Site icon Vivasayam | விவசாயம்

தருமபுரி மாவட்ட நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

நீங்கள் இயற்கையை நேசிப்பவரா?
ஒரு சிறு முயற்சிக்கு உங்களை அழைக்கிறோம்.?

இந்த மாதம் மார்ச் 21 – உலக காடுகளின் தினம் வருகிறது.

அதையொட்டி தருமபுரி மாவட்ட நண்பர்கள் ஒன்று சேர்ந்து இந்த பகுதியில் உள்ள கண்ணாடி பாட்டில்களை அகற்றுவதற்கு கரம் கோர்க்க கோரிக்கை வைக்கிறோம்.

காடுகள் என்பவை மரங்களால் சூழப்பட்ட பகுதி. உலக நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு உள்ள காடுகள் பூமத்திய ரேகைப் பகுதியிலிருந்து துருவப் பகுதிகள் வரை பரவியுள்ளன.தற்போதைய நிலையில் புவி மேற்பரப்பில் 9.4 சதவீதம் அல்லது மொத்த நிலப்பரப்பில் ஏறத்தாழ 30 சதவீதம் காடுகளினால் மூடப்பட்டுள்ளது. காடுகளில் பல வகைகள் உண்டு. காடுகள், மரங்களை அடிப்படையாக் கொண்டே வகைப்படுத்தப்படுகின்றனவெப்ப மண்டலக்காடுகள், சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள், இலையுதிர் காடுகள், ஊசியிலை காடுகள் சில வகைகளாகும். வெப்ப மண்டல காடுகள் உலகில் வாழும் 50 சதவீத உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன.

தமிழ்நாடும் காடுகளும் : தமிழ்நாட்டில் சுமார் 22,877 சதுர கி.மீ., பரப்பளவு காடு உள்ளது. இது தமிழ்நாட்டின் நிலப்பரப்பளவில் 17.59 சதவீதம். தேசிய வனக் கொள்கையின் படி மாநிலங்கள் தங்கள் நிலப்பரப்பில் 33.33 சதவீதத்தை காடுகளாக கொண்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் 5 வகை காடுகள் உள்ளன. அவை வெப்ப மண்டல பசுமை மாறாக்காடுகள், வெப்ப மண்டல அகன்ற இலைக் காடுகள், முட்புதர் காடுகள், சதுப்பு நிலக்காடுகள், இலையுதிர் காடுகள். சிலர், ‘காடு இருப்பதால் யாருக்கு என்ன லாபம்? மரங்களை வெட்டி விற்றால் நிறைய பணம் சம்பாதிக்கலாம்’ என்று நினைக்கின்றனர்.

காடுகளை அழித்து குடியிருப்புகளை கட்டினால் கோடிக் கணக்கில் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் தவறானது. இந்த எண்ணத்தால்தான், உலகத்தில் உள்ள காடுகளில் பாதிக்கும் மேல் அழிந்து விட்டது. காடுகள் என்பது சோலை வனங்கள். இந்த சோலை வனங்கள் அழியுமானால் நாம் பாலைவனத்தில் தான் வசிக்க வேண்டும்.

ஒரு காடு அழியும் போது வெறும் மரங்கள் மட்டும் அழிவதில்லை. அங்கிருக்கும் அத்தனை தாவரங்கள், மூலிகைகள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புழுக்கள், எண்ணற்ற நுண்ணுயிர்கள் ஆகியவை எல்லாமே ஒட்டு மொத்தமாக அழிந்து விடுகின்றன. அதனால் ஏற்படும் நஷ்டம் அளவிட முடியாது. காடுகள் அழிக்கப்படுவதால் தட்வெப்ப நிலை மாறுகிறது. சமீப காலங்களில் ஏற்படும் காட்டுத்தீயால் பல அரிய வகை தாவரங்களும், பூச்செடிகளும், அரிய விலங்குகளும் அழிகின்றன. மலைகள் மீது பச்சை கம்பளத்தை போர்த்தியது போன்ற உயர்வகை புல்வெளிகள் கருகுகின்றன. மரங்கள் அழிவதுடன் நுண்ணுயிர்களும், வண்ணத்து பூச்சிகளும் ,விலங்குகளும் அழிகின்றன.

