இலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள் மற்றும் ஊடுபயிர் சாகுபடி பற்றி அறிந்து கொள்ளுங்கள்
இயற்கை விவசாயத்தில் ஊடுபயிர் சாகுபடி என்பது ஒரு அங்கமாகும். எல்லா விவசாயிகளும் ஒரே பயிரை மட்டும் நம்பியிராமல் அதனுடன் மற்றொரு பயிரையும் சேர்த்து சாகுபடி செய்தோம் என்றால் கொஞ்சம் அதிகமாக வருமானம் எடுக்க முடியும் அதாவது மானாவாரி பகுதியில் விவசாயிகள் சோளத்தை மட்டும் பயிர் செய்தீர்கள் என்றால் குறைந்த லாபம் மட்டும் பெற முடியும். ஒருவேளை மழை பொய்த்து விட்டது என்றால் சோளப்பயிர் நமக்கு நஷ்டத்தை தந்து விடும். எனவே அந்த சோளப்பயிர் நடுவே வேறு ஏதேனும் ஊடுபயிர் போட்டு இருந்தால் அதன் மூலம் நமக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக ஊடுபயிர் மூலம் 40 லிருந்து 60% கூடுதலாக லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது
ஊடுபயிரின் அவசியம் மற்றும் அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்:
- முதன்மை பயிருக்கு பாதுகாப்பு அரணாகவும், நோய் பூச்சித் தாக்குதலை தடுத்தும் விடுகிறது.
- மண் வளம் பெருகி, நுண்கிருமிகள் மூலம் மண்ணிற்கு தேவையான அங்ககச் சத்தை அதிகரிக்கச் செய்துவிடுகிறது.
- ஒரு இலை தாவரங்களான சோளம், கம்பு, மக்காச்சோளம் போன்ற பயர்களில் இரு இலை தாவரமான பாசிப்பயிறு, தட்டபயிறு, நிலக்கடலை, உளுந்து போன்றவற்றை ஊடுபயிராக பயிரிடலாம்.
- மானாவாரி நிலங்களில் பயிரிடப்படும் பயிர்கள் இலைகளின் மூலம் தான் 80% தங்களுக்குத் தேவையான உணவு உற்பத்தியை சூரிய ஒளியின் மூலம் எடுத்துக்கொள்கின்றன. சூரிய ஒளி இலைகளில் அதிக அளவு இருந்தால் உணவு உற்பத்தி கூடவோ குறையவோ வாய்ப்பு இருக்கிறது. ஆகவே இந்த சூரிய ஒளியை சற்று குறைக்கும் விதத்தில் நாம் ஊடு பயிர் செய்தால் நிச்சயம் நமக்கு லாபம் கிடைக்கும்.
- விவசாயிகளின் மந்திரம் எப்படி இருக்க வேண்டும் என்றால் “ஒரு மடங்கு நிலம், இருமடங்கு உற்பத்தி, மூன்று மடங்கு லாபம்” என்ற விதத்தில் இருக்க வேண்டும்.
கட்டுரையாளர்: என்.மதுபாலன், ஓய்வுபெற்ற வேளாண் துணை இயக்குனர், தர்மபுரி மாவட்டம். தொடர்புக்கு: 9751506521