பி பி எப் எம் (PPFM) (மெத்தைலோபாக்டரியா) என்பது காற்று வாழ் உயிரி ஆகும். இயல்பாகவே மெத்தைலோபாக்டரியா ஏராளமான இலைகளின் மேற்புறத்தில் காணப்படும். உலக அளவில் பல்வேறு பகுதிகளில் நீர் பற்றாக்குறையினால் பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்படுகின்றன. இந்தியாவில் சராசரியாக 62% விளைநிலங்கள் பருவமழையை சார்ந்து இருக்கிறது. எனவே பருவமழை பொய்த்தல் அல்லது முன்பே பருவமழை விடைபெற்றல் போன்ற பல்வேறு பருவ காரணிகளால் பயிர்கள் வறட்சியை எதிர்கொள்கிறது. அவ்வாறு எதிர்கொள்ளும் பயிரினை காக்க இந்த திரவ நுண்ணுயிர் உரமானது உருவாக்கப்பட்டுள்ளது. இது நெற்பயிர் உள்ளிட்ட பல பயிர்களை வறட்சியிலிருந்து காப்பாற்ற மிகவும் உதவுகிறது.
முக்கிய செயல்பாடு:
இந்த பி பி எப் எம் என்ற பாக்டீரியா பயிர் வளர்ச்சி ஊக்கியான ஆக்ஸின் மற்றும் சைட்டோகைனினை பயிருக்கு அளிக்கிறது. இதனை அனைத்து வகையான பயிர்களுக்கும் தெளிக்கலாம்.
தெளிக்கும் அளவு: ஒரு சதவீதம் அதாவது ஒரு லிட்டர் நீரில் 10 மில்லி லிட்டர்.
உபயோகிக்கும் முறை:
- விதைநேர்த்தி: பரிந்துரைக்கப்பட்ட அளவான விதையினை 1% நுண்ணுயிர் திரவத்தில் நன்கு கலந்து 5 முதல் 10 நிமிடங்களுக்கு நிழலில் உலர்த்தி அதன்பின் விதைக்கவும்.
- இலைகளில் தெளித்தல்: இதனை 1 சதவீதம் என்ற அளவில் காலை அல்லது மாலை நேரத்தில் இலைகள் நன்கு நனையும்படி தெளிக்கவும்.
பயன்படுத்த வல்ல பயிரின் வளர்ச்சிநிலை:
- பயிர்களின் முக்கியமான வளர்ச்சி காலங்களில் இதனை தெளிக்கவும் அல்லது 30 முதல் 45 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தவும்.
- இதனை தெளிக்கும்போது பூச்சிக்கொல்லி அல்லது பூஞ்சான் கொல்லி உடன் தெளிக்கக் கூடாது. பூச்சிக்கொல்லிமருந்து தெளிப்பதற்கு 7 முதல் 10 நாட்களுக்கு முன்பு அல்லது பின்பு இந்தநுண்ணுயிரிதிரவத்தை தெளிக்க வேண்டும்.
- பிபிஎப்எம் – 1000மி.லி. / ஏக்கர் இலைவழி பயன்பாடு.
நன்மைகள்:
- விதை முளைப்புத்திறன் மற்றும் நாற்றின் வளர்ச்சியை கூட்டுகிறது.
- பச்சையம் உற்பத்தி மற்றும் இலைப் பரப்பினையும் அதிகரிக்கிறது.
- வறட்சியை தாங்கும் திறனைப் பயிருக்கு வழங்குகிறது.
- பழங்கள், காய்கள் மற்றும் விதைகளின் தரத்தினைஉயர்த்துகிறது.
- பூக்கும் காலம் மற்றும் அறுவடை காலத்தை குறைக்கிறது.
- மகசூலை10சதவீதம்அதிகரிக்கிறது.
கட்டுரையாளர்: பெ. பவித்ரன், முதுநிலை வேளாண் மாணவர் (உழவியல் துறை), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.