காடுகள் அழிவதால் பாதிப்பு : காடுகள் அழிவதால் நேரடியாக பாதிக்கப்படுவது விலங்குகளே. காடுகள் அழிக்கப்படுவது குடிநீர் பஞ்சத்தை உருவாக்கி விட்டது. குடிநீரை தேடி வரும் விலங்குகள் மனித வாழ்க்கைக்கும் இடையூறு செய்கின்றன.

இன்று நம் வீட்டில் பயன்படுத்தும் அழகு பொருட்கள், மேசை, நாற்காலி, வாசற்கதவு என நாம் காணும் அனைத்தும் மரங்களில் உருவானவையே. செய்தி தாள்கள், புத்தகங்கள், பென்சில், காகிதங்கள் இல்லாத உலகை கற்பனை செய்ய இயலாது. இதெல்லாம் காடுகள் நமக்களித்த செல்வங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக காட்டில் உள்ள மரங்கள் நமக்கு தேவையற்ற கார்பன்-டை-ஆக்சைடை உள்வாங்கி கொண்டு, நாம் உயிர்வாழ தேவையான ஆக்சிஜனை நமக்கு அளிக்கிறது. இந்த நிகழ்வினை மனிதனால் செயற்கையாக உற்பத்தி செய்ய இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.நன்கு வளர்ந்த இலைகளை கொண்ட ஒரு மரம், ஓராண்டுக்கு 40 மனிதர்கள் சுவாசிக்க தேவையான பிராண வாயுவை தருகிறது.

காடுகள் உலகின் தட்பவெப்ப நிலையை சமப்படுத்த உதவுகின்றன. தாவரங்கள் கார்பன்-டை-ஆக்சைடை உட்கொள்வதால், பூமி குளிர்ச்சியடைந்து தட்பவெப்ப நிலை சீராகிறது. இவ்வாறு அவை உலகிற்கு நுரையீரல்களாக செயல்படுகின்றன. மரங்கள் நம் வாழ்வோடும் மதத்தோடும், கலாசாரத்தோடும் இணைந்துள்ளன. காங்கோ மற்றும் அமேசான் போன்ற வெப்ப மண்டலக் காடுகளில் ஆண்டு முழுவதும் மழை அதிகமாக பெய்ய காரணம் அங்கு மரங்கள் நிறைந்திருப்பது தான். இன்று பெருமளவில் வனங்கள் அழிக்கப்பட்டு விளைநிலங்களாக மாற்றப்பட்டு விட்டதால் பருவமழை தவற ஆரம்பித்து விட்டது.

காடுகளும் நன்மைகளும் : காடுகள் இரண்டுவிதப் பணிகளை செய்கின்றன. நமக்கு தேவையான பல அத்தியாவசிய பொருட்களை கொடுத்து வருகின்றன. நாம் ஆரோக்கியமாக வாழ நமது சுற்றுப்புற சூழ்நிலையை பாதுகாத்து வருகின்றன. துாய காற்று மற்றும் நீர் ஆகியவற்றை காடுகள் வழங்குகின்றன. காற்றிலிருக்கும் பல்வேறு கரிமியல வாயுக்களை கிரகித்து கொள்ளும் ஆற்றல் பெற்றவை காடுகள் என்பதால், வளி மண்டலம் சுத்தம் செய்யப்படுகிறது. காடுகள் வானிலையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

இவை மேகங்களை திரட்டி, குளிர்ச்சியூட்டி மழை பொழிய வைக்கின்றன. அவை அழிக்கப்பட்டால் மழை இல்லாமலும், மழையின் அளவும் குறைந்து போகும். பெய்யும் மழைநீரை சேமித்து வைக்கும் வங்கிகளாகவும் அவை செயல்படுகின்றன. மரங்களே இல்லாத சாதாரண நிலப்பரப்பில் மழை பெய்யும் போது மழை நீரில் மூன்று விழுக்காடே பூமியினுள் உறிஞ்சப்படுகிறது. மீதமுள்ள 97 விழுக்காடு நீர் உடனடியாக ஓடி விடுகிறது.

