்கு உழவு செய்ய வேண்டும். குறுக்கு உழவு செய்யாமல் நேர்கோடாக உழவு செய்தால், மழை பெய்யும்போது மேட்டுப் பகுதியில் இருக்கும் சத்துகள் தாழ்வான பகுதிக்குப் போய்விடும். குறுக்கு உழவு இருந்தால் சத்துக்கள் ஆங்காங்கே தடுக்கப்படும்; மழைநீரும் பூமிக்குள் இறங்கும். கோடையில் இரண்டு மழை கிடைக்கும். முதல் மழையிலேயே உழவு செய்துவிட வேண்டும். அப்போதுதான் இரண்டாவது மழை நீரை மண்ணுக்குள் சேமிக்க முடியும்.

-தொடரும்….

கட்டுரையாளர்கள்: 1. கோ.சீனிவாசன், முனைவர் பட்ட படிப்பு மாணவர் (உழவியல் துறை), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

  1. க.சத்யப்பிரியா, உழவியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.
Exit mobile version