ஆனால் காடுகளில் பெய்யும் மழை நீரில் 33 விழுக்காடு உள்ளிழுக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
காடுகளின் மேற்பரப்பில் அடுக்கடுக்காக விழுந்து கிடக்கும் இலை தழைகள் மக்கிய நிலையில் நீரை உறிஞ்சி பாதுகாத்து வைக்கும் மிருதுவான பஞ்சாக செயல்படுகின்றன. இவ்வாறு உறிஞ்சப்பட்ட நீர் வெளியேறுவது போல் மெதுவாக வெளி வரும். இவ்வாறு வெளிவரும் நீர் அருவிகள், நீரோடைகளாக மாறுகின்றன.

காடுகளில் இருக்கும் மரங்கள் செய்யும் இன்னொரு மகத்தான சேவை மண்ணரிப்பை தடுப்பது. மரங்களின் வேர்கள் பரந்து விரிந்து கிடப்பதால் அவற்றை சுற்றியுள்ள மணற்பரப்பை கெட்டியாக பிடித்து கொள்கின்றன. மண் அரிப்பு, மண்படிதல், நிலநடுக்கம், நிலச்சரிவு, புழுதிப்புயல் போன்றவை ஏற்பாடதிருக்க காடுகள் பெரிதும் பயன்படுகின்றன. காடுகளில்லாத பகுதியில் வரும் புயலால் ஒரு எக்டேரிலிருந்து 150 டன்கள் மேல் மண் அடித்து செல்லப்பட்டு விடும். காடுகள் அதிகமுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும். இதனால் புயல், சூறாவளியின் தாக்கம் குறைவாக இருக்கும்.

பாதுகாப்போம் : காடுகளால் உயிரியல் பன்மை வளம் பாதுகாக்கப்படுகிறது. காடுகளில் அரிய மூலிகைகள் கிடைக்கின்றன. விலங்குகள், பறவைகள் ஆகியவற்றிற்கு புகலிடமாக விளங்குகிறது. காட்டில் ஒரு தாவரம் அழிக்கப்பட்டால் அதை நம்பி வாழும் நாலுவகை உயிரினங்களின் அழிவுக்கு காரணமாக அமைந்து விடும்.

சீனக் காடுகளில் மூங்கில் குருத்துக்களை மட்டுமே சாப்பிட்டு வாழும், பாண்டா கரடிகள், தற்போது அரிதாகிவிட்டன. அதன் காரணம் அங்கு மூங்கில் காடுகள் அழிக்கப்பட்டதே. இந்த உயிர்க்கோளமான பூமிக்கு தேவையான பிராணவாயுவை உற்பத்தி செய்வது உலகின் 13 நாடுகளில் உள்ள காடுகள் தான்.

அவற்றில் இந்தியாவும் ஒன்று. மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் இமயமலைக்காடுகள் ஆகியவை உலகின் உயிர்க்காற்றை உற்பத்தி செய்வதில் பெரும்பங்கு வகிக்கின்றன.இந்த காடுகளை காப்பாற்றுவதன் மூலமாக தான் நாம் வெப்பத்தை குறைத்து, வெப்ப உயர்வினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உயிர்களையும், பயிர்களையும் காப்பாற்ற முடியும்.
வரும் மார்ச் 21 ம் தேதியான அன்று, காடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், உலக காடுகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. காடுகளின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ளவில்லை. பூமியையும், இயற்கை சமநிலையையும் பாதுகாக்கும் கவசமே காடுகள். எனவே அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து பாதுகாக்க முயல்வோம்.

நம் தருமபுரி மாவட்டதின் அழகிய வனப்பகுதி
பிலிகுண்டுலு காவிரி தமிழக்தில் உள்ளே வரும் வனப்பகுதி இது.
தமிழக்தின் மிக முக்கிய யானை வழித்தடங்களில் இந்தப் பகுதியும் ஒன்று. ஆற்றின் இந்தப்பக்கம் தமிழகம் , அந்தப்பக்கம் கர்நாடக

ம்.
ஒகேனக்கல்லில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில் இதை பார்க்க முடியும்…
ஆனால் இந்த யானைகளின் காட்டில் மனிதர்கள் அட்டகாசம் செய்து வருகிறார்கள். காவிரிக்கரையோரம்… ஒகேனக்கலுக்கு சுற்றுலா என்ற பெயரில் பாட்டில்களை கொண்டு வரும் இந்நாட்டின் குடிமக்கள் ஆற்றின் ஓரத்தில் கண்ணாடி பாட்டில்களை ஓடைத்து விட்டு போன்கின்றனர்..
யானைகள் தண்ணீர் குடிக்க வரும் இடங்களில் இந்த பாட்டில் துகள் அதன் கால்களில் குத்தினால் அவர்களுக்கு என்ன …அதற்குப் பின் சில நாட்களிலேயே அந்த யானை இறந்து விடும்.

காடுகளின் செழுமைக்கு அடையாளம் யானை என்பது அவர்களுக்கு தெரியப் போகிறதா என்ன ..

இந்த மாதம் மார்ச் 21 – உலக காடுகளின் தினம் வருகிறது.

அதையொட்டி தருமபுரி மாவட்ட நண்பர்கள் ஒன்று சேர்ந்து இந்த பகுதியில் உள்ள கண்ணாடி பாட்டில்களை அகற்றுவதற்கு கரம் கோர்க்க கோரிக்கை வைக்கிறோம்.

அது தேர்வு நேரம் என்பதால் மாணவர்களை இதற்கு அழைக்கப் போவதில்லை.
தன்னார்வலர்கள் மற்றும் இயற்கை நேசிப்பவர்கள் மட்டும் வந்தால் போதும்.
காலை 7.30 மணி முதல் காலை 9.30 மணி வரை இரண்டு மணி நேரம் மட்டுமே போதுமானதாக இருக்கும்.

இது குப்பைகளை அகற்றும் நிகழ்சி அல்ல.
மாறாக உலக வன நாளில் நம்மைச் சுற்றியுள்ள காடுகளில் நம் மனிதர்களால் கொட்டப்பட்ட கண்ணாடி பாட்டில்களை மட்டும் அங்கிருந்து அகற்றுவதன் மூலம் சிறந்த விழிப்புணர்வு ஒன்றை அந்த பகுதியில் விதைபதற்கான சிறு முயற்சியே

சுற்றுச்சூழலின் அடையாளம் யானை:
காட்டில், யானைகள் விதைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பரப்புகிறது. இதன்மூலம் மரங்கள், செடி, கொடிகள் அதிக அளவு வளர்ந்து, சோலைக் காடுகள் உருவாகக் காரணமாகிறது. காட்டில் பல்லுயிரினப் பெருக்கத்துக்கும் யானை வழிவகுக்கிறது. யானை கள் பல கி.மீ. தூரம் காட்டில் நடந்து செல்வதால், புதிய வழிப்பாதை கள் காட்டில் உருவாகின்றன. நம் நாட்டில், காடுகளில் யானைகளே சாலைகள் உருவாகக் காரணம். யானை தும்பிக்கை மூலம் பூமிக்கடியில் இருக்கும் ஊற்றுத் தண்ணீரை எளிதில் கண்டுபிடிக்கும்.

யானை மண்ணை கிளறி கண்டுபிடிக்கும் ஊற்று தண்ணீரால் மற்ற விலங்குகளும் பயன்பெறு கின்றன.

யானைகளின் வாழ்விடங்களில் ஏற்படும் நாகரிக வளர்ச்சிப் பணிகள், காடுகளில் வெட்டப்படும் மரங்கள், அதிகரிக்கும் குவாரிகள், வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு ஆகியவை யானைகள் அழிவுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப் படுகின்றன.

யானை வழித்தடம் அழிந்தால்.காடுகள் அழியும்.காடுகள் அழிந்தால் மழை வளம் குறையும்…
ஆரோக்கியமான காடுகளின் அளவுகோல்களில் யானை வழித்தடமும் அடங்கும்…

– வாருங்கள் வனம் காப்போம்..
நம் அடுத்த தலைமுறைக்காக

Exit mobile version